TNPSC GroupIV தேர்ச்சி பெறுவது எப்படி? சக்சஸ் டிப்ஸ்



டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு. 4963 இடங்களுக்காக நடக்கிற இத்தேர்வை 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதவிருக்கிறார்கள். எதிர்பார்ப்பு, பதற்றம், படபடப்பு, பயம் எனக் கலவையான உணர்வுகளுக்கு மத்தியில் தேர்வுக்குத் தயாராகி வருவீர்கள். கடந்த சில  இதழ்களில், பாடவாரியாகத் தேர்வுக்குத் தயாராகும் வழிமுறைகளை விளக்கி யிருந்தோம். இருக்கும் காலத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வது  என்பது பற்றி இந்த இதழில் விளக்குகிறார், ஏராளமான மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் எஸ்.வடிவேல்.


முதலில் பயம், பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள். வெற்றிக்கான முதல் தடை அவைதான். ரிலாக்ஸாக மனக்குழப்பம் இல்லாமல் தேர்வுக்குத்  தயாராகுங்கள். தேர்ச்சி மட்டும்தான் உங்கள் இலக்கு. ‘நம்மால் முடியுமா... இவ்வளவு லட்சம் பேரில் நாம் தேர்ச்சி அடைவோமா?’ என்பது போன்ற  நெகட்டிவான கேள்விகளைத் தள்ளி வைத்துவிடுங்கள்.

ஒரு உளவியலைப் புரிந்துகொள்ளுங்கள். இத்தேர்வை எழுதப்போவது 13 லட்சத்து சொச்சம் பேர் என்றாலும் இதில் 50 ஆயிரம் பேர் மட்டுமே சிரத்தையான தயாரித்தல்களோடு தேர்வுக்கு வருவார்கள். அதாவது, ஒரு பதவிக்கு பத்து பேர்... அவர்களோடுதான் நீங்கள் போட்டியிடப் போகிறீர்கள். எனவே 10ல் ஒருவராக வந்திருக்கிற உங்களால் பத்தில் முதல்வராகவும் வர முடியும். இதுவரை எப்படி படித்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல... இருக்கிற அவகாசத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் படிக்க வேண்டும். கவனச்சிதறல் இல்லாமல் படித்தால் கூட ஜெயித்துவிடலாம். 

பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றிருந்தால், கடந்த நாட்களில் படித்து, எழுதி வைக்கப்பட்ட குறிப்புகள், வகுப்பு நோட்டுக்களை முழுவதுமாக இரண்டு முறை படித்து நினைவுக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம்.

மொழிப்பாடங்களே அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். இருக்கும் அவகாசத்தில் 50 தலைப்புகளையும் முழுவதுமாக மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.

பொது அறிவுப் பகுதியில் அறிவுத்திறன் மற்றும் அறிவுக்கூர்மை பகுதிகளில் 25 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவற்றை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். சூத்திரங்களை மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.

அறிவியலில் உயிரியல் பாடத்தில் 6 முதல் 8 கேள்விகளும், இயற்பியல், வேதியியலில் 6 முதல் 8 கேள்விகளும் கேட்கப்படும். புவியியல், வரலாறு, விடுதலைப் போராட்டம், சமீப நிகழ்வுகள், இந்திய பொருளாதாரம், பொது அறிவு என எல்லாப் பாடங்களிலும் எடுத்து வைத்திருக்கும் குறிப்பு களை ஒருமுறை திருப்பிப்பாருங்கள்.

தேர்வறையில் நீங்கள் சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். வினாத்தாளில் 200 கேள்விகள் கேட்கப்படும். சுமார் 40 முதல் 50 பக்கம் வரை இருக்கும். எனவே கேள்விகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டு சந்தேகமற்றுத் தெரியும் பதில்களை முதலில் டிக் செய்ய
வேண்டும். பல கேள்விகள் எதிர்மறைக் கேள்விகளாகவே அமையும்.
 உதாரணத்துக்கு, சரியல்லாத தொடர் எது? தவறல்லாதது எது? பண்புத்தொகையற்ற தொடர் எது? என்று கேள்விகள் அமையக்கூடும்.

பொது அறிவிலும் கூட எதிர்மறை கேள்விகள் இடம்பெறும். உதாரணத்துக்கு, ‘கீழ்க்கண்டவற்றுள் நெய்வேலியில் கிடைக்காதது எது?’ என்று கேள்வி கேட்கப்படும். விடைகளில், முதல் ஆப்ஷனாக நிலக்கரி என்ற பெயர் இருக்கும். பலர் கேள்வியைச் சரியாக வாசிக்காமல், அவசரத்தில் நிலக்கரியைத் தேர்வு செய்துவிடுவார்கள். நன்கு தெரிந்தும் மதிப்பெண்ணை இழக்க வேண்டி வரும். அதனால் கவனம் தேவை.

குறிப்பிட்ட நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பாகவே தேர்வு நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடுவது நல்லது. முன்பே தேர்வு நடக்கும் அறையைத்  தெரிந்து வைத்துக்கொள்வது கடைசி நேர படபடப்பைக் குறைக்கும். ஹால் டிக்கெட்டை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வுக்கு முதல்நாள், இரவு 10.00 மணிக்குள் உறங்கச் சென்றுவிடுங்கள். படித்ததை மட்டும் நினைவுபடுத்திப் பாருங்கள். புதிதாக படிக்க வேண்டாம். காலையில் புள்ளிவிவரங்களை மட்டும் அரை மணி நேரம் திருப்பிப் பார்த்துவிட்டு கிளம்பிவிடுங்கள். முன்தினம் இரவில் சரியாக தூங்காவிட்டால்  தேர்வறையில் சோர்வு வந்துவிடும். கவனம்.

விரைவாகக் கேள்விகளைப் படித்து, விடைகளை தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் போதிய நேரத்தில் முடிக்க முடியும். உழைப்பும், உறுதியும், நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் 4963 பேரில் நீங்களும் ஒருவர்.

வாழ்த்துகள்!