பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பு!



அட்மிஷன்

தேசியச் சட்டப் பள்ளிக்கான இந்தியப் பல்கலைக்கழகம் (National Law School of India University (NLSIU), Bengaluru) பெங்களூருவில் செயல்பட்டுவருகிறது. உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக இருந்துவரும் இந்தியாவில் பொதுக்கொள்கை குறித்த படிப்பின் அவசியத்தைக் கருதி பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பு (Master Programme in Public Policy  MPP) தொடங்கப்பட்டது. தற்போது இந்த முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி

இரண்டாண்டு கால அளவிலான தங்குமிடப் படிப்பான இந்த முதுநிலைப் பட்டப்படிப்பில் மொத்தம் 50 இடங்கள் இருக்கின்றன. இதில் சேர அரசு அங்கீகாரம் பெற்ற ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்புவோர் http://mpp.nls.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், மேற்காணும் இணையதளத்திலிருக்கும் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து நிரப்பி, அத்துடன் விண்ணப்பக் கட்டணத்தை ”Registrar, National Law School of India University” எனும் பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்கதாக டிடி எடுத்து, இணைத்து “Admission Coordinator, Master of Public Policy, National Law School of India University, Nagarbhavi, Bangalore 560072” எனும் முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்கவும், அஞ்சல் வழியிலான விண்ணப்பம் மேற்காணும் முகவரிக்குச் சென்றடையவும் வேண்டிய கடைசி நாள்: 18.4.2017.

திறனாய்வுத் தேர்வு

இப்படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்குப் பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நான்கு இடங்களில் 30.4.2017 அன்று ‘கொள்கைத் திறனாய்வுத் தேர்வு’ (Public Policy Test) ஒன்று நடத்தப்படும். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டு தகுதியுடையவர்கள் பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்களுக்குப் பெங்களூருவில் 26.5.2017 மற்றும் 27.5.2017 ஆகிய நாட்களில் நேர்க்காணல் நடத்தப்படும்.

இப்படிப்பிற்கான மொத்தமுள்ள 50 இடங்களில், எஸ்.சி. 15%, எஸ்.டி. 7.5%, மாற்றுத்திறனாளிகள் 3% எனும் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி தகுதியுடைய மாணவர்களின் தேர்வுப் பட்டியல் 1.6.2017 அன்று வெளியிடப் படும். மேலும் தகவல்களைப் பெற, மேற்காணும் இணையதளத்தினைப் பார்வையிடலாம் அல்லது ‘‘Admission Coordinator, Master of Public Policy, National Law School of India University, Nagarbhavi, Bangalore 560072” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது 080  23213531 எனும் தொலைபேசி எண்ணிலோ அல்லது 09986098655 எனும் அலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

- உ.தாமரைச்செல்வி