இந்திய ராணுவத்தில் வேலை



2400 பேருக்கு வாய்ப்பு

சர்வதேச அளவில் ஒரு நாட்டின் செல்வாக்கை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய அம்சங்களாக உள்ளவை அந்நாட்டின் பொருளாதார பலம் மற்றும் படை பலம். அந்த வகையில் இந்திய ராணுவம் உலக அளவில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. தற்போது அதை இன்னும் வலுவூட்டும் விதமாக ராணுவத்திற்கான ஆள் தேர்வு நடைபெற உள்ளது. உடல்தகுதி, சிந்திக்கும் திறன் மற்றும் திறமை வாய்ந்த இளைஞர்கள் தேசப் பாதுகாப்புக்காக தேவை என்பதால் ஐ.டி.ஐ. மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு வாய்ப்பளிக்க ராணுவ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார், எஸ்.எம்.டெபுடி டைரக்டர் ஜெனரல், பணி நியமன தலைமையகம், சென்னைப் பிரிவு,  பிரிகேடியர் சங்க்ராம் டால்வி. ‘‘ராணுவத்துக்கான இந்த ஆள்சேர்ப்பு முறை எந்தவொரு இடைத்தரகர்களின் தலையீடு, மற்றும் பரிந்துரைகள் இல்லாமல் ஒளிவுமறைவின்றி நடத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கும் முறை பல கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் இதில் முறைகேடுகளுக்கு சற்றும் வாய்ப்பிருக்காது. மேலும் பயோ மெட்ரிக் பரிசோதனை, கல்வி சான்றிதழ்களை பலகட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் சிறப்பம்சமாகும்.

அதிகமாக பொறியியல் மாணவர்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்தே தயாராவதால் பதினேழரை வயது முதல் இருபத்து மூன்று வயது நிரம்பிய இளைஞர்களை கவனத்தில் கொண்டு இந்த ஆள்சேர்ப்பு நடத்தப்படவுள்ளது. சாதி, மதம் மற்றும் சமுதாயம் ஆகிய எதுவும் பாராமல் உடல்நலம், மருத்துவப் பரிசோதனை மற்றும் கல்வி இவற்றில் தகுதிபெறும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறையானது கல்விச் சான்றிதழ்களை சரிபார்ப்பதில் தொடங்கி, உடல்தகுதி, மருத்துவப் பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வு என பலவாறு பிரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் என்.சி.சி. சான்றிதழ்கள் வைத்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட தகுதியுடைய மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் ஹவில்தார் மற்றும் நாயிப் சுபேதார் ஆகிய பணிகளில் நேரடியாக அமர்த்தப்படுவார்கள்.தேர்ச்சி பெறும் இளைஞர்கள் நாடு முழுவதுமுள்ள பல்வேறு பயிற்சி இடங்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு அங்கே முதல்கட்டப் பயிற்சி அளிக்கப்படும். பின் ராணுவத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சிக்காலம் முடிவடைந்து பணி அமர்த்தப்படும் ஒரு நபருக்கு ரூபாய் 24,000 முதல் 35,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

 ராணுவத்திலேயே பல பிரிவுகள் உள்ளதால், இவற்றின் செயல்பாடுகள் சீராக அமைய ஒவ்வொரு பிரிவிலும் சரிசமமாக ஆட்கள் பணியமர்த்தப்படுகின்றனர்’’ என்றவர் ஆள்சேர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ள இடங்களையும் தேர்வுமுறையையும் பட்டியலிட்டார், ‘‘தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து 6 ஆயிரம் காலியிடங்களுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் முகாம் தமிழ்நாட்டில் ஜூன் 4ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் மட்டும் 2400 காலியிடங்கள் உள்ளன. அதிகாரி அளவில்தான் பெண்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.’’

தேர்வு செய்யப்படும் முறை: ராணுவப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் முகாமுக்கு 3 நாட்கள் வரவேண்டியதிருக்கும். முதல் நாளில் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடத்தப்படும். பின்னர் உடல்தகுதி தேர்வு நடத்தப்படும். பின்னர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதெல்லாம் முடிந்த பிறகு எழுத்துத் தேர்வுக்கு அனுமதி அட்டை வழங்கப்படும். இந்தியா முழுவதும் ஒரே நாளில் காலை 9 மணி முதல் 10 மணி வரை எழுத்துத் தேர்வு நடக்கும். 10ம் வகுப்பு பாடத்திட்டத்தின்படிதான் கேள்விகள் இருக்கும். விளையாட்டு வீரர்கள், என்.சி.சி. மாணவர்களுக்கு முன்னுரிமையும், கூடுதல் மதிப்பெண்ணும் கிடைக்கும்.

பொதுவாக இந்தி, ஆங்கிலத்தில்தான் எழுத்துத் தேர்வு நடக்கும். ஆனால் தற்போது அந்தந்த மாநில மொழியிலும் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். ராணுவ வீரருக்கு பயிற்சி காலத்தில் ரூ.24,000 முதல் 35,000 வரை சம்பளம் அளிக்கப்படும்.முகாம் நடைபெறும் இடங்கள்: பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காரைக்கால் மாவட்ட இளைஞர்களுக்கு நாகையில் ஜூன் 4 முதல் 13ம் தேதி வரையிலும், கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், மதுரை, ஈரோடு, தர்மபுரி, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்ட இளைஞர்களுக்கு தர்மபுரியில் ஜூலை 22 முதல் 31ம் தேதி வரையிலும், சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதி இளைஞர்களுக்கு புதுச்சேரியில் செப்டம்பர் 4 முதல் 13ம் தேதி வரையிலும் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும்.

தேவையான சான்றிதழ்கள்: இந்த முகாமுக்கு வருகிறவர்கள் சான்றொப்பம் அளிக்கப்பட்ட நகலுடன் அசல் கல்விச் சான்றிதழ் (8ம் வகுப்பு முதல் அதிகபட்ச கல்வித் தகுதிவரை), பிறப்புச் சான்றிதழ், ஒழுக்கச் சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், என்.சி.சி. சான்றிதழ், 18 வயதுக்கு குறைவானவராக இருந்தால் பெற்றோரின் ஒப்புதல் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 8 ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு காண்க: www.joinindianarmy.nic.in