இனி இல்லை வேலைவாய்ப்பு அலுவலகம்!



‘தாத்தாவும் அப்பாவும் பேரனும் ஒன்றாக வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குப் போகிறார்கள்’ என நாம் ஜோக் எழுதி சிரிக்கிறோம். ஆனால், இந்த அவலம் இந்தியாவில் நிஜம். தமிழ்நாட்டில் மட்டும் 94 லட்சத்து 58 ஆயிரத்து 161 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பதாக அரசே சமீபத்தில் தகவல் வெளியிட்டு பிரமிக்க வைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமே இவ்வளவு என்றால், இந்தியா முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள். இவ்வளவு பேருக்கு அரசு என்ன செய்யப் போகிறது? ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து விட்டது மத்திய அரசு. அதன் துவக்கம்தான் இந்தியா முழுவதுமுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை ‘கரியர் சென்டர்’களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும், 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இரண்டு உள்ளன. ஒரு காலத்தில் படித்த இளைஞர்கள் இந்த அலுவலகங்களில் பெயரைப் பதிவு செய்து, வேலை வரும் எனக் காத்திருந்ததுண்டு. ஆனால், இன்று பெரும்பாலான அரசுப் பணியிடங்கள் தனித்தனியே தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தித்தான் பூர்த்தி செய்யப்படுகின்றன. அவற்றில் முன்னுரிமை, சலுகை பெறவும்... மேலும், உதவித் தொகை காரணங்களுக்காகவும்தான் இன்றும் இத்தனை லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கிறார்கள்.

அதற்காக, ‘இந்த ஐ.டி யுகத்திலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அப்படியே இருக்க வேண்டுமா?’ என்ற கேள்வி மக்கள் மனதில் நெடுங்காலமாகவே இருந்து வந்தது. அதற்கு விடை தரும் விதமாக, இந்தியாவெங்கும் இருக்கிற வேலைவாய்ப்பு அலுவலகங்களை ‘கரியர் சென்டர்ஸ்’ என மாற்ற முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு நிறுத்திக் கொள்ளாமல், இளைஞர்களை அந்த வேலைக்குத் தகுதி பெற வைக்கும் உந்து சக்தியாகவும் இந்த மையங்கள் விளங்கும். அரசு வேலைகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களின் காலிப் பணியிடம் குறித்த தகவல்களும் இந்த மையங்களில் கிடைக்கும். நாடு முழுவதும் வேலை தேடுவோர், வேலை வழங்குவோர், வேலைத் திறன் பயிற்சி அளிப்போர் என அனைவரையும் இணையதளம் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் திட்டமும் இருக்கிறது. மெல்ல மெல்ல பரீட்சார்த்த முயற்சியாகத்தான் இந்த மாற்றம் நடைபெற இருக்கிறது. அதில் முதற்கட்டமே இந்த மாற்றம். தமிழகத்தில் கோவை மற்றும் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், இப்படி மாறும் 50 மையங்களில் அடக்கம். ‘‘இனி, இவை வேலைக்கு வழிகாட்டும் மையமாக இருக்கும்’’ என்கிறார்கள் அதிகாரிகள்!