அதிக கட்டுப்பாடுகள் குழந்தைகள் மனதை உறுதியற்றதாக்கும்!



உளவியல் தொடர் 19

உடல்... மனம்... ஈகோ!


ஈகோவால் சூழப்பட்டவன் மனம், புகைப்படத்தைப் பார்க்காமல் அதன் சட்டத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் - ஜெ.பெட்டிட் சென்  
-ஈகோ மொழி

மனிதர்களுக்கு எல்லா வயதிலும் அங்கீகாரமும் பாராட்டுக்களும்தான் உற்சாகத்தை தரக்கூடியதாகவே இருக்கிறது. அந்த உற்சாகம்தான் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சாதித்து ஜெயிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தருகிறது. இது வளரும் குழந்தைகள் விஷயத்தில் ரொம்பவே பொருந்தும்.  சிறியவர்கள் மீது பெரியவர்கள் காட்டும் வளர்ப்பு முறையிலான வன்முறையால் ஈகோ எடுக்கும் அடுத்த நிலையைப் பார்க்கலாம்.
நிலை 2: அடக்கப்பட்ட ஈகோநிலை அருணின் பெற்றோர் பெரிய லட்சியவாதிகள்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள். அருணின் பெற்றோருக்கு அவனை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்பது கனவு. அதனாலேயே தங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள அருணிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள். அதற்காக அருணிற்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.

சிறு வயதாக இருந்தபோதே, அருணிற்கு அவன் பெற்றார் தினமும் ‘செய்யவேண்டியவை- செய்யக்கூடாதவை (Dos and Don’ts) என்ற ஒரு பட்டியலைத் தயாரித்துத் தந்தார்கள். அருண் எல்லா நேரமும் எல்லோரிடமும் பேசக்கூடாது என்பது செய்யக்கூடாதவை பட்டியலிலும் இருந்தது. ‘எல்லோருடனும் கலகலப்பாகப் பழகவேண்டும்’ என்பது செய்யவேண்டியவை பட்டியலிலும் இருந்தது.

இது அருண் மனதில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அருணின் பழக்கத்தைப் பார்த்து பலரும் அவனையும், தங்களையும் பாராட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பே பெற்றோர்களுக்கு மேலோங்கியிருந்தது.பெற்றோர்களின் அந்த அதீத எதிர்பார்ப்பு அருணிற்கு மிகப்பெரிய அளவில் மன அழுத்தத்தைத் தரத் தொடங்கியது. அந்த அழுத்தம் அவனது தன்னம்பிக்கையை அடியோடு குலைப்பதாக இருந்ததோடு, அவனை தோல்வியைக் கண்டு அஞ்சக்
கூடியவனாகவும், அது பற்றி பேசுபவர்களைச் சந்திப்பதை வெறுப்பவனாகவும் மாற்றியது. அருணால் எதையும் வெளிப்படையாகப் பேசவும் முடியவில்லை, பேசாமல் இருக்கவும் முடியவில்லை.

அழுத்தத்தினால் உண்டான தன்னம்பிக்கை குறைவால், அருண் அடிக்கடி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது தனியே போய்விடுவான். (அதிகமாய் பாத்ரூமிலேயே இருப்பான்) அப்படி தனித்து இருப்பது அவனுக்கு விருப்பமான ஒன்றாக இருந்து. அதுவே அவனுள் ஒரு தாழ்வு
மனப்பான்மையை ஏற்படுத்தத் தொடங்கியது,  அவனை உறுதியற்ற ஆளுமையாக, ஒரு கோழையாக (unassertive personality) மாற்றியது.

குழந்தைகளை வளர்க்கும்போது அவர்கள் எந்த ஒரு பழக்கத்திற்கும் அதிகமாக  ஆளாக்காமல் இருக்கவேண்டும். அப்படிச் செய்தால் குழந்தைகளின் உணர்ச்சிகள் அடக்கப்பட்ட ‘ஈகோநிலை’ உருவாகக் காரணமாகிவிடும். குழந்தைகளிடத்தில் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, சுதந்திரத்தை பறிக்கும் கட்டுப்பாடுகள் எல்லாம் அவர்களின் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடுகளைத் தடுத்து, உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொள்பவர்களாகவும், மனதளவில் உறுதியற்றவர்களாகவும் மாற்றிவிடும்.

இங்கு அருண் விஷயத்தில், அவனது பெற்றோர்கள் தங்களது எதிர்பார்ப்பை அருண் மீது திணித்துக்கொண்டே இருந்தபோதும், அவனுக்கு (அவ்வப்போது) சிறிய அளவில் வடிகால் வைத்திருந்ததால், அவனது ஈகோநிலை மிதமிஞ்சிய அளவிற்கு அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை. அதே
நேரம் அருணின் ஈகோநிலை அவனது சின்னச்சின்ன ஆசாபாசங்களை ‘அடக்கிய நிலை’யில் வைத்திருந்ததால் எதையும் நினைத்த நேரத்தில் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்த முடியாததாகவே இருந்தது.

பெரிய அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் துடித்திருக்கும்போது, அதைச் சிறிய அளவில் வெளிப்படுத்த அனுமதிப்பதும் ஈகோநிலையை அடக்கிய நிலையிலேயே வைத்திருக்க வழிவகுக்கிறது.இப்படி அடக்கப்பட்ட உணர்சிகளே ‘நான் மதிப்பற்றவன், நீ மதிப்பானவன்’  என்ற ஈகோநிலைக்குத் தள்ளுகிறது. (இதுகுறித்தும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம்). இவர்கள் உறுதியற்ற மனம் கொண்டவர்களாக இருப்பார்களே தவிர, ஒருபோதும் ஆவேசமானவர்களாக மாறமாட்டார்கள்.

இந்த ஈகோநிலை மனத்தளவில் அவர்களைப் பலவீனப்படுத்துவதால், ஒரு சாதகமற்ற சூழ்நிலையைச் சந்திக்கும்போது அதை சந்திக்கப் பயந்து ஓடிவிடச் செய்கிறது (FLEE). பிரச்னையை சந்திக்கப் பயந்து ஓடுவது ஒருவிதமான விடுதலை எண்ணத்தை தருவதாலேயே அப்படிச் செய்கிறார்கள். குறிப்பாகச் சட்டத்திற்கு புறம்பாக ஒரு தவறைச் செய்யும் குற்றவாளிகள் போலீஸிற்கு பயந்து ஓடி ஒளிந்துகொள்வதும் இதன் காரணமாகத்தான். இந்த நிலை தொடர, அது தீவிரமான மனஅழுத்தம் ஏற்படுத்துகிறது.

அதுவே முற்றி உடல், மனம் இரண்டிற்குமாக நோய் ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது.அழுத்தப்பட்ட ஈகோநிலை கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களால் சூழலை சமாளிக்கக்கூடிய வல்லமை நிறைந்த ஆயுதங்களான அனுபவம், மனஉறுதி, பக்குவம், மனோதிடம், உடல்பலம், சகிப்புத்தன்மை போன்றவை முழு அளவில் இல்லாவிட்டாலும் சிறிது அளவாவது பெற்றிருப்பார்கள். அதுவே அவர்களுக்கு அவ்வப்போது சிறு சிறு சந்தோஷத்தை வழங்கக்கூடியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் தாங்கள் விரும்பத் தகுதியற்றவர்கள் என்றும், அதுவே மற்ற அனைவரும் விரும்பக்கூடியவர்கள் என்றும் எண்ணிக்கொள்வார்கள்.

அடக்கப்பட்ட ஈகோநிலை கொண்டவர்கள் தங்கள் உணர்ச்சிகளைச் சொற்களாலும், செயலாலும் வெளிப்படுத்த விருப்பமில்லாதவர்களாக இருப்பார்கள். அதேநேரம் மற்றவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதிப்பார்கள். மற்றவர் சொல்வதை அமைதியாக கேட்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

அடக்கப்பட்ட ஈகோநிலையால் போதுமான உந்துசக்தி உடலிற்கும், மனதிற்கும் கிடைக்காமல் போவதால், உடல்ரீதியான உழைப்பிற்கும், மனரீதியானச் செயல்பாடுகளுக்கும் தகுதியற்றவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்களால் தங்கள் வாழ்க்கைக்காக செய்யும் எந்த ஒரு வேலையிலும், வாழ்க்கைப் போக்கிலும் சிறந்த முறையில் பிரகாசிக்க முடியாமல் செய்கிறது.

மனதில் தன்னம்பிக்கையை உயர்த்துவதற்கான உந்துசக்தியை அடக்கப்பட்ட ஈகோநிலை கிடைக்காமல் செய்வதே, மனவளர்ச்சி சரிவதற்கான முக்கியக் காரணமாக இருக்கிறது. அதோடு மனித மனதின் ஆற்றல் எத்தனை ‘வல்லமை’ நிறைந்தது என்ற மதிப்பையும் தெரிந்துகொள்ள இயலாமல் போகிறது.
அடக்கிய நிலையால் வடிவமெடுக்கும் ஆளுமைக்குக் காரணமாகும், இந்த ஈகோ நிலையை ஆரம்பத்திலேயே குழந்தைகளிடம் கவனித்து சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு சிறிய சொல் போதுமானது. அந்தச் சொல்…. ‘பேசு….’ என்பதுதான். ‘பேசு’ என்பது ஈகோநிலை பாதிப்பை எப்படிச் சரி செய்யும் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

குரு சிஷ்யன் கதை

பொன்னிறக் காற்று எங்கே?
நதிக்கரையில் குளித்துவிட்டு ஆசிரமம் நோக்கி நடந்துவந்த குருவிடம், “மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும் குருவே?” என்று கேட்டான் சிஷ்யன்.சிஷ்யனின் சந்தேகத்தைக் கேட்ட குரு, “நீ ஒரு தோட்டம் போட்டு, மரம் செடி கொடி வைத்து நீர் பாய்ச்சு, பிறகு அந்த மரங்களைப் பராமரித்து வா.

இயற்கை எழில் சூழ்ந்த காட்சி உன் மனதைத் தூய்மைப்படுத்தும்” என்றார்.சிஷ்யன் உடனே தோட்டம் அமைப்பதற்கான வேலையில் இறங்கினான். முழு மூச்சாக செயல்பட்டு, பெரும்பாடு பட்டு, அற்புதமான ஒரு தோட்டத்தை உருவாக்கினான். வெகு சீக்கிரம் அந்தத் தோட்டம் ஏராளமான மரங்களுடன் பச்சைப்பசேல் என்று காட்சியளித்தது.

அங்கிருந்த காய்ந்த சருகுகள், குச்சிகள், மரப்பட்டைகள் முதலியவற்றைத் தினமும் அப்புறப் படுத்தினான். அந்த இடம் சுத்தமாகக் காட்சியளித்தது. அதுவே சிஷ்யனின் மனதிற்கு இதம் அளிப்பதாக இருந்தது. சிஷ்யன் ஒரு நாள் தன் தோட்டத்தைப் பார்வையிட குருவை அழைத்தான். தோட்டத்தை வந்து பார்வையிட்ட குரு, எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தார். சிஷ்யன் அவரிடம், “தோட்டம் எப்படி இருக்கு குருவே?” என்றான்.
உடனே குரு “எல்லாம் சரிதான் தூய்மையான தங்கக் காற்றை காணவில்லையே…?” என்றார்.

சிஷ்யன் அவர் சொன்னது புரியாமல் பார்த்தான். குரு எதையோ தேடுவதுபோல் அங்கும் இங்கும் தேடினார். பிறகு ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருந்த காய்ந்த சருகுகளையும், பழுத்த இலைகளையும் அள்ளிவந்து தோட்டத்தில கொட்டினார். அப்போது வீசிய காற்றில் மஞ்சள் நிறத்தில் இருந்த பழுத்த இலைகள் தோட்டமெங்கும் பறந்தது.

அதைக் கண்ட குரு,“இதுதானப்பா நான் கேட்ட பொன்னிறக் காற்று, இப்போதுதான் இந்தத் தோட்டம் உயிரோட்டமானதாகவே இருக்கிறது” என்றார்.
ஒன்றும் புரியாதவனாக சிஷ்யன் குருவையே பார்த்துக் கொண்டிருந்தான்.குரு மேலும் விளக்கினார், “நாள் என்பது பகல் மட்டுமல்ல, இரவும் சேர்ந்ததுதான். மரணம் என்பது வாழ்க்கையின் இறுதி அல்ல, அதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கம்தான்.

அதுபோலவே சருகுகளும், பழுத்த இலைகளும் சேர்ந்ததுதான் தோட்டம். அழுக்குகளை அப்புறப்படுத்துவதால் ஒருபோதும் மனதைத் தூய்மைப் படுத்திவிட முடியாது. மனம் என்பது தூய்மையும், அழுக்கும் இணைந்ததுதான். மனதைத் தூய்மைபடுத்த அழுக்குகளை ஒதுக்க நினைக்காதே, அவற்றைக் கடந்து செல்ல நினை போதும்” என்றார்.“இப்போது உங்கள் கருத்து தெளிவாகப் புரிந்தது குருவே” என்றான் சிஷ்யன்.

- தொடரும்

நிவாஸ் பிரபு