கிராம வங்கிகளில் அதிகாரி பணி!



வாய்ப்புகள்

14,192 பேருக்கு வாய்ப்பு!


பொதுவாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுப்பதற்கென எப்போதும் ஒரு தனி அமைப்பே இருக்கும். முன்பெல்லாம் அந்த வேலையை பி.எஸ்.ஆர்.பி. என்ற வங்கிப் பணியாளர் தேர்வாணையம் செய்துவந்தது. அதைத்தான் தற்போது வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு செயல்படுத்திவருகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க், புரபஷனரி அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்திவருகிறது.

தற்போது மண்டல கிராமிய வங்கிகளுக்கான (ஆர்.ஆர்.பி.) அலுவலக உதவியாளர், அதிகாரி பணியிடங்களுக்கான சி.டபுள்.இ.-6 தேர்வை ஐ.பீ.பி.எஸ். அறிவித்துள்ளது. இதன் மூலம் 56 கிராமிய வங்கிகளில் ஆபீஸ் அசிஸ்டன்ட், அதிகாரி (ஸ்கேல்-1, 2,3) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 14,192 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிகளுக்கு 7,374 பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஸ்கேல்-1 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்த வராக இருக்க வேண்டும்.ஸ்கேல்-3 அதிகாரி பணி விண்ணப்பதாரர், பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஸ்கேல்-2 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் தேர்ச்சியும், 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. போன்ற எஞ்சினியரிங் படிப்புகள், சி.ஏ., சட்டப் படிப்பு, எம்.பி.ஏ. நிதி, எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்புகள் படித்தவர்களுக்கும், அது தொடர்பான பணி அனுபவம் உள்ளவர்களுக்கும் இந்த அதிகாரி பணியில் வாய்ப்பு உள்ளது.

வயது வரம்பு: ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆபீசர் (ஸ்கேல் 1 ) பணி விண்ணப்பதாரர்கள் 18-30 வயதுடையவர்களாகவும், ஸ்கேல் 2 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஸ்கேல்-3 அதிகாரி பணி விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 1.7.2017 தேதியை அடிப்படையாகக்கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்புச் சலுகையும் அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 1.8.2017.

தேர்வு செய்யும் முறை: பொது ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளாக நடைபெறும்.
மேலும் விரிவான விவரங்களை அறிய www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

- எம்.நாகமணி