தேசிய கட்டடக்கலைத் திறனாய்வு தேர்வு NATA 2017



நுழைவுத்தேர்வு

இந்தியாவில் இருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள ஐந்தாண்டுக் கால அளவிலான கட்டடக்கலைப் பட்டப்படிப்பில் (B.Arch) 2017-18 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்காகக் கட்டடக்கலைக் குழு (Council of Architecture) நடத்தும் தேசியக் கட்டடக்கலைத் திறனாய்வுத் தேர்வு (National Aptitude Test in Architecture  NATA 2017) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி மற்றும் வயதுத் தகுதி: இந்த நுழைவுத்தேர்வுக்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம் பாடத்தை எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பிற்குப் பிறகு மூன்றாண்டுக் கால அளவிலான பட்டயப்படிப்பில் கணிதத்தைப் பாடமாக எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேற்காணும் தேர்வினை இந்த ஆண்டு எழுதவிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://nata.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் அதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளவும். ஆன்லைன் விண்ணப்பம் தனித்தகவல்கள் (Personal Details), ஆவணப் பதிவேற்றம் (Document Uploading) மற்றும் கட்டணம் செலுத்தல் (Fee Payment) எனும் மூன்று வகையான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

முதல் இரு செயல்பாட்டினை முடித்துக்கொண்டு, அனைத்து வகுப்பினரும் விண்ணப்பக் கட்டணம் ரூ.1250ஐ கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். இது தவிர, இணையதளத்தில் சலானைப் பதிவிறக்கம் செய்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிலும் விண்
ணப்பக் கட்டணத்தைச் செலுத்த முடியும்.

இணையம் வழியாகத் தனித்தகவல்களைப் பதிவு செய்துகொள்ளக் கடைசி நாள்: 2.2.2017. புகைப்படம் (Image) உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யக் கடைசி நாள்: 3.2.2017. விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரங்களைப் பதிவு
செய்யக் கடைசி நாள்: 4.2.2017. பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் பிழைகள் ஏதுமிருப்பின் அப்பிழைகளை 20.2.2017 முதல் 24.2.2017 வரை திருத்தம் செய்து சரிசெய்ய முடியும். அதன் பிறகு, உறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.2.2017 முதல் இணையத்தில் இருந்து தனியாக அச்சிட்டு எடுத்துக்கொள்ள முடியும். 

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று நகரங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 70 நகரங்களில் 16.4.2017 அன்று நுழைவுத்தேர்வு நடைபெறும்.இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை அறிய விரும்புவோர் மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது “Council of Architecture, India Habitat Centre, Core 6A, 1st Fl, Lodhi Road, New Delhi - 110 003” எனும் அஞ்சல் முகவரியிலோ அல்லது nata-coa@gov.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டோ பெறலாம்.

  - உ.தாமரைச்செல்வி