B.E., B.Tech படிக்க விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!



அட்மிஷன்

+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


தமிழகம் முழுவதும் உள்ள எஞ்சினியரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு எந்தவித நுழைவுத்தேர்வும் கிடையாது. கடந்த ஆண்டு போலவே +2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 563 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களை கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்பிவருகிறது.

இந்தாண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 1ம் தேதி முதல் தொடங்கி, மே 31ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இதற்காக மாணவ-மாணவிகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ளலாம். அதன்பிறகு மாணவ-மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்திருந்த விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்யவேண்டும்.

ஆனால், நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க ஜூன் 3ம் தேதி கடைசிநாள். கடந்த ஆண்டு நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500-க்கு டி.டி. எடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது.

ஆனால், இந்த ஆண்டு ஆன்-லைன் மூலமே பணம் செலுத்தவேண்டும். அதாவது, விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இணையதள வங்கிச் சேவை மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களையும் சேர்த்து (நகல்கள்) அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய முகவரி ‘செயலாளர், தமிழ்நாடு எஞ்சினியரிங் அட்மிஷன், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை-600025’. எஞ்சினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ம் தேதியும் வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

+2-ல் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவு மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள்) 45% மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 40% மதிப்பெண்களும் பெற்றால் போதும்.

ஜெனரல் மெஷினிஸ்ட், எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ்ட் அண்ட் அப்ளையன்சஸ், எலெக்ட்ரானிக் எக்யூப்மென்ட்ஸ், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய தொழில் பாடப்பிரிவுகளை(வொகேஷனல்) +2 வகுப்பில் எடுத்துப் படித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். தொழில் பயிற்சி மாணவர்களுக்குத் தனியே கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், அதற்கான படிவம் மற்றும் விளையாட்டில் பெற்றுள்ள சாதனைச் சான்றிதழ்களின் நகல்கள், தமிழ்நாட்டிற்காக விளையாடியவர்கள் அதற்குரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் 12 இடங்கள் உள்பட மொத்தம் 500 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்குத் தனிக் கவுன்சலிங் நடைபெறும். சிறப்பு ஒதுக்கீட்டுக்கான மற்ற பிரிவுகளின் கீழ் உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் அதற்குரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் போன்று சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் இடம்பெற விரும்பும் மாணவர்களும் அதற்கான சான்றிதழ்களை உரிய படிவத்தில் வாங்கித் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர் என்பதற்கான சான்றிதழை அனுப்பினால்தான் கல்விக்கட்டண சலுகையைப் பெறமுடியும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 8.9.10.11.12 ஆகிய வகுப்புகளை தமிழ்நாட்டில் படித்திருந்தால் அந்த மாணவர்கள் தமிழக மாணவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்கள் இருப்பிடச் சான்றிதழ் என்று சொல்லப்படும் நேட்டிவிட்டி சர்டிபிகேட் தேவையில்லை. மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் 8,9,10,11,12 ஆகிய வகுப்புகளில் ஏதாவது ஒரு வகுப்பையோ அல்லது அனைத்து வகுப்புகளையுமோ வெளிமாநிலத்தில் படித்திருந்தால் இருப்பிடச் சான்றிதழ் தமிழ்நாட்டில் உள்ள வட்டாட்சியரிடம் பெற்று அதன் நகலை விண்ணப்பத்துடன் அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் அந்த மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பணிபுரிந்து வந்திருந்தால், அவர்களின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். இதேபோல, எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழகத்தில் பணிபுரியும் பொதுத்துறை ஊழியர்களின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். வேலை பார்க்கும் நிறுவனத்தில் சான்றிதழ் பெற்று அதனை விண்ணப்பத்துடன் அனுப்பிவைக்க வேண்டும்.

தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகில இந்திய சர்வீஸ் அதிகாரிகள் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம்.பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டில் 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்திருந்தால், அந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை.

பிற மாநிலங்களில் எட்டாம் வகுப்பிலிருந்து +2 வரை படித்திருந்தாலும் அந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் இருப்பிடச் சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் தலைமை நிலையத் தாசில்தாரிடம் அடையாளச் சான்றிதழ் பெற வேண்டும். அகதிகள் முகாமில் பதிவு செய்யவில்லை என்றால் பாஸ்போர்ட் விசா, போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 8ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்துள்ள விவரம் குறித்தும் குறிப்பிட வேண்டும்.இப்படித் தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க மாணவர்கள் முழுக் கவனம் செலுத்துவதோடு ஆன்லைனில் உள்ள விவரங்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

- முத்துமணி