உடல்நலக் காப்பீட்டுக்கான முதுநிலைப் பட்டயப்படிப்பு



அட்மிஷன்


பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியக் காப்பீட்டுக் கல்வி நிறுவனம் (Insurance Institute of India) மும்பையில் செயல்பட்டுவருகிறது. இங்கு இரண்டு செமஸ்டர்களைக் கொண்ட ஓர் ஆண்டு கால அளவிலான பகுதிநேர உடல்நலக் காப்பீட்டுக்கான முதுநிலைப் பட்டயப்படிப்பில் (Post Graduate Diploma in Health Insurance  PGDHI) மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: இந்தியக் காப்பீட்டுக் கல்வி நிறுவனம் மும்பைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையுடன் (Department of Economics, University of Mumbai) இணைந்து நடத்தும் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தியக் காப்பீட்டுக் கல்வி நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் காப்பீட்டுக் கல்லூரியின் (College of Insurance) http://www.coi.org.in/web/guest/mumbai-university இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் உரிய இணைப்புகளுடன் “Insurance Institute of India, G- Block, Plot No. C-46, Bandra-Kurla-Complex, Besides American Consulate, Bandra (East), Mumbai  400051” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 25.7.2017.

கல்விக் கட்டணம்: விண்ணப்பதாரரின் கல்வித்திறன், பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இப்படிப்புக்கு 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்படிப்புக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பயிற்சிக் கட்டணம், நூலகக் கட்டணம், பயிற்சிப் பாடங்கள் கட்டணம், தேர்வு மற்றும் மதிப்பெண் சான்றிதழ் கட்டணமாக ரூ.43,550 செலுத்த வேண்டியிருக்கும். இதுதவிர, திருப்பிப் பெறக்கூடிய நூலகக் காப்புக் கட்டணம் (Refundable Library Deposit), முதுநிலைப் பதிவுக் கட்டணம் (P.G. Registration Fees) என ரூ.1825 கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

வகுப்பறை அமர்வு: வகுப்பறை அமர்வு (Class Session) மற்றும் ஆய்வுத்திட்டம் (Research Project) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இப்படிப்புக்கு வகுப்பறை அமர்வுப் பாடங்கள் அனைத்தும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மும்பை, பந்த்ரா  குர்லா கட்டடத்தின் மூன்றாவது வளாகத்தில் நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட மேலும் கூடுதல் தகவல்களை அறிய இந்தியக் காப்பீட்டுக் கல்வி நிறுவனத்தின் https://www.insuranceinstituteofindia.com இணையதளம் அல்லது காப்பீட்டுக் கல்லூரி யின் http://www.coi.org.in இணையதளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம்.  

  - தேனி மு.சுப்பிரமணி