செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ் 

TNPSC நடத்த இருந்த தேர்வுகளின் தேதி மாற்றம்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல் அலுவலர் - நிலை III மற்றும் செயல் அலுவலர் - நிலை IV ஆகிய பதவிகளுக்கான தேர்வு அறிவிக்கைகளை வெளியிட்டிருந்தது. மேற்படி தேர்வுகளுக்கான எழுத்துத் தேர்வு 29.4.2017 மற்றும் 30.4.2017 ஆகிய தேதிகளில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வும் (Teachers Eligibility Test) 29.04.2017 மற்றும் 30.4.2017 தேதிகளில் நடைபெறும் எனத் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளமையால், தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, செயல் அலுவலர் - நிலை III தேர்வை 10.6.2017 அன்றும், செயல் அலுவலர் - நிலை IV தேர்வை 11.6.2017 அன்றும் என இரு தேர்வுகளையும் தொடர் இரு நாட்களில் நடத்தவும் , விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற் பயிற்சி அலுவலர் தேர்வை 20.5.2017 அன்றும் நடத்த தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்துள்ள தேர்வுத் தேதிகளிலிருந்து மாற்றியமைத்துள்ளது.

பள்ளிக்கூட வாகனங்களில் சி.சி.டி.வி. கேமரா!

சமீபத்தில் வட மாநிலத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி பல மாணவர்கள் உயிரிழந்தனர். இதையொட்டி சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய கல்வி வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோருக்குச் சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில் ‘மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ் உள்ளிட்ட பள்ளிக்கூட வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி. கேமரா கட்டாயம் பொருத்தி, அந்த கேமரா எந்த நேரமும் செயல்படவேண்டும். பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் பெயின்ட் அடித்து, பள்ளி வாகனம் என்று பஸ்சின் முன்னும் பின்னும் பார்த்தவுடன் பளிச்சென்று தெரியும்படி எழுத வேண்டும்.

பஸ்சின் கதவுகள் சரியாக மூடும்படி இருக்கவேண்டும். பஸ் எங்குச் செல்கிறது என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி பொருத்துதல், மாணவர்களுக்கு இருக்கைகள் பாதுகாப்பான முறையில் அமைத்தல், பஸ்களில் தீ அணைப்புக் கருவிகள் 2 இருப்பதைப் பள்ளி நிர்வாகம் உறுதி செய்தல், மணிக்கு 40 கிலோ மீட்டருக்கு அதிகமாக பஸ்கள் செல்லாத வகையில் அதற்கான கருவி பொருத்துதல், அவசர நேரத்தில் வெளியே மாணவர்கள் வருவதற்கு எமர்ஜன்சி கதவுகள் அமைத்தல். பஸ்சில் அவசரகால உதவிப் பெட்டி, மாணவர்கள் அவர்களின் புத்தகப் பைகளைப் பாதுகாப்பாக பஸ்சில் வைக்க சரியான இடம் ஒதுக்குதல் போன்றவற்றைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.டெக் படிக்க நேட் தேர்வு!

டெல்லியில் உள்ள ஏசியன் பசிபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நடத்தும், பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான நேஷனல் அட்மிஷன் டெஸ்ட் (National Admission Test-NAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கல்வித்தகுதி: +2வில் வேதியியல் அல்லது கணினிப் பாடத்துடன் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் பயின்று 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இட ஓதுக்கீட்டுப் பிரிவினர், 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
தேர்வு நாள்: 7.5.2017
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.5.2017
மேலும் விவரங்களுக்கு: www.apiit.edu.in

TNPSC தேர்வு கட்டணம் உயர்வு!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய தேர்வுக் கட்டணம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) கோரிக்கையை ஏற்று அது நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணங்கள் திருத்தியமைக்கப்படுகின்றன.

அதன்படி, நேர்காணல் மற்றும் எழுத்துத்தேர்வு கொண்ட மாநிலப் பணித் தேர்வுகளுக்கான கட்டணம் ரூ.125-லிருந்து ரூ.200 ஆகவும், சார்நிலைப் பணிகளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்படுகிறது. அதேபோல், எழுத்துத்தேர்வு மட்டும் கொண்ட பணிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100 ஆகவும், முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக் கட்டணம் (5 ஆண்டுகள் செல்லத்தக்கது) ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படுகிறது.

இதுவரை பி.சி., பி.சி. (முஸ்லிம்), எம்.பி.சி. வகுப்புகளைச் சேர்ந்த பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வினை 3 முறை தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் எழுதலாம். இந்தக் கட்டணச் சலுகை பட்டப்படிப்பு கல்வித் தகுதியை பார்க்காமல் அனைத்துக் கல்வித் தகுதிகள் (எஸ்.எஸ்.எல்.சி., +2) கொண்ட இப்பிரிவினருக்கு நீட்டிக்கப்படும். திருத்தப்பட்ட புதிய தேர்வுக் கட்டணமும், கட்டணச் சலுகையும் கடந்த மார்ச் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது.