எஸ்.எஸ்.பி நடத்தும் குழுத் தேர்வுகள்!



உத்வேகத் தொடர் 30

வேலை வேண்டுமா?


“எஸ்.எஸ்.பி.” (SSB) என அழைக்கப்படும் “சர்வீசஸ் செலக்சன் போர்டு” (Services Selection Board) நடத்தும் தேர்வில் இடம்பெறும் “இண்டர்வியூ” (Interview) எனப்படும் “நேர்முகத்தேர்வு” மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், பொதுவாகப் போட்டித் தேர்வோடு இடம்பெறும் “நேர்முகத் தேர்வு” சுமார் 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள்வரைதான் நடத்தப்படும். ஆனால், “எஸ்.எஸ்.பி. இண்டர்வியூ” நான்கு அல்லது ஐந்து நாட்கள்வரை நடைபெறுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பான பணிக்கான நேர்முகத்தேர்வு இது என்பதால், ஒரு போட்டியாளரைப் பல்வேறு விதமான நேர்முகத் தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

எஸ்.எஸ்.பி. இண்டர்வியூவில் முதல் இரண்டு நாட்கள் என்னென்ன வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றி கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். தேர்வின் முதல்நாளில் “தனிநபர் தகவல் கேள்வித்தாள்” (Personal Information Questionnaire) வழங்கப்பட்டு போட்டியாளர் பற்றிய அனைத்துத் தகவல்களும் பெறப்படுகிறது.

இரண்டாவது நாளில் நடத்தப்படும் “ஸ்கிரீனிங் டெஸ்ட்” (Screening Test) என்னும் தேர்வில் புத்திக்கூர்மைத் தேர்வுகள் (வெர்பல்) (Intelligence Test) (Verbal),  புத்திக்கூர்மைத் தேர்வுகள் (நான்-வெர்பல்) (Intelligence Test) (Non-Verbal), வார்த்தைத் தொடர்புத் தேர்வு (Word Association Test), பொருள் உணர்தல் தேர்வு (Thematic Apperception Test), சூழல் எதிர்விளைவுத் தேர்வு (Situation Reaction Test), தன் மதிப்பீட்டுத் தேர்வு (Self Appraisal Test) ஆகிய தேர்வுகள் இடம்பெறுகிறது.

மூன்றாம் மற்றும் நான்காம் நாட்களில் நடைபெறும் தேர்வுகள் “குழுப் பணி” (Group Task) அல்லது “குழுத் தேர்வு அலுவலர்” - தேர்வுகள் (Group Testing Officer - Tests) என்றும் அழைக்கப்படும். இந்தத் தேர்வை ஜி.டி.ஓ. (G.T.O) என்றும் குறிப்பிடுவார்கள். இந்தத் தேர்வுகளில் மொத்தம் 9 விதமான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அவை -

* குழு விவாதம் (Group Discussion) (GD)
* குழு திட்டமிடல் பயிற்சி (Group Planning Exercise) (G.P.E)
* மேம்பாட்டுக்குழுப் பணி (Progressive Group Task) (P.G.T)
* குழுத் தடை ஓட்டம் (Group Obstacle Race)
* தனிநபர் தடைகள் ஓட்டம் (Individual Obstacle Race)
* விரிவுரை செய்தல் (Lecturette) 
* சரிபாதி குழு பணி (Half Group Task) (H.G.T.)
* ஆணையிடும் பணி (Command Task) (C.T)
* நிறைவுக்குழுப் பணி (Final Group Task) - ஆகியவை ஆகும்.
  இனி - இந்தப் பல்வேறுவிதத் தேர்வுகள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். 
குழு விவாதம் (Group Discussion) [GD]

  போட்டியாளர்களை 8 முதல் 10 நபர்கள்கொண்ட சிறு குழுக்களாகப் பிரித்து, அந்தக் குழுவினருக்குச் சில தலைப்புகள் கொடுத்து, விவாதிக்கும் சூழலை உருவாக்கி, அவர்களை மதிப்பீடு செய்வதைக் ‘குழு விவாதம்’ (Group Discussion) என அழைப்பார்கள். பொதுவாக, இந்தக் குழுக்
களுக்கு இரண்டு தலைப்புகள் (Topics) விவாதம் செய்வதற்காகத் தரப்படும்.

குழுவிலுள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் அந்தத் தலைப்பின் அடிப்படையில் தங்கள் கருத்துகளைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். “குழு விவாதம்” சுமார் 20 நிமிடங்கள் நடைபெறும். முதல் தலைப்பில் விவாதம் நிறைவு பெற்றபின்பு, இரண்டாவது தலைப்பு அந்தக் குழுவினருக்கு வழங்கப்
படும்.

குழு விவாதத்தின்போது போட்டியாளர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? அவர்களது திறன் என்ன? என்பதைப் போட்டி யாளர்களின் ‘செயல்திறன்’ (Performance) மற்றும் ‘செயல்பாடுகள்’ (Behaviour) அடிப்படையில் போட்டியாளர்களை மதிப்பீடு செய்வார்கள். குழு விவாதத்தின்போது - போட்டியாளரின் வெளிப்படுத்தும் திறன் (Expression), விவாதிக்கும் திறன் (Argumentative Capabilities), அறிவின் தன்மை (Depth of Knowledge), நெகிழ்வுத்தன்மை (Flexibility), பங்களிப்பு (Participation) மற்றும் நம்பகத்தன்மை (Authenticity) ஆகிய திறன்களும் மதிப்பீடு செய்யப்படும்.

மேலும், போட்டியாளர் தலைப்பைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு - தெளிவாகவும், செறிவாகவும் விவாதிக்கும் தன்மை கொண்டவராக இருக்கிறாரா? என்பதையும் மதிப்பீடு செய்யும்போது கவனிப்பார்கள். குழு விவாதத்தை ஆரம்பத்தில் தொடங்குகின்ற ஆர்வம் போட்டியாளரிடம் இருக்
கிறதா? என்பதையும் உறுதி செய்வார்கள்.

தன்னம்பிக்கை (Self Confidence), கருத்தை வெளிப்படுத்துவதில் தெளிவு (Clarity in Expression), மற்றவர்களின் கருத்தைப் பாராட்டும் தன்மை, கூர்மையான ஆர்வம் (Keen Interest) போன்ற குணங்களும் போட்டியாளரிடம் இருக்கிறதா? என்பதையும் குழு விவாதத்தின்போது மதிப்பீடு செய்யப்
படும். போட்டியாளரின் சரியான குரல்வளம், குரல் ஒலி, ஆகியவற்றையும் குழு விவாதத்தின்போது கருத்தில் கொள்வார்கள். எனவே, இனிமையான குரலில் தெளிவாகப் பேசப் பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.

குழு விவாதத்தில் வெற்றி பெற விரும்புபவர்கள் முன்கூட்டியே சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து விவாதிக்கும் முறையைத் தெளிவாகக் கற்றுக்கொள்வது சிறந்தது. குறிப்பாக - ஆர்வத்தைத் தூண்டும் தலைப்புகளான - Students and Politics, Democracy, Compulsory Military Training, Evils of Dowry, Status of Indian Woman போன்ற பல தலைப்புகளில் விவாதம் செய்வது எப்படி? என்பது பற்றி முன்கூட்டியே திட்டமிட்டுப் பயிற்சி பெறுவது நல்லது.

குழு விவாதத்தின்போது போட்டியாளரின் தகவல்தொடர்புத் திறன் (Communication Skill), கூர்ந்து கவனிக்கும் திறன் (Listening Skill), தலைமைத் திறன் (Leadership Skill), ஒருங்கிணைக்கும் திறன் (Coordinating Skill),, முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill), ஊக்கப்படுத்தும் திறன் (Motivation Skill) போன்ற பல திறன்களையும் மதிப்பீடு செய்வார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற “எஸ்.எஸ்.பி. இண்டர்வியூ” (SSB Interview) குழு விவாதங்களில் (Group Discussion) இடம்பெற்ற சில தலைப்புகள்:

*Role of Press in Bharat
*Common Entrance Test
*Co-Education in nation
*Population of the country
*World Peace
*Nuclear reactors in our nation
*Who saves nation more Police or Army
*Should Military Training be made Compulsory in our Country
*Is the Public Sector is failure?

 - இவை போன்ற பல தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து போட்டியாளர்கள் நண்பர் களோடு இணைந்து குழு விவாதத்தில் கலந்துகொள்ளப் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குழு திட்டமிடல் பயிற்சி (Group Planning Exercise) [G.P.E]ஒரு குறிப்பிட்ட சூழலில் குழுவாக இணைந்து திட்டமிடுதலைக் “குழு திட்டமிடல் பயிற்சி” எனக் குறிப்பிடுவார்கள். இதனை “இராணுவத் திட்டமிடல் பயிற்சி” (Military Planning Exercise) (M.P.E) என்றும் அழைப்பார்கள்.

தலைவன் இல்லாத ஒரு குழுவை உருவாக்கி, அந்தக் குழுவிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிப்பதற்குச் சரிசமமான வாய்ப்புகளை வழங்கி, குழு முன்னேற்றத்திற்கு உதவும் திட்டத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதைக் “குழு திட்டமிடல் பயிற்சி” (Group Planning Exercise) என்று கூறுவார்கள். இந்தப் பயிற்சியின்போது - ஆறுகள், கிராமங்கள், காடுகள், பாலங்கள், ரயில்வே பாதைகள், மருத்துவமனை, பஸ் நிலையம், ரயில்வே நிலையம் போன்றவை வரையப்பட்ட பெரிய மரப்பலகையிலான வரைபடத்தை (Map) போட்டியாளர்களுக்குக் காட்டுவார்கள்.

பின்னர், குழுத் தேர்வு அலுவலர் (GTO) அந்த வரைபடத்தின் சூழலை விளக்குவார். குறிப்பாக - “தீவிரவாதிகள், போராட்டக்காரர்கள், தீய சக்திகள், அங்குள்ள பிரச்னைகள் போன்றவற்றையும் சுட்டிக்காட்டுவார். பின்னர், இதன் அடிப்படையில் போட்டியாளர்கள் அங்குள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் குழுவாக இணைந்து தானாகவே முன்வந்து எவ்வாறு செயல்படுகிறார்கள்?” என்பதை அறியும் விதத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும்.

  - தொடரும்

நெல்லை கவிநேசன்