தோட்டக்கலையில் பட்டயப்படிப்பு! விண்ணப்பித்து விட்டீர்களா?



அட்மிஷன்   

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் சென்னை, மாதவரத்தில் தோட்டக்கலை மேலாண்மை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு  இரண்டாண்டு கால அளவிலான தோட்டக் கலைப் பட்டயப்படிப்பு (Diploma in Horticulture) வழங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பட்டயப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

கல்வித்தகுதி: +2 வகுப்பில் உயிரியல், தாவரவியல், விலங்கியல், வேளாண்மைக் கோட்பாடு மற்றும் செயல்முறை I மற்றும் செயல்முறை II பாடங்களில் ஒன்றை விருப்பப் பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 1.7.2017 அன்று 25 வயதுக்கு மேற்படாமலும், மற்ற பிரிவினர் 22 வயதுக்கு மேற்படாமலும் இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்பிற்கான அச்சிட்ட விண்ணப்பப் படிவத்தினை சென்னை, மாதவரம், தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் ரூ.200 ரொக்கமாகச் செலுத்தியும், அஞ்சல் வழியில் பெற விரும்புவோர், ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் “Deputy Director of Horticulture, Chennai -51” எனும் பெயரில் சென்னையில் மாற்றிக்கொள்ளக்கூடிய வகையில் ரூ.225க்கான வங்கி வரைவோலையினைப் பெற்று அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் பெற்றுக்கொள்ளக் கடைசி நாள்: 21.6.2017.

நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து “தோட்டக்கலைத் துணை இயக்குநர், தோட்டக்கலை மேலாண்மை நிலையம், அருள் நகர் அருகில், மாதவரம் பால்பண்ணை அஞ்சல், மாதவரம், சென்னை  600051” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 26.6.2017.

மாணவர் சேர்க்கை: விண்ணப்பித்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படும்.இந்தப் பட்டயப்படிப்புகள் குறித்த மேலும் பல தகவல்களை, மேற்காணும் சென்னை, மாதவரத்திலிருக்கும் கல்வி நிலையத்திற்கு நேரில் சென்று அறிந்துகொள்ளலாம் அல்லது 9487376934 எனும் அலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.

- உ.தாமரைச்செல்வி