கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் palli.in



படிக்கலாம் எழுதலாம் தகவல் அறியலாம்

‘நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வதில்லை’ என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் பல ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தை தங்களுக்கு ஏற்றவாறு வளைத்து வகுப்பறைக்குள்ளேயும் கொண்டு சென்று மாணவர்களை மேம்படுத்தி வருகிறார்கள். அவர்களில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீ.திலீப் குறிப்பிடத்தகுந்தவர்.

தகவல் தொழில்நுட்பத்தை வகுப்பறையில் திறம்படப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்காக ஜனாதிபதி விருது பெற்ற திலீப், http://palli.in என்ற இணையதளத்தை நடத்துகிறார். கற்றல், கற்பித்தல் இரண்டுக்கும் துணை செய்யும் பல்வேறு கருவிகளையும், பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலான பவர் பாயின்ட் ஆப்ஷன்களையும், வீடியோக்களையும் உள்ளடக்கி பெரும் சேவையாற்றுகிறது இந்த இணையதளம்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான இணைப்புகள் இந்த இணையத்தில் உள்ளன. அந்த இணைப் புகளை ‘க்ளிக்’கினால் தனித்தனி பிளாக்ஸ் பாட்டுகளுக்கு அழைத்துச் செல்கிறது. http://dhilipenglish.blogspot.in என்ற ஆங்கிலத்துக்கான பிளாக்ஸ்பாட்டில் பிரீ ஸ்கூல் முதல் பட்டதாரிகள் வரைக்குமான மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஆங்கிலத்தின் மீதான வெறுப்பையும் கசப்பையும் விரட்டும் வகையில் QUIZ, vocabulary A_B, Common Words, Enchanted Learning, Ego4u, Exercise, British Council, Games, Kids Stories, English Course,

Thesaurus, Short Stories, Riddles, Jokes, Have Fun என ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டு. விளையாட்டாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம். அமெரிக்கன் ஆங்கிலம், பிரிட்டிஷ் ஆங்கிலம், ஆஸ்திரேலியன் ஆங்கிலம் என ஒரு சொல்லை வெவ்வேறு நாடுகளில் உச்சரிக்கும் வழிமுறைகள் பற்றியும் ஒலி, ஒளி அமைப்பில் விளக்கங்கள் உள்ளன. ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொள்வதற்கான எளிய பாடங்களும் இடம் பெற்றுள்ளன.

http://dhilipmaths.blogspot.in பிளாக்ஸ்பாட்டில்   Video Lessons, Maths Work Sheets, Work Sheets, Game Sheets ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. அறிவியலுக்கான http://schoolscientist.blogspot.in பிளாக்ஸ்பாட்டில் Ideas, Indian Scientists, Science Toys, Experiments, Experimentstamil, Inspiring,  Nasa Kids ஆகிய பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. தவிர ஏராளமான அறிவியல் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. http://kidssocia.blogspot.in பிளாக்ஸ்பாட்டில் இந்திய அரசர்கள், இந்திய வரலாறு, உலக வரலாறு ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஆசிரியர்களுக்கான http://dhilipteacher.blogspot.in பக்கத்தில், ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரசாணைகள், கல்விச் செய்திகள், புதிய அறிவிப்புகள், 10ம் வகுப்பு, +2வுக்கான பாடத் திட்டங்கள், பவர் பாயின்ட் சிலைடுகள், இ-லைப்ரரி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி முறைகள், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி, புத்தாக்கப் பயிற்சிப் புத்தகங்கள்,

உலக வரை படங்கள், ஆடியோ புத்தகங்கள், ஆராய்ச்சிப் பேப்பர்கள், டி.இ.டி தேர்வுக்கான பாடத்திட்டங்கள், ஆசிரியர் சங்கங்களின் இணைய பக்கங்களுக்கான லிங்க்குகள் என இல்லையென்று சொல்ல ஒன்றுமில்லாத அளவுக்கு தகவல்கள் மிகுந்திருக்கின்றன. அரசு துறைகள், விண்ணப்பப் படிவங்கள், பல்கலைக்கழகங்களுக்கான இணைப்புகள் தரப்பட்டுள்ளன.

இவ்விதம் நல்ல பள்ளிக்கான முழுக்கல்வியையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது http://palli.in. ‘‘இணையம் இன்று உலகத்தைச் சுருக்கி விட்டது. அதைத் தவிர்த்துவிட்டு எந்தத் துறையும் இயங்கமுடியாது. குறிப்பாக கல்வித்துறை. ஆனால், இணையம் கத்தி மாதிரி. அதைப் பயன்படுத்தும் விதமே விளைவைத் தீர்மானிக்கும். மாணவர்கள், தங்களுக்குத் தேவையான ஒரு விஷயத்தை இணையத்தில் தேடினால் தேவையில்லாத 10 விஷயங்கள் அவர்கள் பார்வைக்கு வருகிறது.

அதனால் அவர்களுக்கான விஷயங்களை நானே தேடியெடுத்து ஒரு இணைய தளத்துக்குள் சேமிக்கிறேன். காட்சி வாயிலாக பயிற்றுவிக்கும்போது மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுகிறது. அதனால் நிறைய பவர் பாயின்ட்கள், வீடியோக்கள் தயார் செய்து பதிவிடுகிறேன். ஆசிரியர்களுக்கு நிறைய பணிச்சுமை.

 அந்த பணிச்சுமைக்கு மத்தியில் அவர்களுக்கு தேவையான தகவல்களைத் தேடி எடுக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் சுமையைக் குறைப்பதற்காகவே அரசாணைகள், அறிவிப்புகள், விண்ணப்பங்கள், ஸ்டடி மெட்டீ ரியல்கள், இணையதள லிங்க்குகளை ஒருங் கிணைத்து வழங்குகிறேன். என் ஆசிரியர் பணிக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில், உறங்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு இந்த இணையத்தை நிர்வகிக்கிறேன்...’’ என்கிறார் திலீப்.

- வெ.நீலகண்டன்