எஞ்சினியரிங் கவுன்சிலிங்குக்கு தயாரா?



கவுன்சிலிங் டிப்ஸ்

பேராசிரியர் முனைவர்
ப.வே. நவநீதகிருஷ்ணன்
முன்னாள் இயக்குநர்,
நுழைவுத்தேர்வுகளும் சேர்க்கையும்
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

பொறியியல் படிப்புகளில் (பி.இ. படிப்பு) ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு மூலம் 2017-2018 ஆம் கல்வியாண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 31.5.2017 அன்று நிறைவடைந்தது. இதில் ஒரு லட்சத்து நாற்பத்தியொரு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் ஜூன் 20 அன்றும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ஆம் தேதியன்றும் வெளியிடப்பட உள்ளது. அரசு ஒதுக்கீட்டுப் பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச்சாளரக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 27 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாகப் பிடித்தமான பாடப்பிரிவும் கல்லூரியும், கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?, கலந்தாய்வுக்குக் கொண்டுவர வேண்டியவை எவை? என்பன உள்ளிட்ட பல தகவல்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில பயனுள்ள தகவல்களை இப்போது பார்ப்போம்.

கலந்தாய்வு நடைமுறைகள்

உங்கள் கலந்தாய்வு நாளில் உங்கள் கலந்தாய்வு நேரத்திற்கு 1 முதல் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே கலந்தாய்வு வளாகத்திற்கு வந்துவிடுங்கள். உடன் பெற்றோரையோ, உங்களுக்கு ஆக்கபூர்வமாக ஆலோசனை வழங்கக்கூடிய வேறு ஒருவரையோ அழைத்து வரலாம். (அவர் ஆள்சேர்ப்புத் தரகராக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்)

1. தேர்ந்தெடுப்புகளைச் சுருக்குதல்மேற்சொன்ன திரை அறிவிப்புகளைக் கவனமாகப் பார்த்து, நீங்கள் குறித்து வைத்திருக்கும் கல்லூரிப் பாடப் பிரிவுகளில் இப்போது இடம் இல்லாமல் போனவற்றைக் கழித்துவிடுங்கள். விரைவான, சுருக்கமான, தெளிவான ஒரு தேர்ந்தெடுப்புப் பட்டியல்தான் இருக்கும்.

2. கலந்தாய்வுக் கட்டணம் செலுத்திச் சலான் பெறுதல்கலந்தாய்வு அரங்குக்கு வெளியில் இதற்கென்று இயங்கும் வங்கி முகப்பில் கலந்தாய்வுக் கட்டணமாக SC/அருந்ததியினர்/ST பிரிவினர் ரூ.1000, மற்ற பிரிவினர் ரூ.5000 செலுத்தி, உரிய சலானை ரசீதாகப் பெற்றுப் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.

3. சான்றிதழ் சரிபார்த்தல்

சலான் பெற்றுக்கொண்ட மாணவர்களும் உடன் வந்தவர்களும் வசதியாக அமர வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு உதவியாக அங்கும் திரையில் கல்லூரியில் தற்போதைய இட இருப்பு விவரம் ஓடிக்கொண்டிருக்கும். உடன் அருகிலிருக்கும் அறையில் மாணவர்களின் மூலச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

4. கலந்தாய்வு விளக்கம்

மாணவரும் உடன் வந்த ஒருவருமாக வரிசைகளில் அமர்ந்திருக்க, கலந்தாய்வின் முக்கிய நடைமுறைகள் சுருக்கமாக விவரிக் கப்படும். அப்போதும் திரையில் பார்த்து அந்த நேர இட நிலவரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

5. வருகைப் பதிவு

அடுத்து, கலந்தாய்வு அரங்குக்குள் மாணவர்கள் உடன் வந்தவருடன் தரவரிசைப்படி அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் பதிவேட்டில் தமது பெயருக்கு எதிரில் கையொப்பமிட்டுத் தமது வருகையைப் பதிவு செய்வார்கள்.

6. இறுதித் தேர்வு

ஒவ்வொரு மாணவரும் தனக்குரிய கல்லூரி - பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கும் கட்டம் வந்தாயிற்று. ஒன்றுக்கும் மேற்பட்ட மேசைகளில் ஒவ்வொரு கணினியுடனும் ஒரு கணினி இயக்குநரும் (சில சமயங்களில் ஒரு பல்கலைக்கழக ஆசிரியரும்) இருப்பார்கள். ஒரு மேசைக்கு ஒரு மாணவரும், உடன் வந்தவரும் எனப் பிரித்து அருகிலிருக்கும் நாற்காலிகளில் அமர்த்தப்படுவார்கள். தான் விரும்பும் கல்லூரியிலும் பாடப் பிரிவிலும் தனக்கு இடம் உண்டா என்பதை அம்மாணவர் தெரிந்துகொள்ளலாம்.

அப்படி இல்லாவிட்டால், வேறு தேர்வு செய்துகொள்ளலாம். அங்குள்ளவர்கள், இதைத் தவிர, எந்தக் கல்லூரி / பாடப்பிரிவு நல்லது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கமாட்டார்கள். மாணவர்களின் தேர்வு தெளிவான பிறகு உண்மையான தரவரிசைப்படி அவர்கள் தமது தேர்வை உறுதி செய்துகொள்ளலாம் (அந்த நிலையிலும், தான் தேர்வு செய்த கல்லூரியும் பாடப் பிரிவும், தனக்கில்
லாமல், தனக்கு முந்தைய மாணவனுக்குப் போய்விடலாம்; அப்போது உடனுக்குடன் வேறு கல்லூரியைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்)

7. ஒப்புதல் கடிதம்

இப்படி இறுதித் தேர்வு செய்தபின் அதற்கான தன் ஒப்புதலைத் தெரிவித்து அதற்கான படிவத்தில் மாணவர் கையொப்பமிட்டுத் தெரிவிக்கவேண்டும். மாறாக எந்தக் கல்லூரி யும் பாடப்பிரிவும் தனக்குத் தேவையில்லை என்றால் அதற்கான படிவத்தில் கையொப்பமிட்டுச் சான்றிதழ் பெறவேண்டும் அதைக் காட்டி, தான் கட்டிய ரூ.1000 /ரூ.5000 முன்பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

8. ஒதுக்கீட்டு ஆணை

தமக்கான கல்லூரி - பாடப்பிரிவை வெற்றி கரமாகத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்தவர்கள் அதற்கான ஒதுக்கீட்டு ஆணை (Allotment Order)யை அதற்கான அறைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். கலந்தாய்வு இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கொள்ளலாம்.ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றவர்கள் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அதற்கான கட்டணம் செலுத்தி மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு சான்றிதழும் பெறலாம். சேர்க்கைக்கு இச்சான்றிதழ் தேவைப்படுகிறது.

மேலும் ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் உரிய கட்டணம் செலுத்தி சேர்ந்தாக வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாணவரின் இடத் தேர்வு ரத்தாகிவிடும்.இனி சில அடிக்கடி எழக்கூடிய வினாக்களையும், அவற்றிற்கான விடைகளையும் (FAQs and Replies) பார்ப்போம்.

1. சில கல்லூரிகளில், சில பாடப்பிரிவுகளின் முடிவில் ‘SS’ என்று போடப்பட்டிருப்பது எதைக் குறிக்கிறது?
‘Self Supporting’ என்பதன் சுருக்கமே ‘SS’. அரசின் (பல்கலைக்கழக மான்யக் குழுவின்) உதவியுடன் நடைபெறும் கல்லூரி களில் எல்லாக் கோர்ஸ்களுக்கும் அரசின் பொருளுதவி உண்டு எனப் பொதுவாக எதிர்பார்க்கலாம்.

ஆனாலும், சில கோர்ஸ்கள் அல்லது பாடப்பிரிவுகள், அரசின் உதவி இல்லாமல், மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்திலேயே (அரசின் அனுமதியுடன்) நடத்தப்படுகின்றன. அதைக் குறிக்க ‘SS’ என்ற அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. இக்காரணத்தால் SS பிரிவு இடத்திற்குக் கட்டணம் அதிகமாக இருக்கும் (ஆகவே ஒரு கல்லூரியில் ஒரு பாடப் பிரிவில் SS அல்லாத பிரிவில் இடம் இருக்கும்போது SS பிரிவில் இடம் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம் அல்ல!) அரசின் நிதி உதவி இல்லாமல் இயங்கும் எல்லா சுயநிதிக் கல்லூரிகளிலும் எல்லாக் கோர்ஸுகளுமே SS தான் என்பதால், அக்கல்லூரியின் கோர்ஸ்களுக்கு SS என்று தனியே குறிப்பிட்டுக் காட்டுவதில்லை.

2. ‘சாண்ட்விச்’(sandwich) கோர்ஸ் என்றால் என்ன?
இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் காய்கறித் துணுக்குகளை வைத்து ‘சாண்ட்விச்’தயாரிப்பதுபோல, சில BE/ B.Tech. பாடப் பிரிவுகளில் வழக்கமான வகுப்புகளோடு, இடையில் உரிய தொழிற்கூட (Industrial) பயிற்சியும் வழங்கப்படுகிறது. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரொடக்‌ஷன் ஆகிய பாடப் பிரிவுகளில் இத்தகைய சாண்ட்விச் கோர்ஸ் இருக்கும். கோவைக் கல்லூரி ஒன்றில் நெடுங்காலமாக இருந்துவரும் இந்த கோர்ஸ் இன்று வேறு சில கல்லூரிகளிலும் உள்ளது. இம்மாணவர்களுக்குத் தினமும் முற்பகலில் தொழிற்கூடப் பயிற்சியும், பிற்பகலில் வகுப்புகளும் நடைபெறும்.

கல்விக் காலம் வழக்கமான 4 ஆண்டு களுக்குப் பதில் இதற்கு 5 ஆண்டுகள் வரை இருக்கும். இதைப் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பதால் இதற்கு வரவேற்பு அதிகம்.

3. BE/B.Tech படிப்புகளில் என்ன வித்தியாசம்? எதற்கு மதிப்பு அதிகம்?

அகராதிப் பொருள்படி பார்த்தால் பொறியியலில் (BE) கருத்துகளின் ஆழத்துக்கும், தொழில்நுட்பத்தில்  (B.Tech) கருத்துகளின் அகலத்திற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும். அதாவது, முன்னதில் அறிவியல் கருத்துகளின் நுணுக்கங்கள் அதிகமாகவும், பின்னதில் அவற்றின் பயன்பாடுகள் விரிவாகவும் கற்பிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். BE (CSE), B.Tech (IT) ஆகியவற்றிற்கு இந்த விளக்கம் நன்றாகவே பொருந்துகிறது.

ஆனால், பல  BE/B.Tech பாடப் பிரிவுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் வருவதில்லை. ஒரே பாடப் பிரிவு, பொறியியற் கல்லூரியில் வழங்கப்பட்டால் BE எனவும், IITயில் வழங்கப்பட்டால் B.Tech எனவும் பெயர் பெறுகிறது. எனவே, BE/B.Tech வேறுபாடுகளைக் கவனிக்காமல், பாடப் பிரிவின் தன்மையை மட்டும் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுப்பது நல்லது.

4. FOC என்றால் என்ன?

உச்ச நீதிமன்ற ஆணைப்படி சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு 50%க்கு உள்ளே இருக்கவேண்டும். அதனால்தான் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் OBC: 27%, SC :15%, ST : 7.5% ஆகமொத்த ஒதுக்கீடு 49.5%; மீதிப் பொது இடங்கள் (OC) 50.5%. ஆனால், தமிழ்நாட்டில் நாம் 69% ஒதுக்கீடு செய்கிறோம். அதன்படி, BC (முஸ்லிம் அல்லாதவர்) 26.5%, BC (முஸ்லிம்) 3.5%, MBC 20%, SC (அருந்ததியர் அல்லாதவர்) 15%, SC (அருந்ததியர்) 3%, ST 1%; மீதி (OC) 31%  என இட ஒதுக்கீடு உள்ளது. (‘FOC’ என்பதை ‘Fifty Percent Open Competition’ என்று புரிந்துகொள்ளலாம்.)

தமிழ்நாட்டின் திட்டப்படி, ஒதுக்கீட்டில் வராத பொது இடங்களான 31% பொது இடங்கள், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% இடங்களைவிட 19% குறைவு என்பதால், சாதி ஒதுக்கீடு எதிலும் வராதவர்களின் இடங்கள் இந்த அளவுக்குக் குறைந்துவிட்டதாகச் சிலர் நினைக்கக்கூடும். அந்த நினைப்பின் அடிப்படையில் சர்ச்சைகள் எழுவதும் உண்டு. ஆனால், உண்மை அதுவன்று.

இதை விளங்கிக்கொள்ள, அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கலந்தாய்வின்போது ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட பாடப் பிரிவில் மொத்தம் 100 இடங்கள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இதில் முதல் 31 இடங்கள் சாதியைக் கணக்கில் கொள்ளாமல் நிரப்பப்பட்டுவிடும். 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கைப்படி, அடுத்து இதே கல்லூரியில் இதே பிரிவைத் தேர்வு செய்யும் 32வது மாணவரிலிருந்து, இடம் ஒதுக்கப்பட்ட சாதிப்பிரிவுகளில் (BC, ST) வருபவர்களுக்குத்தான் அந்தந்தப் பிரிவில் இடம் தரப்பட வேண்டும்; மற்றவர்களுக்கு இடம் மறுக்கப்பட வேண்டும்.

 ஆனால், அப்படி இன்றி, வரும் 3-வது மாணவரிலிருந்து 50வது மாணவர் வரை உள்ளவர்களில் இட ஒதுக்கீட்டில் வராத மாணவர்கள் இருந்தால் அவர்கள் சேர்க்கை மறுக்கப்படாமல் பொது (OC) பிரிவிலேயே சேர்க்கப்படுவார்கள். (மற்றவர்கள் உரிய சாதிப் பிரிவிலேயே சேர்க்கப்படுவார்கள்) இந்த ஏற்பாட்டின்படி, உச்சநீதிமன்றம் விதித்த 50% இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வேண்டிய எல்லா மாணவர்களுக்கும் இப்போதும் தங்கு தடையின்றி இடம் கிடைத்துவிடுகிறது.

இப்படிக் கூடுதலாகப் பொது (OC) பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 0 % முதல் 19% வரை இருக்கும். இவர்களுக்காகத் தேவையான கூடுதல் இடங்களை (super Numerary Seats) ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வுக்குப் பிறகு அரசு உருவாக்கும்.

கலந்தாய்வின்போது, ஒவ்வொரு கல்லூரி யிலும் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் முதல் 3% இடங்கள் நிறைந்ததும் திரை அறிவிப்பில் அதற்குரிய இடத்தில் FOC என்ற கட்டத்தில், இந்த வகைக் கூடுதல் இடம் ‘உண்டு’ என்றால் அதைக் குறிக்க ‘Y’ என்ற எழுத்தும், அந்த இடமும் ‘முடிந்துவிட்டது’என்றால் ‘N’ என்ற எழுத்தும் தோன்றும். சாதி வாரி இடஒதுக்கீட்டில் வராத மாணவர்கள் இதைக் கவனித்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இனியும் கலந்தாய்வில் குழப்பமோ கலக்கமோ ஏற்படாது! வெற்றி பெற வாழ்த்துகள்!