மாணவர்களை வெகுவாகக் கவர்ந்த DINAKARAN EDUCATION EXPO 2017



சேவை

+2 பொதுத்தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் அடுத்து என்ன படிக்கலாம் என்பதில் குழப்பங்களோடே இருப்பார்கள். ஒருசிலர் மட்டுமே முன்பே திட்டமிட்டு அதன்படி அடுத்தகட்டதில் அடியெடுத்து வைப்பார்கள். பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் பல கருத்துகளை உயர்கல்வி விஷயத்தில் சொன்னாலும், மாணவரின் மனம் எதை நாடுகிறது என்பது கண்டறியப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாகக் கடந்த ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதிகளில் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் தினகரன் கல்விக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சி  உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் கிடைத்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

தினகரன் நாளிதழ் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் சார்பில் தினகரன் கல்விக் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சிக்கு வந்த மாணவ, மாணவிகள் கண்காட்சி குறித்து தெரிவித்த கருத்துகளை இனி பார்ப்போம்…

கல்பாக்கத்தில் இருந்து வந்திருந்த மாணவி யோகலட்சுமி கூறும்போது, “இங்குள்ள கல்வி நிறுவனத்தினர் எங்கள் சந்தேகத்துக்கு மிகவும் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்கம் அளித்தனர். பொறியியல் மட்டும் அல்லாமல் கலை அறிவியல், ஃபேஷன் டெக்கானலஜி எனப் பல துறைகளைச் சார்ந்த ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு வியப்படைந்தோம். பள்ளி ஆசிரியர்கள் என்னதான் பாடம் எடுத்தாலும், இதுபோன்று கண்காட்சியில் பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது” என்றார்.

அடுத்ததாக சைதாப்பேட்டையில் இருந்து வந்திருந்த மாணவி அம்பிகை கூறும்போது, “பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு படிக்கும் ஆசை எனக்கு. ஆனால், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குழப்பங்களுடன் இங்கு வந்தேன். தற்போது அனைத்துச் சந்தேகங்
களுக்கும் தெளிவு கிடைத்துள்ளது. இக்கண்காட்சி என்னைப் போன்றவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. உயர்கல்வியில் இத்தனை துறைகள் இருக்கின்றனவா என இங்கு வந்து பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது”  என்றார்.

பெரம்பூரில் இருந்து வந்திருந்த மாணவி ஐஸ்வர்யா, “ஒருவாரத்துக்கு முன்பே, தினகரன் கல்விக் கண்காட்சி நடப்பதைத் தெரிந்துகொண்டோம். கடந்தாண்டில், எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அதனால் நாங்களும் இந்த ஆண்டு ஆர்வமுடன் வந்தோம். முழு திருப்தியுடன் திரும்பிச் செல்கிறோம்” என்றார்.

தாம்பரம் பகுதியில் இருந்து வந்திருந்த மாணவி கிருத்திகா கூறும்போது, “+2 முடிக்கும் மாணவர்களுக்கு எந்த மாதிரியான ஆலோசனைகள் தேவையோ அது அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தினகரன் நாளிதழுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். இதை வெறும் கண்காட்சியோடு நிறுத்திக்கொள்ளாமல், கல்வியாளர்களை வைத்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது” என்றார்.

திருவள்ளூருக்கு அருகில் உள்ள புட்லூரில் இருந்து வந்திருந்த மாணவர் யுவராஜ் குறிப்பிடும்போது, “கல்வியைத் தவிர, வேலைவாய்ப்புப் பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி எனப் பிற வழிகாட்டு நெறிகளும் கண்காட்சியில் வழங்கப்பட்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. விதவிதமான படிப்புகள், பல்வேறு கல்லூரிகள் எனக் கண்காட்சி எங்களை மிகவும் பிரமிக்கச் செய்தது.” என்றார்.

திருவல்லிக்கேணியில் இருந்து வந்திருந்த மாணவி லாவண்யா கூறும்போது, “எனக்கு மருத்துவம் படிக்க ஆசை. அதுதொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் இங்கு வந்த பிறகு தீர்வு கிடைத்தது. குறிப்பாக, மருத்துவத்தில் என்னென்ன துறைகள் உள்ளன, அதில் எதைத் தேர்வு செய்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும், எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்யலாம் எனப் பல கேள்விகளுக்கு இங்கு விடை கிடைத்தது. வெளிநாட்டு மருத்துவக் கல்வி நிறுவனங்களும் கண்காட்சியில் அரங்கம் அமைத்திருந்தன. அதன் மூலம் வெளிநாட்டு மருத்துவக் கல்வி முறை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. நீட் தேர்வு குறித்த விளக்கங்களும் வழிகாட்டுதல்களும் பல இடங்களில் வழங்கப்பட்டது என்னைப் போன்ற எதிர்பார்ப்போடு வரும் மாணவ-மாணவிகளுக்குப் பயனுள்ளதாக இருந்தது.” என்றார்.

சென்னை பிராட்வேயில் இருந்து வந்திருந்த மாணவி ஐரின் சாந்தினி கூறும்போது,“இந்தக் கண்காட்சி குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ‘மனம் மாறியுள்ளது’. அடுத்து என்ன படிக்கப் போறேன்னு தெரியாம இருந்தேன். கண்காட்சி வந்ததும் என்ன படிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்றார்.

பிராட்வேயில் இருந்து வந்திருந்த கோமள வள்ளி என்பவர், “நான் என் மகளுக்காகக் கண்காட்சிக்கு வந்தேன். எதிர்பார்த்து வந்ததைவிட இங்கு அதிகம் அறிந்துகொண்டேன். என் பிள்ளையை என்ன படிக்க வைக்க வேண்டும் என நானும் என் கனவரும் குழப்பத்தில் இருந்தோம். இப்போது தெளிவு கிடைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க அருமையான முயற்சி” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் கல்விக் கண்காட்சி இந்த ஆண்டும் வெகு சிறப்பாக மாணவர்களுக்கு உயர்கல்வியில் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கியது.

- மணிகண்டன் படங்கள்: கணேஷ்