காலணி வடிவமைப்பு பட்டப்படிப்புகள்



நுழைவுத்தேர்வு

+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் (Ministry of Commerce and Industry) 1986 ஆம் ஆண்டில் தன்னாட்சி அமைப்பாக, உத்திரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவைத் தலைமையகமாகக் கொண்டு காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தை (Footwear Design and Development Institute) தொடங்கியது.

இங்குக் காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை இந்நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்: காலணி வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் நொய்டா தவிர்த்து, ரோக்தக், கொல்கத்தா, பர்சத்கஞ்ச், சென்னை, ஜோத்பூர், சிந்த்வாரா, பாட்னா, சண்டிகர், குணா, ஐதராபாத், அங்கலேஸ்வர் ஆகிய இடங்களிலும் தனது கல்வி மைய வளாகங்களை அமைத்திருக்கிறது.

இந்நிறுவனம் மற்றும் வளாகங்களில் மூன்று ஆண்டுக் கால அளவிலான காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (Footwear Design & Production  630 இடங்கள்), சில்லரை மற்றும் அலங்கார வணிகம் (Retail & Fashion Merchandise  540 இடங்கள்), அலங்காரத் தோல்பொருட்கள் வடிவமைப்பு (Fashion Leather Accessories Design  120 இடங்கள்) எனும் மூன்று இளநிலை அறிவியல் (B.Sc) பட்டப்படிப்புகளும், இரண்டு ஆண்டுக் கால அளவிலான காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (Footwear Design & Production  270 இடங்கள்), சில்லரை மற்றும் அலங்கார வணிகம் (Retail & Fashion Merchandise  270 இடங்கள்), படைப்புத்திறன் வடிவமைப்பு கேட்/கேம் (Creative Design CAD/CAM  30 இடங்கள்) எனும் மூன்று முதுநிலைப் பட்டப்படிப்புகளும் இருக்கின்றன.

இந்நிறுவனம் இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் (Indira Gandhi National Open University) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு இப்படிப்புகளை நடத்திவருகிறது.கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 31.7.2017 அன்று 25 வயதுக்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதுமில்லை. இந்த ஆண்டுத் தேர்வு எழுத விரும்புபவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://fddiindia.com என்ற இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விருப்ப வரிசையைக் (Preference) குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியும். இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் என இரண்டுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர், தனித்தனி விண்ணப்பங்களாகச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500ஐ கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22.5.2017.

எழுத்துத் தேர்வு: விண்ணப்பித்தவர்கள் AIEEE/BITSAT/IITJEE/GGSIPU/VIT/SRM/BCECE/UPSEE/ MPCET/GUJCET/EAMCET/COMEDK/MHCET/ODISHAJEE போன்ற நுழைவுத்தேர்வு எழுதியவர்கள் இந்நிறுவனம் நடத்தும் எழுத்துத்தேர்வினை எழுத வேண்டியதில்லை. இத்தேர்வு எழுது பவர்கள் விண்ணப்பத்தில் தாங்கள் எழுதவிருக்கும்/எழுதிய மேற்காணும் நுழைவுத்தேர்வு விவரங்களை விண்ணப்பத்தில் முன்பே தெரிவித்துவிட வேண்டும்.

மற்ற விண்ணப்பதாரர்கள் இந்நிறுவனம் நடத்தும் அகில இந்தியத் தெரிவுத் தேர்வு (All India Selection Test (AIST)) எனும் பெயரிலான கணினி வழி எழுத்துத் தேர்வினை (Computer Based Test) எழுத வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் சென்னை உட்பட, இந்தியா முழுவதும் 37 மையங்களில் இந்தக் கணினி வழி எழுத்துத் தேர்வுகள் 9.6.2017 முதல் 11.6.2017 வரை மூன்று நாட்கள் நடத்தப்படும்.

விண்ணப்பதாரர்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து தேர்வுக்கான அனுமதி அட்டையினை (Admit Card) தரவிறக்கம் செய்து, அதை பிரின்ட்-அவுட் எடுத்துக்கொண்டு, அதனுடன் அரசால் அளிக்கப்பட்ட (வாக்காளர் அட்டை/ஆதார் கார்டு) ஏதாவதொரு அடையாள அட்டையையும் கொண்டு சென்று தேர்வினை எழுதலாம்.

மாணவர் சேர்க்கை: எழுத்துத் தேர்வு முடிவுகள் 30.6.2017 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும். அதன் பின்னர், விண்ணப்பதாரர்கள் எழுதிய நுழைவுத்தேர்வு/அகில இந்தியத் தெரிவுத் தேர்வு ஆகியவற்றின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுடைய மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

இந்நிறுவனத்தின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வளாகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு 10.7.2017 முதல் 11.7.2017 வரை இரு நாட்களும், இளநிலைப் பட்டப்படிப்பிற்கு 12.7.2017 முதல் 14.7.2017 வரை மூன்று நாட்களும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக ரூ.25000 செலுத்தித் தங்களது சேர்க்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும். இப்படிப்புகள் அனைத்தும் 1.8.2017 முதல் தொடங்கப்படும்.

மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்நிறுவன இணையதளத்திற்குச் சென்று பார்வை யிடலாம் அல்லது 0120 - 4818400 (49 lines), 0120 - 4500152, 203 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டோ அல்லது “Footwear Design & Development Institute, A-10/A, Sector-24, Noida-201301 (UP)” எனும் முகவரியிலோ அல்லது admission@fddiindia.com எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு.சுப்பிரமணி