NEET தேர்வும் நிலைகுலைந்த மாணவர்களும்!



சர்ச்சை

கடந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்ட மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு ஒருவழியாக இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்துமுடிந்தது. இத்தேர்வில் தமிழகத்தில் மட்டும் 88,000 மாணவர்கள் எழுதியுள்ளனர். நீட் தேர்வு எழுதிய கையோடு நல்ல மதிப்பெண் கிடைக்குமா? கிடைக்கும் மதிப்பெண்ணிற்கு நல்ல கல்லூரி கிடைக்குமா? சமூகம் போற்றும் மருத்துவர் ஆவோமா? என்று பேச வேண்டிய மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர்.

தேர்வு விதிமுறைகள் என்ற பெயரில் உள்ளாடையில் மெட்டல் இருந்ததால் அதை கழற்றி விட்டு தேர்வு எழுத சொன்னது, முழு சட்டையை அரை சட்டையாக வெட்டியது, சோதனை என்ற பெயரில் அத்து மீறிய கண்காணிப்பாளர்கள் என அத்தனையும் அரங்கேறி முடிந்தது.
தமிழ்மொழியில் தேர்வு எழுதலாம் எனக் கூறிவிட்டு மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தை விட்டுவிட்டு  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கேள்விகள் இருந்ததுதான் அதிகம்.

மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் நீட் தேர்வு அனுபவம் பற்றிய விவாதம்தான் இப்போது பூதாகரமாகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், ‘தேர்வு விதிமுறைகளை முழுமையாகப் படிக்காமல் சென்றதுதான் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்ததற்கு முக்கிய காரணம்’ என நீட் தேர்வை நடத்திய மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தற்போது  அறிவித்துள்ளது.

“எது நடக்கக்கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே நான் போராடிக்கிட்டு இருந்தனோ அது இன்றைக்கு உண்மையாக நடந்துவிட்டது. அதாவது, தகுதித் தேர்வு எனப்படும் நீட் யாரையும் தகுதிப் படுத்தாது. மாறாகத் தகுதி படைத்தோரை வடிகட்டி வெளியெற்றும். இதுதான்  நீட் தேர்வு. பொதுவாகவே மாணவர்களுக்குத் தன் கனவு, எதிர்காலம் பற்றிய அறிவு உண்டு. அதனால்தான் தன் துறை எதுவென்று தீர்மானித்து மருத்துவத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அவர்களைப் போய் மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவர் ஆகலாம் எனப் பாடத்தை மனப்பாடம் செய்து ஒரு தேர்வு எழுதச் சொல்வது நியாயமா? தமிழகத்தில் தேர்வு எழுதிய பாதி மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். எனவே, அவர்களுக்கு இங்கிலீஷும், ஹிந்தியும் வேப்பங்காய்க் கசப்புதான்.  நீட் தேர்வு எழுதுவதற்காகப் பணம் இல்லாமல்   கோச்சிங் கிளாஸ் செல்ல இயலாத கூலித் தொழிலாளிப் பெற்றொர்களின் பிள்ளைகள்  என்ன செய்வார்கள்? இங்கு நிலைமை இப்படி இருக்க, தேர்வு எழுதச் செல்லும்போது சட்டையை வெட்டியது, உள்ளாடையை கழற்றச் சொன்னது என கண்காணிப்பாளர்களின் அதீத ஆர்வக் கோளாறால் தன்மானத்தை இழந்து தேர்வையே வெறுத்த மனநிலையில்தான் தேர்வு எழுதியுள்ளனர்.

விதிமுறைகள் இருக்கலாம், ஆனால் இவ்வளவு கண்டிப்புடன் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வே தவிர, தேர்வில் நடந்த அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பு ஏற்பது என்பது மட்டும் தீர்வு ஆகாது” என தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கல்வியாளர் பாடம் நாரயணன் கூறும்போது, “நீட் தேர்வு தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் சிறப்பாக நடந்தது. தமிழகத்தில் சிறப்பாக நடைபெறாததற்கு முழுக் காரணமும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களுமே. நீட் தேர்விற்கு விண்ணப்பித்ததிலிருந்தே அதற்கான விதிமுறைகளை ஈ-மெயில் மெஸேஜ், அனுமதி அட்டையில் என மாணவர்களுக்குத் தெரியபடுத்திக்கொண்டே இருந்தது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே தேர்வில் நடந்த அசம்பாவிதங்களுக்குக் காரணம்.

ஆனால், விதிமுறைகள் இவ்வளவு கடுமையாக  இருக்கக் காரணம் என்ன? இது மனித உரிமை மீறும் செயல். மாணவர்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்பட்டனர்  என கொட்டித் தீர்த்துள்ளனர் பெற்றோர்கள். கடந்த ஆண்டு 12ம் வகுப்பு பொது தேர்வுக்கு 8,000 பறக்கும் படை உறுப்பினர்கள் அமர்த்தப்பட்டனர். அப்படி இருந்தும் முறைகேடுகள் நடந்தன. 2015ல் மற்ற மாநிலங்களில் நடந்த நீட் தேர்வின்போது, ஒருசில மாணவர்கள் உள்ளாடை களில் மைக்ரோ சிப் பொருத்தி தேர்வு எழுத வந்திருந்தனர் மேலும் ஆளுக்கு 15 லட்சம் கொடுத்து வினாத்தாளை திருடியும் உள்ளனர்.

 கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் மருத்துவத் துறைக்கு நடத்தபடும் தேசிய தேர்விற்கு இது மாதிரியான முறைகேடுகள் நடந்தால் நாடு என்னவாகும். அதற்குதான் இவ்வளவு கட்டுப்பாடுகள். கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டால் போலி டாக்டர்களும், பணம் இருந்தால் டாக்டராகிடலாம் என்ற எண்ணமும் மேலோங்கும். இந்தக் கட்டுப்பாடுகள் முறைகேடுகளுக்கு இடம் தராதபட்சத்தில், படித்தால்தான் மதிப்பெண் எடுக்க முடியும் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் பதியும். அடுத்த நீட் தேர்விலிருந்து மாணவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள்” என்கிறார்.

 இதை   மறுக்கும் விதமாக பேசிய சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ரவீந்திரநாத் கூறும்போது, “சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் வயது இல்லாததால்தான் பெற்றொர்களுடன் பிள்ளைகள் வருகிறார்கள். படிப்பறிவு இல்லாத அந்தப் பெற்றோர்களிடம் ஆங்கிலத்தில் விதிமுறைகளை எழுதிக் கொடுத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்.மேலும் விதிமுறைகளும் மிருகத்தனமாகவே இருந்தன.

தேசிய அளவிலான மருத்துவப் படிப்புகளுக்கான இத்தேர்வில் தன் பொறுப்பை காட்ட கண்காணிப்பாளர்கள் மாணவர்களிடம் அநாகரிகமாக  செயல்பட்டுள்ளனர். முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே விதிமுறைகள் இவ்வளவு கடுமையாக இருக்கின்றன என காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முன் நடந்த மருத்துவ முதுகலை தேசிய தேர்வில் கூட தாலியை கழற்றச் சொல்லி தேர்வு எழுதச் சொன்ன சம்பவம் நடந்துள்ளது. பண்பாட்டை போற்றும் இந்நாட்டில் இந்த மாதிரியான கொடுமைகள் நடந்து வருகின்றன.

 இதன் அடிப்படைக் காரணம் இது ஒரு சமூக பொருளாதார பிரச்னை என்பதுதான். மற்ற துறைகளில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. அப்படியே வேலை இருந்தாலும் போட்டிகள் அதிகமாக உள்ளது. எனவேதான் ஓரளவு உத்தரவாதம் தரக்கூடிய சில குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெறுவதற்கு காப்பி அடிப்பது, கேள்வித்தாளை திருடுவது போன்ற முறைகேடுகளில் மாணவர்கள் அதிகம் ஈடுபடுகின்றனர்.

இது முறையல்ல என்றாலும், கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இணக்கமான தொடர்பு இல்லாமல்  போனதே இதன் முக்கிய காரணம். ஆகவே, மற்ற துறைகளில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும். இவ்வாறு தான் முறைகேடுகளில் இருந்து தப்பிக்க முடியுமே தவிர, அநாகரிகமாக நடந்துகொண்ட கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது தற்காலிகத் தீர்வுதான்” என முடித்தார் ரவீந்திரநாத்.

தேர்வில் முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பது சரியான காரணமாக சொல்லப்பட்டாலும் அளவுக்கு அதிகமான கடுமையான கட்டுப்பாடுகள் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதையும் தேர்வு வாரியங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

  - குரு