எதன் மதிப்பையும் பூஜ்ஜியமாக்கும் ஈகோ..!



உளவியல் தொடர் 10

உடல்... மனம்... ஈகோ!


ஈகோ நிறைந்த மனிதரால் உண்டாகும் ஒரே நல்ல காரியம், அவர்கள் ஒருபோதும் அடுத்தவர்களைப்பற்றி பேசவே மாட்டார்கள்.
- ஈகோ மொழி

‘ஒரு மனிதன் தனது திறமையாலும் கட்டுப்பாட்டினாலும் முழுமையாக நடந்து கொள்ளும்போது ஞானியாக இருப்பான்’ என்றார் வில்லியம் சரோயன்.
ஒவ்வொரு குழந்தையும் 2 முதல் 5 வயதிற்குள் அதற்கான வாழ்க்கைச் சூழலில், அனுபவத்தில் பெற்றவர்களுடனும், மற்றவர்களுடனுமான உறவால், எப்படி நடத்தப்படுகிறார்களோ அதை வைத்து தனக்குத்தானே ஒரு சுய பிம்பத்தை (Self Ego Image) தோற்றுவித்துக்கொள்கிறது.

அந்த பிம்பமே, அடிப்படை ஈகோ நிலையாக மாறி மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறது. இதன் காரணமாகத்தான் பலரும்… ‘நான் சின்ன வயசுல எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்?‘, ‘என் சந்தோஷமெல்லாம் அம்மா வீட்டோட முடிஞ்சுபோயிடுச்சு..!’ என்று, பால்ய கால சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார்கள்.

குழந்தை மனதில் குறைந்த அனுபவத்தாலும், விரிந்திடாத அறிவாலும் பதியும் ஈகோ பிம்பத்தை, வளர வளர அது எதிர்கொள்ளும் அனுபவத்தோடு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் அளவிட்டுக்கொண்டேயிருக்கிறது.   இந்த சுயபிம்பங்கள் மனிதனுக்கு அந்தந்த வயதில் அறிவார்த்தமாகவும், தர்க்கபூர்வமாகவும் (Logic), அர்த்தமானதாகவும் இருந்துகொண்டேயிருக்கிறது. இப்படி ஒப்பீடுகளால் உருவாகும் ஈகோ ஒரு மனிதனது அடிப்படை ஈகோ நிலையாக மாறிவிடுகிறது. அப்படி நிலைகொள்ளும் ஈகோ ஒரு மனிதனின் குணாதிசயங்களில் வெளிப்பட்டு அவன் வாழ்நாள் முழுவதும் அவனது வடிவமாகத் தொடர்கிறது.

ஈகோ எடுக்கும் அடிப்படை நிலைகள் மொத்தம் நான்கு என்று வகைப்படுத்தி யிருக்கிறார்கள். ஒப்பீடுகளால் உருவாகும் ஈகோ, மனிதர்களின் அடிப்படை ஈகோ நிலையாக மாறி, ஒவ்வொருவர் வாழ்விலும் பிரதிபலித்து, இயல்பான குணங்களாக அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

*நிலை 1.  நான் மதிப்பற்றவன், நீயும் மதிப்பற்றவன்இது ஒரு மனத்தாழ்வு நிலை. இந்நிலையில் ஒருவன் தனக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருப்பதோடு, மற்றவர்களுக்கும் எதுவும் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருப்பான். தானும், மற்றவர்களும், நல்லவர்கள் வகையிலும் சேர்ப்பதற்கு இல்லை, கெட்டவர்கள் வகையிலும் சேர்ப்பதற்கு இல்லை என்றே அவன் மனம் எண்ணிக்கொண்டிருக்கும்.

இந்த நிலை எதனால் ஏற்படுகிறது என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். இந்த நிலை சிறுவயதிலிருந்தே உருவாகி வரக்கூடியது. பெற்றவர்கள் குழந்தைகள் எது பேசினாலும் அவர்களை வெளிப்படுத்த விடாமல், உதாசீனப்படுத்தியோ, அவர்களுடன் கனிவாக நேரத்தை ஒதுக்காமலோ, ஆதரவாகவும், அனுசரணையாகவும் இருக்கவேண்டிய நேரத்தில் அநாதரவாக்கி வைத்திருப்பதோதான் காரணம்.

சில பெற்றோர்கள் குழந்தைகள் எது செய்தாலும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருப்பார்கள். தவறு செய்தால், கண்டிக்கவும் மாட்டார்கள், நல்லது செய்தால் பாராட்டவும் மாட்டார்கள். ரொம்பவே வித்தியாசமாக நடந்துகொள்வார்கள்.அன்பு, பாசம், நேசம், கோபம் என்று எதையும் வெளிக்காட்டாமல் குழந்தைகளிடமிருந்து ஒதுங்கி, விசித்திரமான முறையில் நடந்துகொள்வார்கள்.

இப்படி உணர்ச்சிகளுக்கு வசப்படாமல் வளரும், குழந்தைகள் முதலில் அமைதியாகி, மனதிற்குள் தாங்கள் எதற்கும் பயனற்றவர்கள் என்று எண்ணத் தொடங்கிவிடுவார்கள். இந்தச் சாயலுடன் வளர்பவர்களின் பிம்பம் அவர்களை மதிப்பற்றவர்களாக மாற்றுவதோடு, மற்றவர் தங்கள் மீது அன்பு செலுத்தாமல் போவதைக் கண்டு அவர்களையும் மதிப்பற்றவர்களாகவே நினைக்க வைக்கிறது.

இதுதான் நான் மதிப்பற்றவன், நீயும் மதிப்பற்றவன் என்று மாறும் அடிப்படை ஈகோ நிலை.பொதுவாகவே, எந்த ஒரு சாதாரண சிறிய செயலுக்கும், பெரிதாய்  விமர்சித்து, கிரிட்டிசைஸ் செய்து வளர்க்கப்படும் குழந்தைகள் வெகு சீக்கிரம் இந்நிலையை அடைந்துவிடுவதுதான் பரிதாபம்.

ஒரு குழந்தை இரவில் டாய்லெட் சென்று விட்டு, பிளஷ்அவுட் செய்யும் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிடும்போது, ‘எதுக்கு இப்படி திறந்துவிடற... சத்தமா இருக்குதுல்ல...? ராத்திரில எல்லாரும் தூங்குவாங்களே, டிஸ்டர்பா இருக்குமேன்னு அறிவு வேண்டாமா உனக்கு?’ என்று சிறு விஷயத் திற்கும் எரிந்து விழுவார்கள். அதே சிறுவன் வேறொரு நாளில் டாய்லெட் சென்று தவறுதலாக தண்ணீர் திறந்துவிடாமல் வந்தால், ‘சே… என்ன பையன் நீ? ஆள் தடிமாடாட்டம் வளர்ந்திருக்கே, ராத்திரி வேளைல டாய்லெட் போனா தண்ணி  திறந்துவிட ணும்னு தெரிய வேண்டாமா?’ என்பார்கள்.

இந்த மாதிரியான சூழலில், ‘ராத்திரியில் டாய்லெட் சென்றால், தண்ணீர் ஊற்ற வேண்டுமா? ஊற்றக்கூடாதா? தண்ணீர் ஊற்றினாலும் திட்டுகிறார்கள், தண்ணீர் ஊற்றாவிட்டாலும் திட்டுகிறார்கள்… என்ன செய்வது..?’ என்று புரியாமல் குழந்தைகள் மிகவும் குழம்பிப்போகவே செய்வார்கள்.

இதன் பலனாக எழும் குழப்பம், தண்ணீர் திறந்துவிடுவதால் மற்றவர் தூக்கம் கெடுகிறது, தண்ணீர் திறந்துவிடாததால் அடுத்தவருக்குச் சிரமத்தை தருகிறது… தான் எது செய்தாலும், தன்னால் மற்றவருக்கு எந்தவிதமான பலனும் ஏற்படுவதில்லை, தனக்குச் சமூகத்தில் அத்தனை மதிப்பில்லை என்ற எண்ணத்தை அடிப்படையாக விதைக்கத் தொடங்குகிறது.

இம்மாதிரியான சம்பவங்களும், சூழ்நிலைகளும் அடிக்கடி குழந்தைப்பருவத்தில் நிகழ நிகழ, மற்றவர்களுடன் பழகுவதைக் குழந்தை குறைத்துக்கொள்ளத் தொடங்கும். தனது உணர்ச்சி வெளிப்பாடுகளைக் காட்டிக் கொள்ளாமல் நத்தைபோல் மனதை சுருக்கிக்கொள்ளும். தான் எதற்கும் லாயக்கற்றவாறும், அவசியமற்றவாறும் இருப்பதாக நினைத்துக்கொண்டு, தன்னிடம் அன்பு காட்டாத, மற்றவரின் உதாசீனத்தையும் இணைத்துக் கொண்டு, இந்த உலகில் தானும் மதிப்பற்றவன், மற்றவர்களும் மதிப்பற்றவர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறது.

ஈகோவின் இந்த வெளிப்பாட்டு நிலையில் சிக்குண்டவர்கள் தாங்கள் வாழ்வது வீண் என்று சிந்தித்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அசாதாரண நிலையிலும் சிக்கிக்கொள்வார்கள். அதோடு அந்த ஈகோ நிலையால், எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள், அதே நேரம் தங்களது உரிமைக்காகவும் குரல் தராமல் போவார்கள். கண்டக்டர் இரண்டு ரூபாய் மீதிச் சில்லறை தராது போனால் வாய்விட்டுக் கேட்காமல், தயக்கத்தோடு, மனதிற்குள்ளாகவே ‘சில்லறை தரலை பாரு…. தராமப் போறார் பாரு…’ என்று புழுங்குவார்கள்.

வாழ்வின் இனிமையை ருசிக்காமல், ‘ஏதோ இருக்கிறோம்’ என்ற மனோபாவத்துடனேயே இருப்பார்கள். சக மனிதர்களுடனான உறவைத் துண்டித்துக்கொண்டு தனித்திருப்பார்கள். எதன் மதிப்பையும் பூஜ்ய மாகவே நினைப்பார்கள்.

வாழ்க்கையின் மீதான நம்பிக்கையின்மையும், ஈகோவின் அடிப்படை நிலையால் எழும் மனத்தாழ்வும், எதையோ பறிகொடுத்தவர்கள் போல், சிரிப்பைத் தொலைத்தவர் போல், எப்போதும் இருக்கச் செய்வதுதான் பெரிய பரிதாபம். இப்படி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும் ஈகோவின் நிலைகளைத் தொடர்ந்து பார்ப்போம்…

குரு சிஷ்யன் கதை

மதிப்பு மிக்க பொருள் எது?
ஆற்றின் கரையோரம் இயற்கை அழகை ரசித்தபடி அமர்ந்திருந்த குருவின் அருகே வந்த சிஷ்யன் “இந்த உலகத்திலேயே எது மதிப்பு மிக்க பொருள் குருவே?” என்றான்.
திரும்பி பார்த்த குரு, “ஒன்று உள்ளது. அதற்கு விலைமதிப்பே இல்லை” என்றார்.
சிஷ்யன் ஆச்சர்யமாக “அப்படி ஒரு பொருள் இருக்கிறதா?” என்றான்.
“இருக்கிறது” என்று புன்னகைத்தார் குரு.

சிஷ்யன் குழப்பமானான். அவன் முகத்தில் குழப்பத்தைக் கவனித்த குரு சொல்லத் தொடங்கினார், “முன்பு ஒரு காலத்தில் மௌலானா ரூமீ என்றொரு ஞானி இருந்தார். அவர் வீட்டில் இருக்கும்போது எப்போதும் கதவை அடைத்துக்கொண்டு, உள்தாழிட்டுக்கொண்டு இருப்பார். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது எல்லா வாசல் கதவுகளையும் திறந்து போட்டுவிட்டுச் செல்வார்…”  என்றார்.  ஒன்றும் புரியாதவனாய் “ஏன் அப்படி?” என்றான் சிஷ்யன்.

குரு சிரித்தபடி, “உனக்கு எழுந்த கேள்வியைப் போலவே, குழப்பமான ரூமீயின் நண்பரும் அவரிடம் அதுபற்றி கேட்டார். அதற்கு ரூமி, ‘விலை மதிப்பு மிக்க பொருள்கள் வீட்டில் இருப்பதால்தான் பலரும் தங்கள் வீட்டைப் பூட்டி வைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை என் வீட்டில் என்னைத் தவிர வேறு விலைமதிப்பு மிக்க பொருள் வேறு இல்லையென்று நினைக்கிறேன்.

அதனால் நான் வெளியில் போகும்போது, என் வீடு திறந்திருந்தால் என்ன மூடியிருந்தால் என்ன என்று திறந்து வைத்துவிட்டுச் செல்கிறேன்’ என்றார்.  அதைச் சொல்லி முடித்த குரு, “இப்போது புரிகிறதா இந்த உலகத்திலேயே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனது அறிவுதான் விலை மதிப்பு இல்லாத, மதிப்பு மிக்க பொருள்” என்றார். சிஷ்யன் புரிந்துகொண்டு வேகமாகத் தலையசைத்தான்.

- தொடரும்   

ஸ்ரீநிவாஸ் பிரபு