கணிதப் பட்டதாரி மாணவர்களுக்கு உதவித்தொகை!



ஸ்காலர்ஷிப்

தகுதித் தேர்வுக்கு தயாராகுங்க!


பொதுவாக அறிவியல், பொறியியல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாடம் கணிதம். கணிதப் பாடத்தைக் கற்றுத் தர நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

அதேபோல கணிதப் பாடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் அணுசக்தித் துறையினால் தொடங்கப்பட்டதுதான் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேத்மேட்டிக்ஸ். மும்பையில் 1983ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் கணிதம் தொடர்பான ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

நேஷனல் போர்டு ஆஃப் மேத்மேட்டிக்ஸ் கல்வி நிறுவனம் கணிதப் பாடத்தில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கல்வி உதவித் தொகையும் வழங்குகிறது. கணிதத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி. படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: பி.ஏ., பி.எஸ்சி. பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.ஏ., பி.எஸ்சி. இறுதியாண்டுத் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பி.எஸ்சி. ஆனர்ஸ் படிப்பை முடித்தவர்கள் குறைந்தது இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்.சி. ஆனர்ஸ் இறுதியாண்டுத் தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளை முடித்த மாணவர்களும் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி 23 வயதுக்கு மேல் ஆகியிருக்கக்கூடாது. மாணவர்களின் தகுதி கருதி, சில நேரங்களில் இந்த வயது வரம்பில் சலுகை
அளிக்கப்படலாம்.

தேர்வு செய்யும் முறை: இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். ஐந்தாவது மண்டலத்தில் சென்னை, பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களிலும் மற்ற நான்கு மண்டலங்களுக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களிலும் இத்தேர்வை எழுதலாம். தேர்வு செப்டம்பர் 23ம் தேதி நடத்தப்பட உள்ளது.

பொதுவாக அல்ஜிப்ரா, அனாலிசிஸ், ஜியோமெட்ரி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதுதவிர, இளநிலைப் பட்டநிலையில் கணிதப் பாடத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.

இத்தேர்வு இரண்டரை மணிநேரம் நடைபெறக்கூடியது. இதில் குறுகிய விடைகள் அளிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும். இத்தேர்வுக்கான மாதிரி வினாக்களுக்குக் கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதைப் பார்த்து இந்தத் தேர்வு எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

வழங்கப்படும் தொகை: இந்த உதவித்தொகை பெறத் தேர்வு பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். முதல் ஆண்டில் இந்த உதவித்தொகை பெறும் மாணவர்கள் இரண்டாம் ஆண்டிலும் தொடர்ந்து உதவித்தொகை பெற வேண்டும் என்றால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம். அதைப் பொறுத்தே இரண்டாம் ஆண்டிலும் இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கணிதத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி. படிப்பில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு மட்டுமான இந்த உதவித்தொகை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாகவே வழங்கப்படும்.

இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்காலர்ஷிப் விளம்பரப் படிவத்தின் முடிவில் உள்ள மாதிரிப் படிவத்தைப் பூர்த்தி செய்து புகைப்படம் ஒட்டி, சம்பந்தப்பட்ட மண்டலத்தின் ஒருங்கிணைப்பாளர் முகவரிக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் உறையின் மேல் NBHM M.A/Msc Scholarships என்று குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி(ஐந்தாவது மண்டலம்):
Prof. S.Kesavan, Institute of Mathamatical Sciences, CIT Campus, Taramani, Chennai - 600 113
E-mail: kesh@imsc.res.in

மேலும் விவரங்களுக்கு www.nbhm.dae.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- முத்துமணி