குத்துச்சண்டை போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவி!



சாதனை

ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை எல்லா துறைகளிலும் பெண்கள் பங்களித்து சாதனை படைத்து நிரூபித்துள்ளனர். ஒரு காலத்தில் பெண்களை பள்ளிக்கே அனுப்பாதபோது, விதிகளை மீறி சாதனை படைத்த பெண்களைக் கண்டு ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்று பாரதியார் கவிதை வரிகள் படைத்தார்.

இந்த வரிகளுக்கு இன்றளவும் உயிர் கொடுக்கிறார்கள் சமகாலப் பெண்கள். ஆண்கள் மட்டும்தான் குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற உடல் வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற வளையத்தை உடைத்ததற்கான உதாரணங்களாக மேரி கோம், கர்ணம் மல்லீஸ்வரி போன்றவர்களைச் சொல்லலாம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழ்மைநிலையைக் கடந்து கல்வியிலும், விளையாட்டுகளிலும் சாதனைகள் படைக்கும் பெண்கள் பல நேரங்களில் அங்கீகரிக்கப்படாமல் விடப்படுகின்றனர். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் பெரம்பலூரும் ஒன்று. பெரம்பலூருக்கு உட்பட்ட கிராமம் ‘குன்னம்’.

இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மாணவி மாநில அளவிலான பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். குத்துச்சண்டையில் இவர் வென்ற கோப்பையை இம்மாவட்டம் முழுவதும் உள்ள மாணவிகள் தாங்களே வாங்கியதுபோலப் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரம்யாவிடம் பேசியபோது, “குன்னம் அருகே கரம்பியம் என்ற குக்கிராமம்தான் என் சொந்த ஊர். அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். வானம்பார்த்த பூமி  என்பதால் வருடத்தில் பாதிநாள் மட்டும் பயிர்செய்ய முடியும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். ஆறாம் வகுப்பு படிக்கும்போது குத்துச்சண்டை மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு பெண் சண்டைப் போட்டிக்கு போகிறாள் என்றால் எந்த அம்மா, அப்பாதான் ஏற்றுக்கொள்வார்கள். அதுவும் கிராமத்துப் பெற்றோர்கள் என்றால் சொல்லவா வேணும்! விளக்கம் சொல்லி புரியவைப்பது மிகவும் கடினம். அப்படி இருந்தும் கல்வியறிவு இல்லாத என் அம்மா ‘வசந்தி’
எனது திறமையைப் புரிந்துகொண்டு ஊர் மக்கள் சிலர் பேசிய பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாமல் என்னை ஊக்கப்படுத்தினார். குத்துச்சண்டைக்கு மிக முக்கியமே ஊட்டச்சத்துமிக்க உணவுதான். வறுமைக்கு இடையேயும் தேவையான சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளை என் அம்மா தயார் செய்து தருவார்.” என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

மாணவி ரம்யாவின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் கூறும்போது, “நான் சில ஆண்டுகளாகவே ரம்யாவுக்கு தீவிரப் பயிற்சி அளித்து வருகிறேன். அவரது ஸ்டாமினா லெவல் மிகவும் அதிகம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் இரண்டே பஞ்சிங்கில் போட்டியாளரை நாக்வுட் செய்தார்.

இத்தனைக்கும் நாக்கவுட் ஆன மாணவி பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த, தீவிரமாகப் பயிற்சி எடுத்துத் திறமையாக விளையாடக்கூடியவர். அதன் பிறகு முழு மூச்சாக பயிற்சியளிக்கத் தொடங்கினேன்.

ரம்யா, 17-வயதுக்குட்பட்ட பிரிவிலும் 19-வயதுக்குட்பட்ட பிரிவிலும் கடந்த மூன்றாண்டுகளாக வெள்ளி, வெங்கலப் பதக்கங்களை வென்று வந்துள்ளார். சென்ற 2016-17 கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்கத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க இயலாத சூழ்நிலைதான் செல்வி ரம்யாவின் குடும்பச்சூழ்நிலை. அதன் காரணமாக ரம்யா மனம் தளர்ந்துவிடக்கூடாது என்று, மணிப்பூரில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மேரி கோமின் கதையை எடுத்து கூறி அவரை ஊக்கப்படுத்தினேன். இப்போது பதக்கங்களைக் குவிக்கிறார்” என்று பூரிப்படைகிறார்  செந்தில்குமார்.

தொடர்ந்து பேசிய ரம்யா, “எனது கோச் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் எனது ஆர்வத்தினைப் புரிந்துகொண்டு பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும்
குத்துச்சண்டையில் நுணுக்கமான டெக்னிக்குகளைச் சொல்லித்தந்து என்னை மெருகேற்றி வருகிறார். மேலும் அவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தொடர்ந்து அழைத்துச் செல்கின்றார். தொடர்ந்து நானும் வெற்றி பெற்று வருகிறேன்.

போட்டிகளில் சில நேரம் அதிக ஸ்டாமினாவுடன் எதிர் போட்டியாளர்கள் கடுமையாகத் தாக்குவார்கள். அப்போதெல்லாம் கடுகளவு கூட கோபம் காட்டமாட்டேன். எனக்காக என் அம்மா படும் சிரமங்களையும், என்னைப் பற்றிய எதிர்பார்ப்பையும்  நினைத்துக்கொண்டு அடிக்கும் விசையின் தாக்கத்தை நிதானமாக எதிர்கொள்வேன்.

பொதுவாக யார் நம்மை அடித்தாலும் முதலில் கோபம்தான் வரும். ஆனால், போட்டியின்போது கொஞ்சம்கூட கோபத்துக்கோ பதற்றத்திற்கோ இடம் கொடுக்கக்கூடாது. வெற்றிக்கு தன்னம்பிக்கையும் நிதானமுமே அவசியம். முழு முயற்சி செய்து சில பஞ்ச்களிலேயே எப்படிப்பட்ட எதிராளிகளையும் நாக்கவுட் ஆக்கிவிடலாம்.

இவ்வாண்டும் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் குத்துச்சண்டை போட்டிக்குக் கடுமையான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று  உலக அளவில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது லட்சியம், கனவு, எல்லாமும்.” என்கிறார் ரம்யா.

- திலீபன் புகழ் படங்கள்: எஸ்.சுந்தர்