NITIE-ல் வழங்கும் தொழிற்சாலைப் பொறியியல் முதுநிலைப் பட்டயப்படிப்பு



அறிவிப்பு

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Human Resource Development) கீழ் மும்பையில் அமைக்கப்பட்டிருக்கும் தேசியத் தொழிற்சாலைப் பொறியியல் நிறுவனம் (National Institute of Industrial Engineering, Mumbai) இரண்டு வருட கால அளவிலான முதுநிலைப் பட்டயப்படிப்புகளில் (Post Graduate Diploma Courses) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

முதுநிலைப் பட்டயப்படிப்புகள்

இந்நிறுவனத்தில் இரண்டு வருட கால அளவிலான தொழிற்சாலைப் பொறியியல் (Post Graduate Diploma in Industrial Engineering - PGDIE) 126 இடங்கள், உற்பத்தி மேலாண்மை (Post Graduate Diploma in Manufacturing Management - PGDMM) 40 இடங்கள், திட்ட மேலாண்மை (Post Graduate Diploma in Project Management - PGDPM) 40 இடங்கள் என மூன்று வகையான முதுநிலைப் பட்டயப்படிப்புகளில் மொத்தம் 206 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் 15% இடங்கள் பன்னாட்டு மாணவர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

ேமற்காணும் மூன்று முதுநிலைப் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் பொறியியல் பட்டதாரித் தகுதித் தேர்வில் ஜூன் 15, 2017க்குள் தகுதி மதிப்பெண் பெறக்கூடியவராக இருக்க வேண்டும்.  தொழிற்சாலைப் பொறியியல் (PGDIE) படிப்பிற்கு ஏதாவதொரு பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திட்ட மேலாண்மை (PGDMM) படிப்பிற்கு Mechanical, Production, Automobile, Chemical, Textile Technology, Electrical,  Electronics, Industrial Engineering, Instrumentation, Industrial Electronics ஆகிய பாடங்களில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

திட்ட மேலாண்மைப் படிப்பிற்கு இதே படிப்பிற்கான அனைத்துப் படிப்புகளுடன்  அமைப்பியல் (Civil) பொறியியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும். மேற்காணும், கல்வித்தகுதிக்கான பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு படித்து வருபவர்களும் விண்ணப்பிக்க முடியும். 30.9.2017க்குள் மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அனைத்துப் பிரிவினரும் பொறியியல் பட்டப்படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 5% மதிப்பெண்கள் தளர்வு உண்டு.  மூன்று முதுநிலைப் பட்டயப்படிப்புகளிலும் தொழிற்சாலை அமைப்புகள்/கல்வி நிறுவனங்கள் (Industrial Organisations/Academic Institutions) போன்றவற்றில் பணியாற்றுபவர்களுக்குச் சில இடங்கள் பரிந்துரை ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்படும். பரிந்துரை ஒதுக்கீட்டிற்கு மேற்காணும் கல்வித்தகுதிக்கான படிப்பில் 60 % மதிப்பெண்களும், 15.6.2017 ஆம் தேதியில் குறைந்தது இரண்டு வருட கால பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இப்பிரிவினருக்குப் பட்டதாரித் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் இந்நிறுவனத்தின் http://www.nitie.edu என்ற இணையதளத்துக்குச் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு படிப்பிற்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினர் ரூ.500 செலுத்தினால் போதுமானது. பன்னாட்டு மாணவர்கள் பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 50 அமெரிக்க டாலர் (US$ 50) செலுத்த வேண்டும். சார்க் நாடுகளில் இருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000-க்கு இணையான கட்ட ணம் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கக் கடைசிநாள்: 3.4.2017.  

மாணவர் சேர்க்கை

விண்ணப்பித்தவர்களில் இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, அவர்களது பட்டதாரித் தகுதித் தேர்வு மதிப்பெண்கள், கல்விச் செயல்திறன் (Academic Performance) மற்றும் தொழிற்சாலை அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றிய அனுபவம் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு 24.4.2017 முதல் 26.4.2017 வரை மூன்று நாட்கள் குழுக் கலந்தாய்வு (Group Discussion) மற்றும் நேர்காணல் (Personal Interview) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அதன் பிறகு ஜூன் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்.

கல்விக் கட்டணம்

மாணவர் சேர்க்கை மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கல்விக் கட்டணங்கள் (Academic Charges) ரூ.2,20,000,  துணைநலன்கள் கட்டணங்கள் (Facilities Charges) ரூ.64,000, மாணவர் நலன் மற்றும் செயல்பாடுகள் கட்டணம் (Student Welfare and Activities Charges) ரூ.33,000, விடுதிக் கட்டணம் (Hostel Charges) என்று மொத்தம் ஆண்டுக்கு ரூ.3,41,000 செலுத்த வேண்டியிருக்கும். முதல் ஆண்டில் வைப்புத்தொகையாக (Deposits) ரூ.28,000 கூடுதலாகச் செலுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை கிடைத்தவுடன் முதல் ஆண்டுக் கட்டணம் ரூ.3,69,000 உடனடியாகச் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்திட வேண்டும். 

இப்படிப்புகள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களைப் பெற மேற்காணும் இணையதளத்தினைப் பார்க்கலாம் அல்லது “Assistant Registrar (Academic), NITIE, Vihar Lake, P.O. NITIE, Mumbai  400087” எனும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியிலோ அல்லது admission.iemmpm@nitie.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு பெறலாம். இந்நிறுவனத்தின் 022  28035363, 28035224, 28573371 Ext: 5363 / 5224 எனும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு பெற முடியும்.

- உ.தாமரைச்செல்வி