நல்ல விஷயம் 4



வளாகம்

பார்க்கவேண்டிய இடம்  ஊட்டி தாவரவியல் பூங்கா


1847 ஆம் ஆண்டு கிரஹாம் மக்கில்வேர் என்ற கட்டடக்கலை வல்லுநரால் தொடங்கப்பட்ட ஊட்டி தாவரவியல் பூங்கா நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் அமைந்துள்ளது. 55 ஏக்கரில் பரந்து விரிந்த இப்பூங்காவில் 650-க்கும் மேற்பட்ட தாவரங்கள் தமிழக அரசு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

கடல்மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊட்டி மலையில் உள்ள பூங்கா  கீழ்த்தளத் தோட்டம், மேல்தள நீரூற்று, இத்தாலியன் தோட்டம், கண்ணாடி வீடு உட்பட 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவர்கின்றது.

இதன் அருகிலேயே தொட்டபெட்டா மலைச்சிகரம் கண்களுக்கு விருந்து. உற்சாக உத்வேகம் பெற நீங்கள் செல்லவேண்டிய அற்புத மலைவாசஸ்தலம் இது. மேலும் தகவல்களுக்கு  https://ta.wikipedia.org/wiki/ஊட்டி_ தாவரவியல் பூங்கா

அறியவேண்டிய மனிதர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி(1886-1968) புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற ஊரில் நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். உடல் சீர்கேட்டையும் புறந்தள்ளி கடுமையான முயற்சியினால் தனியாக மெட்ரிகுலேசன் முறையில் படித்து, பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 1912 ஆம் ஆண்டு நெம்பர் 1 மாணவியாக தேர்ச்சி பெற்றவர்.

இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்,  சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக ஆன முத்துலட்சுமி சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையும் பெற்றார்.

தேவதாசிமுறை ஒழிப்புச்சட்டம், பால்ய திருமணத்தடை இருதாரத் தடை உள்ளிட்ட சமூக அவலங்களை ஒழிக்க அயராது பாடுபட்ட புரட்சிப் பெண்மணி.

இன்று அடையாறில் உள்ள ஆதரவற்றோர்களுக்கான அவ்வை இல்லம், புற்றுநோய் மருத்துவமனை முத்துலட்சுமி ரெட்டியின் அர்ப்பணிப்பான உழைப்புக்குச் சாட்சி. ஸ்த்ரீ தர்மம் என்ற தனித்துவப் பெண்கள் இதழின் ஆசிரியராகவும் இதழியல் பணியாற்றிய முத்துலட்சுமி ரெட்டியின் சேவைகளைப் பாராட்டி இந்திய அரசு, பத்மபூஷன் விருதளித்து கௌரவித்தது. இவரைப்பற்றி மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/முத்துலட்சுமி_ரெட்டி

படிக்கவேண்டிய புத்தகம் கங்கையில் இருந்து கூவம்வரை- யுவகிருஷ்ணா

பிரதமர் மோடி தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்தை அடியொற்றி தினகரன் வசந்தம் இதழில் வெளிவந்த ‘யெஸ் வீ கேன்’ கட்டுரைகளின் அமர்க்களத் தொகுப்பு. இயற்கையின் சிறு பகுதியான மனிதர்கள் தம்மை உலகின் முதலாளியாக நினைத்து செய்த செயல்பாடுக்களையும் அதற்கு கொடுத்த விலையினையும் நறுக்கென நெஞ்சுக்கு நீதியாக ஆசிரியர் பேசியிருப்பது சிறப்பு.

ஐம்பூதங்களையும் மனிதர்களான நாம் எப்படி சீரழித்திருக்கிறோம் என்பதோடு மாற்றுச்செயல்பாடுகளையும் முன்வைத்து பேசி உத்வேக நம்பிக்கை தருவதுதான் இந்நூலின் தனிச்சிறப்பு. மனிதனும் சமூகமும் வேறல்ல என்பதை ஆத்மார்த்தமாக உணரவைக்கும் அற்புத கட்டுரைத் தொகுப்பு இது. வெளியீடு: சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை- 4, தொலைபேசி: 72990 27361.விலை: ரூ.120.

வாசிக்க வேண்டிய வலைத்தளம் www.teachertn.com

முக்கியமான செய்திகளோடு, பள்ளி, கல்லூரி தேர்வுச் செய்திகள், தேர்வு அட்டவணைகள், பல்வேறு அகில இந்திய நுழைவுத்தேர்வுகள், பல தேர்வு
களின் பழைய வினாத்தாள்கள், ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள், அரசாணைகள் என அனைத்தும் இன்ஸ்டன்டாக  பதிவேற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் ஆல்ரவுண்டர் தளம் இது.

இத்தளத்தில் டுவிட்டர், ஃபேஸ்புக் லிங்குகளோடு சில செய்தி தொலைக்காட்சிகளின் லிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதில் உள்ள தகவல்களைக் குறித்து மேலும் அறிய மின்னஞ்சல் முகவரியும் உண்டு. தளம் வடிவமைப்பு கடந்து உள்ளேயுள்ள விஷயத்தில் எக்கச்சக்க திடமான செய்திகளால், நம்மை வசீகரிக்கிறது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்தளம் ஒரு தகவல்சுரங்கம் எனலாம்.