விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம்! முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகள்!



நுழைவுத்தேர்வு

இந்திய அரசின் விண்வெளித் துறையின்கீழ் (Department of Space) செயல்பட்டுவரும் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Space Science and Technology) கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ளது. இதில் இடம்பெற்றிருக்கும் முதுநிலைத் தொழில்நுட்பம் (M.Tech) முதுநிலை அறிவியல் (M.S) பட்டப்படிப்புகளுக்கும், முனைவர் பட்ட ஆய்வுப் (Ph.D) படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

முதுநிலைப் படிப்புகள்: இந்நிறுவனத்தின் Aerospace Engineering-ல் Thermal and Propulsion, Aerodynamics and Flight Mechanics, Structures and Design எனும் மூன்று பிரிவுகளும், Avionics -ல் RF and Microwave Engineering, Digital Signal Processing, VLSI and Microsystems, Control Systems, Power Electronics எனும் ஐந்து பிரிவுகளும், Mathematics-ல்  Machine Learning and Computing எனும் ஒரு பிரிவும், Chemistry-ல் Materials Science and Technology எனும் ஒரு பிரிவும், Physics-ல் Optical Engineering, Solid State Technology எனும் இரண்டு பிரிவுகளிலும், Earth and Space Sciences-ல் Earth System Science, Geoinformatics எனும் இரண்டு பிரிவுகளிலும் என மொத்தம் ஏழு துறைகளில் 14 பிரிவுகளில் முதுநிலைத் தொழில்நுட்பப் (M.Tech) படிப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, Earth and Space Sciences-ல் Astronomy and Astrophysics எனும் பிரிவில் முதுநிலை அறிவியல் (M.S) படிப்பும் இடம்பெற்றுள்ளது.

முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள்: இந்நிறுவனத்தின் Aerospace Engineering-ல் Machining and Precision Manufacturing, Heat Transfer மற்றும் Nonlinear Finite Element Formulations எனும் மூன்று வகையான ஆய்வுக் களங்களிலும், Avionics-ல் Power Electronics எனும் ஆய்வுக் களத்திலும்,  Earth and Space Sciences-ல் Astronomy and Astrophysics, Atmospheric Science எனும் இரண்டு வகையான ஆய்வுக் களங்களிலும், Mathematics-ல் Mathematical Elasticity எனும் ஆய்வுக் களத்திலும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள் இடம்பெற்றுள்ளன. DST, CSIR, MeiTY, INAE, NBHM, UGC போன்ற இந்திய அரசின் முனைவர் பட்ட ஆய்வுக்கான நிதியுதவியினைப் பெறக்கூடிய வாய்ப்புடையவர்களுக்குப் பிற துறைகளிலும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள் அளிக்கப்பட இருக்கின்றன.

இரு பிரிவுகள்: மேற்காணும் M.Tech, Ph.D படிப்புகளில் Regular, Sponsored எனும் இரண்டு பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. Sponsored பிரிவில் இந்திய அரசின் விண்வெளித் துறை (DOS) அல்லது இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (ISRO) ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். M.Tech Regular பிரிவில் ஒவ்வொரு படிப்பிலும் 6 இடங்கள் வீதம் மொத்தம் 90 இடங்களும், M.Tech Sponsored பிரிவில் ஒவ்வொரு படிப்பிலும் 4 இடங்கள் வீதம் 60 இடங்களும் இருக்கின்றன.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல்
இளநிலைத் தொழில்நுட்பம் (B.Tech) / பொறியியல் (B.E) / முதுநிலை அறிவியல் (M.Sc) அல்லது (M.S) பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு படிப்பிற்கும் தகுதியுடைய பட்டப்படிப்பு குறித்த கூடுதல் தகவல்களை இந்நிறுவனத்தின் அறிவிப்புச் (Notification) செய்தியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Regular பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட பிரிவில் பொறியியல் தகுதித் தேர்வில் (GATE) தகுதி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்  Regular பிரிவினர் 30.4.2017 அன்று 32 வயதிற்குள்ளும், Sponored பிரிவினர் 45 வயதிற்குள்ளும் இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்திய அரசின் விதிமுறைப்படி வயது தளர்வு உண்டு.

முனைவர் பட்ட ஆய்வுப்பட்டப் படிப்புகளுக்குத் தொடர்புடைய பாடங்களில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் முதுநிலைப் பட்டப்படிப்பில் (M.Tech / M.E / M.Sc / M.S) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Regular பிரிவினர் UGC/CSIR NET-JRF/JEST போன்ற தகுதித் தேர்வுகளில் தகுதி அல்லது பொறியியல் தகுதித் தேர்வு (GATE) தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் Regular பிரிவினர் 30.4.2017 அன்று 35 வயதிற்குள்ளும், பரிந்துரைக்கப்பட்ட பிரிவினர் 48 வயதிற்குள்ளும் இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்திய அரசின் விதிமுறைப்படி வயதுத் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகளுக்கு Regular பிரிவில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்நிறுவனத்தின் http://admission.iist.ac.in எனும் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். முதுநிலைப் பட்டப்படிப்புகளில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தில் விரும்பும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை வரிசைப்படுத்திக் கொடுக்கவேண்டும்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் துறை (Department) ஒன்றுக்கு ரூ.600 எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பெண்கள் ரூ.300 என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட துறைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு துறைக்கும் மேற்காணும் கட்டணத்தினைக் கூடுதலாகச் செலுத்திட வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை “SBI Collect” வசதியின் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.4.2017. விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 3.5.2017.

Sponsored பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் உரிய பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விளக்கக் குறிப்புகளை மேற்காணும் இணையதளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முறை: முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிலிருந்து எழுத்துத் தேர்வு/ நேர்காணலுக்குத் தகுதியுடையவர்கள் பட்டியல் 17.5.2017 அன்று வெளியிடப்படும். அதன் பிறகு 5.6.2017 முதல் 9.6.2017 வரை எழுத்துத் தேர்வு/ நேர்காணல் நடத்தப்படும்.

அதன் பின்னர் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் பட்டியல் 16.6.2017 அன்று வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் 3.7.2017ஆம் தேதிக்குள் கல்விக் கட்டணங்களைச் செலுத்தித் தங்களது சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்படி உறுதிப்படுத்தாத நிலையில் ஏற்படும் காலியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் இரண்டாவது பட்டியல் 4.7.2017 அன்று வெளியிடப்படும்.

இரண்டாவது பட்டியலுக்குரியவர்கள் 11.7.2017ஆம் தேதிக்குள் கல்விக் கட்டணங்களைச் செலுத்திச் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். இதிலும் காலியிடங்கள் ஏற்படும் நிலையில் 12.7.2017 அன்று மூன்றாவது பட்டியல் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கிடைக்கப் பெற்றவர்களில் பொறியியல் படிப்புகளுக்கு 17.7.2017ஆம் தேதியிலும், அறிவியல் படிப்புக்கு 18.7.2017ஆம் தேதியிலும் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து மாணவர் சேர்க்கையினை உறுதி செய்திட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 19.7.2017 முதல் 21.7.2017 வரையிலான மூன்று நாட்கள் ஒருங்கிணைப்பு வகுப்புகள் நடைபெறும். அதன் பிறகு 24.7.2017 முதல் வகுப்புகள் தொடங்கும்.

முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிலிருந்து எழுத்துத் தேர்வு/நேர்காணலுக்குத் தகுதியுடையவர்கள் பட்டியல் 19.5.2017 அன்று வெளியிடப்படும். அதன் பிறகு 12.6.2017 முதல் 15.6.2017 வரை நேர்காணல் நடத்தப்பெறும். அதன் பின்னர் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் 19.6.2017 அன்று வெளியிடப்படும். அதன் பிறகு, 24.7.2017 முதல் வகுப்புகள் தொடங்கும்.

மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது Dean (Academics), Indian Institute of Space Science and Technology, Valiamala P.O., Thiruvananthapuram  695 547, Kerala எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது pgadmission2017@iist.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பெறலாம்.  0471-2568477 / 478 / 555 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.   

- தேனி மு. சுப்பிரமணி