மலரும் நினைவுகளோடு மலர்ந்த மனிதநேயம்!



சங்கமம்

நாளுக்கு நாள் அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ந்தாலும் கூட உறவுகள், நட்புகளுக்கு இடையேயான பந்தங்கள் மட்டும் நாட்கள் செல்லச் செல்ல பட்டும் படாமலும் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு கடிதத்துக்கு காத்திருக்கும்போது இருந்த அன்பு இன்று தினம் தினம் வீடியோ சாட்டிங்கில் அங்கலாய்த்துக்கொண்டாலும் முன்பிருந்த பாசப்பிணைப்பு இப்போது இல்லை என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், எத்தனை காலங்கள் கடந்தாலும் கல்லூரி நாட்களையும் அதன் பாசப் பிணைப்பையும் எந்த அறிவியல் முன்னேற்றமும் உடைத்துவிடமுடியாது. கல்லூரிக் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்களும், நண்பர்களுடன் சினிமா தொடங்கி அரசியல் வரையிலான விவாதங்களும், கல்லூரி விழாக்களில் பங்கேற்ற நினைவுகளும் காலத்தால் அழிக்க முடியாதது என நிரூபித்துள்ளனர் மதுரை சவுராஷ்டிரா கல்லூரி மாணவர்கள்.
 
கடந்த ஏப்ரல் 9ம் தேதி 1989 - 92 வரை அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களின் வெள்ளிவிழா ஆண்டினைச் சிறப்பிக்கும் விதமாக கல்லூரியின் முன்னாள் மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும் சந்தித்து பல நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர். உடனே உங்கள் மனதில், ‘இதில் என்ன புதிதாக இருக்கிறது. பல கல்லூரிகள் இதை ஏற்கெனவே செய்திருக்கிறார்களே!’ என்று நினைப்பது புரிகிறது.

இப்படிப் பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம், ஆனால் சவுராஷ்டிரா கல்லூரியில் 89-92 இந்த நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படித்த அத்தனை மாணவ மாணவிகளும் ஒன்றிணைந்ததோடு ஒரு சில சமூக நலன் சார்ந்த தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் பிரக்னா தேவி பேசுகையில் “நாங்கள் ஒரு குழுவாக இணைந்து ‘பொற்கூட்டினைக் குறியிட்டோம் வெள்ளிச் சிறகினால்’ எனும் தாரக மந்திரத்தைக் கொண்டு, எங்கள் பேராசிரியர்களையும் சக மாணவ மாணவிகளையும் சந்திக்க வேண்டி பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டோம்.

இதற்காக முகநூல், மொபைல் வாட்ஸ்-அப் குரூப், சமூகவலைத்தளங்கள், அலுவலக ஐ.டி.க்கள் ஆகியவற்றை எல்லாம் தேடிப்பிடித்து தொடர்புகொண்டோம். ஒருசிலர் முகவரிகளை நேரில் சென்று அலைந்து தேடலில் இறங்கி அத்தனை மாணவ மாணவிகளையும் சேர்த்துள்ளோம்.” என்று ஆனந்தப் புன்னகையோடு தெரிவித்தார்.

“இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக முன்னாள் முதல்வர் ஜி.பி. பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றப் பேராசிரியர்கள் சந்திரமோகன், எம். ராமசுப்பிரமணியன், முஸ்தபா ஆகியோர் இணைந்து விழாவைத் தொடங்கிவைக்க ஒவ்வொருவராக மேடை ஏறித் தங்களது இப்போதைய வாழ்க்கை நிலை, பணி விவரங்கள் பற்றியும் கல்லூரி நாட்களில் நடந்த மறக்கமுடியாத நிகழ்ச்சிகளையும் பகிர்ந்துகொண்டனர். பல பசுமையான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பேசி மகிழ்ச்சியடைந்தனர்.

 இது வெறும் மாணவர்கள் சந்திப்பாக இல்லாமல் சமூகத்தில் நலிந்த மக்கள் மற்றும் தற்போது சவுராஷ்ட்ரா கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்யும் சமூகநலத்திட்ட விழாவாகச் செயல்படுத்தப் பல திட்டங்களை முடிவுசெய்து அனைவரின் பங்களிப்பையும் ஒப்புதலையும் பெற்றோம். சூழ்நிலை காரணமாக வரமுடியாமல் போன வெளிநாடுகளில் உள்ள சில மாணவர்களும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் எங்களுடன் கலந்துகொண்டது மற்றுமொரு சிறப்பு” என்றார் பிரக்னா.

மேலும் அவர், “இனி ஒவ்வொரு வருடமும் இங்குப் பயின்றுவிட்டு வெளியில் சென்ற மாணவர்களை ஒன்றிணைத்து அப்போது பயின்று வரும் மாணவர்களுடன் இணைந்து பல சமூக நலன் சார்ந்த பணிகளையும் மேற்கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளோம்” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

வெறும் மாணவர்கள் சந்திப்பாக இல்லாமல் சமூகத்தில் நலிந்த மக்கள் மற்றும் தற்போது சவுராஷ்ட்ரா கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்யும் சமூகநலத்திட்ட விழாவாக செயல்படுத்த பல திட்டங்களை முடிவுசெய்து அனைவரின் பங்களிப்பையும் ஒப்புதலையும் பெற்றோம்

 - ஷாலினி நியூட்டன்