அண்ணா பல்கலையில் தொலைநிலைக் கல்வி! MBA, MCA, MSC (CS) படிக்கலாம்!



அட்மிஷன்

தொலைநிலைக் கல்வியைப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பது என்பது மதிப்புக்குரியதாகவும், வேலைவாய்ப்புகளுக்குத் தகுதியானதாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் முதுநிலைக் கல்வியையாவது தொலைநிலையில் இங்குப் படிக்க விரும்புவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. அண்ணா பல்கலையில் தொலைநிலைக் கல்விக்கு ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.  அதன்படி 2017-2018ம் கல்வியாண்டுக்கான எம்.பி.ஏ, எம்.சி.ஏ; எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) போன்ற படிப்புகளுக்கான  விண்ணப்பங்களைச்  சென்னை  அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எம்.எஸ்.சி.யைத் தவிர எம்.பி.ஏ., எம்.சி.ஏ.  போன்ற  முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு  நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

முதுநிலைப் பட்டப்படிப்புகள்

எம்.பி.ஏ.: தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ. பயில விரும்புவோர், எம்.பி.ஏ-யில் (4 செமஸ்டர்கள்) ஜெனரல் மேனேஜ்மென்ட், டெக்னாலஜி மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட், ஹெல்த் சர்வீஸ் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு டூரிசம் மேனேஜ்மென்ட், ஆபரேஷன் மேனேஜ்மென்ட்  போன்ற துறைகளைத் தேர்வு செய்யலாம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில், திருச்சி, விழுப்புரம் போன்ற இடங்களில் உள்ள கல்வி மையங்களில் எம்.பி.ஏ-வுக்கான   பாடங்கள் நடத்தப்படும்.

எம்.பி.ஏ-வுக்கான நுழைவுத்தேர்வு 12.2.2017 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.எம்.சி.ஏ (6 செமஸ்டர்கள்): எம்.சி.ஏ. படிக்க விரும்புவோர்களுக்கு சென்னையிலுள்ள சென்டர் ஃபார் டிஸ்டன்ஸ் எஜுகேஷன்(CDE), அண்ணா யுனிவர்சிட்டி மற்றும் சென்னை அண்டு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(MIT) போன்ற கல்லூரிகளில் பாடம் நடத்தப்படும். எம்.சி.ஏ-வுக்கான நுழைவுத்தேர்வு 12.2.2017 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும்.

எம்.எஸ்.சி. (4 செமஸ்டர்கள்): எம்.எஸ்.சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்)  படிப்பைத் தேர்ந்தெடுக்க விரும்புவோர், சி.எஸ்-எஃப்.ஒ.எஸ்.எஸ்(CS-FOSS) துறையையும் தொலைநிலைக் கல்வி மூலம் கற்கலாம். எம்.எஸ்.சி-க்கு நுழைவுத்தேர்வு கிடையாது. மாறாகத் தகுதியுள்ள மாணவர்கள் 2017ம் ஆண்டு  மார்ச்
மாதத்தில் அட்மிஷனுக்கு அழைக்கபடுவார்கள்.

எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ-வுக்கான  நுழைவுத்தேர்வுகள்  தனித்தனியாக நடத்தபடும்.தேவையான தகுதிகள்: எம்.பி.ஏ. படிக்க விரும்புவோர் ஏதாவது பட்டப்படிப்புடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ. படிக்க விரும்புவோர் கணிதம் அல்லது புள்ளியியல் போன்ற பாடங்களில் பட்டப்படிப்பு  முடித்திருத்தல் வேண்டும்.

மேலும்  அண்ணா பல்கலையின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்.சி. படிக்க விரும்புவோர்  கணிதம் அல்லது புள்ளியியல் போன்ற பாடங்களில்  பட்டப்படிப்பு முடித்திருத்தல் அவசியம். மேலும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி போன்ற அனைத்துப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் தனது இளநிலைப் படிப்பை +2 முடித்துவிட்டு படித்தவராக இருத்தல் வேண்டும் அல்லது அதற்குச் சமமான படிப்பினைப் படித்திருத்தல் அவசியம்.

AMIE  மற்றும் TANCET போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். ஆனால், AMIE தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு வருடம் ஆகியிருந்தாலோ அல்லது  TANCET தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரு வருடம் ஆகியிருந்தாலோ, அண்ணா பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வில் கண்டிப்பாக  கலந்துகொள்ள வேண்டும்.

விண்ணபிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் www.annauniv.edu/cde என்ற இணையதளம் சென்று விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தரவிறக்கம் செய்த விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ. 650ஐ டி.டி. எடுத்து இணைத்து ‘The Director, Centre for Distance Education, Anna University, Chennai-600025’ என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது அண்ணா
பல்கலைக்கழகத்தில் மேற்குறிப்பிட்டபடி டி.டி. எடுத்துவந்து நேரில் சமர்ப்பித்தும் விண்ணப்பத்தைப் பெறலாம்.

முக்கிய தேதிகள்எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ-வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.2. 2017
எம்.எஸ்.சி-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.2.2017
மேலும் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கவும்.

- வெங்கட் குருசாமி.