+2கணிதத்தில் சென்டம் வாங்க டிப்ஸ்



+2 பொதுத்தேர்வில் கணிதத்தில்தான் அதிக அளவில் சென்டம் அள்ளுவார்கள் மாணவர்கள்.  கவனமும், நிதானமும், ஈடுபாடும், உழைப்பும் ஒருசேர இருந்தால் சென்டம் நிச்சயம். அதற்கான எளிய வழிமுறைகளை விளக்குகிறார் பட்டுக்கோட்டை, அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுகலை கணித ஆசிரியர் சி.மோகன்.

தெளிவான திட்டமிடலும் புரிந்துகொள்ளும்  திறனும் இருந்தால் கணிதத்தில் சென்டம்  எடுப்பது மிகவும் எளிது. தேவையான இடங் களில் கணித சூத்திரங்களைக் கையாளும்
திறன், நினைவாற்றல், போதுமான அளவு  பயிற்சியும் அவசியம்.

ஒரு மதிப்பெண் வினாக்கள் 40க்கும் சரியான  விடையை எழுதிவிட்டால் 200/200 பெற முடியும்  என்ற நம்பிக்கை வந்துவிடும். பாடப்புத்தகத்திற்கு பின்புறம் (Book Back) உள்ள வினாக்களில் இருந்து 30 வினாக்கள், PTA (COME BOOK) புத்தகத்திலிருந்து 10 வினாக்கள் என 40 வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். இந்த ஒரு மதிப்பெண் வினாக்களை தினமும் 1 மணி நேரம்   பயிற்சி செய்துகொண்டே வந்தால் தேர்வறையில் வினாத்தாளை பார்த்த உடனேயே விடை நினைவுக்கு வந்துவிடும்.

1 மதிப்பெண் வினாக்களில் வெக்டர் இயற் கணிதம், பகுமுறை வடிவ கணிதம் ஆகிய பாடங்களில் அதிகமான வினாக்கள் இருக்கும். எளிதில் தவறு செய்யும்வகையில் இந்தப்பாடங்களில் வினாக்கள் இருக்கும். எனவே மேற்கண்ட பாடங்களில் கூடுதல் கவனத்துடன் வினாக்களை நன்கு உற்று நோக்கி விடைகளை அளிக்க வேண்டும்.

1 மதிப்பெண் வினா பகுதியானது முழுமையான 200/200 மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி கணிதம் என்றாலே கசப்பை உணரும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கும் முக்கிய அங்கமாகும். முதலிலேயே 1 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளித்தல் நன்று.  இதன் மூலம் கடைசிநேரத்தில் விடையளிக்க முடியாமல் தடுமாறுவதை தவிர்க்க முடியும்.

பெரும்பாலான மாணவர்கள் 6 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிப்பதில் அதிகம் தடுமாறுகிறார்கள்.  அவர்கள் பாடம் 1, 2, 3, 5, 9, 10 ஆகிய பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் 10 வினாக்களில் குறைந்தபட்சம் 9 வினாக்களுக்கு நிச்சயம் விடையளிக்க முடியும்.  மேற்கண்ட பாடங்கள் சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.  வெக்டர் இயற்கணிதம், வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் ஆகிய பாடங்களில் 6 மதிப்பெண் வினாக்கள், இரண்டு 3 மதிப்பெண் வினாக்களாக பெரும்பாலும் கேட்கப்படுகின்றன. இதிலும் நன்கு கவனம் செலுத்துங்கள். 200/200 பெறும் உறுதியுடன் உள்ள மாணவர்கள் மேற்கண்ட பாடங்கள் தவிர மீதமுள்ள பாடங்களிலும் 6 மதிப்பெண் வினாக்களை தயார் செய்வது கூடுதல் உதவியாக இருக்கும்.

10 மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரையில் பாடம் 1, 2, 3, 4, 6, 9 ஆகிய பாடங்களில் இருந்து 9 வினாக்கள் தேர்வுக்கு வரும். மேலும் பாடம் 7ல் கன அளவு, வில்லின் நீளம், புறப்பரப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 9 வினாக்களையும் பாடம் 8ல் உள்ள ஞி2 கணக்குகள் மூன்றையும், பயன்பாட்டு கணக்குகளையும், பத்தாவது பாடத்தின் கடைசியில்இயல் நிலைப்பரவல்கள் பகுதியில் உள்ள கணக்குகளையும் நன்கு தயார் செய்வதன் மூலம் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். ஒரு வேளை வினா எண் 70ல் கேட்கப்படும் கட்டாய வினாக்களில் இதில் குறிப்பிடப்படாத பகுதிகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, 200/200 பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் உள்ள மாணவர்கள் இங்கு குறிப்பிடப்படாத மீதமுள்ள பகுதியையும் தயார்  செய்துகொள்வது அவசியம்.

சென்டம் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வு அறையில் சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். வினாத்தாள் கொடுத்தவுடன் வினாக்களைப் படித்துப் பார்க்க ஒதுக்கப்பட்ட 15 நிமிட நேரத்தில் முதலில் எல்லா வினாக் களையும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு படித்துப் பார்க்க வேண்டும்.

வினா எண்ணை கவனமுடன் முதலில் எழுதிய பிறகே விடையளிக்கத் தொடங்க வேண்டும். 6 மதிப்பெண் வினாக்கள் 16, 10 மதிப்பெண் வினாக்கள் 16, இவற்றை நன்கு படித்து மனதில் உள்வாங்கி மிகச்சரியான விடை தெரிந்த வினாக்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அதில், குறிப்பாக நன்கு விடை தெரிந்த வினாக்கள், அதாவது 'நிறுவுக', 'சரிபார்க்க', 'எனக்காட்டுக' என்பன போன்ற வினாக்களுடன் விடையும் சேர்ந்தே இருக்கக் கூடிய வினாக்களை முதலில் தெரிவு செய்தல் நன்று.

வினாவிற்குத் தேவையான கணித சூத்திரங்களை தகுந்த இடங்களில் கருப்பு மையிட்ட பேனாவால் எழுதினால் நன்றாக இருக்கும். வரைபடத்திற்கும் மதிப்பெண்கள் உள்ளதால் வரை படங்கள் இருந்தால் பென்சில் கொண்டு அழகாக வரையவும்.

ஒவ்வொரு வினாவின் முடிவிலும் விடையை இறுதியில் எடுத்து எழுதுதல் அவசியம். அவ்வாறு விடையை எடுத்து எழுதினால் மடடுமே முழுமையான மதிப்பெண்கள் பெறமுடியும்.

6வது பாடத்தில் வளைவரை வரைதல் பகுதி யில் 3 வினாக்களையும், 9வது பாடத்தில் உள்ள வினாக்களையும் எழுத தேர்வு செய்யும் போது முடிந்தவரை பாடப் புத்தகத்தில் உள்ளது போன்றே எழுதினால் நன்று.  இந்தப் பகுதிகள் தியரியாக இருப்பதால் ஏதேனும் ஒருசில ஸ்டெப்கள் தவறினாலும் ஒன்றிரண்டு மதிப்பெண்களை இழக்க நேரிடும். எனவே, முழு மதிப்பெண் பெற, இதுபோன்ற தியரியாக விடை எழுதும் கணக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வொரு வினாவிற்கும் செய்யக்கூடிய Rough Work ஐ அதே பக்கத்தில் விடைத்தாளில் வலது ஓரத்தில் செய்து பார்ப்பது நல்லது. இது நாம் எழுதியதை திரும்பி சரிபார்க்கும்போது வசதியாக இருக்கும்.

கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, முடிந்தவரை அடித்தல் திருத்தல்களைத் தவிர்த்து கவனமுடன் ஒவ்வொரு வினாவையும் எழுதினாலே விடைத்தாள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிகபட்சமாக 30 நிமிடம், 6 மதிப்பெண் வினா ஒன்றுக்கு 5 நிமிடம் வீதம் 10 வினாக்களுக்கு 50 நிமிடம், 10 மதிப்பெண் வினா ஒன்றுக்கு 8 நிமிடம் என 80 நிமிடம்... இவ்விதம் 2 மணி 40 நிமிடங்களில் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும். மீதமுள்ள 20 நிமிடங்களில் எழுதிய விடைகளை சரிபார்க்க வேண்டும்.

விடைத்தாளை சரிபார்க்கும்போது, ஒவ்வொரு வினாவுக்கும் சரியான வினா எண் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை வினாத்தாளுடன்   ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். 1 மதிப்பெண் வினாக்களில் 40 வினாக்கள்,  6 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாவுடன் (வினா எண் 55) சேர்த்து 10 வினாக்களுக்கு, அதேபோல் 10 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாவுடன் (வினா எண் 70) சேர்த்து 10 வினாக்களுக்கு விடை எழுதியிருக்கிறோமா என்பதை சரிபார்க்க வேண்டும். 

வாழ்த்துக்கள் டியர் ஸ்டூடண்ட்ஸ்... கணக்கு உங்கள் வாழ்க்கையை மாற்றட்டும்.
(மோகன் தந்திருக்கும் வினாத் தொகுப்பு அடுத்தடுத்த பக்கங்களில்...)
படம் : ஏ.டி. தமிழ்வாணன்