அட்டென்ஷன் அட்மிஷன் பெருமிதத்தில் ஒரு திருநங்கை



ஒரு காலேஜ் அட்மிஷன் சமூகத்தை திரும்பிப் பார்க்க வைக்குமா?வைக்கும் என நிரூபித்திருக்கிறார், தினேஷ்குமார். தன்னை திவ்யா என அழைப்பதை விரும்பும் திருநங்கை, இவர். சமூகத்தின் பல்வேறு புறக்கணிப்புகள், கேலிகளை எதிர்கொண்டு கல்வியில் சாதித்திருக்கும் இவர் இப்போது 175 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை மாநிலக் கல்லூரியின் ஸ்டூடண்ட். அரசுக் கல்லூரியில் உயர்கல்வி படிக்க ஒரு திருநங்கை காலடி எடுத்து வைத்திருப்பது  இதுவே முதல்முறை.

அதனால்தான் விழிவிரிய பேசுகிறார்கள் பேராசிரியர்கள். சமூகமும் அடடே என திரும்பிப் பார்க்கிறது.  அதுவும் உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்திற்குப் பிறகு திருநங்கை என்ற பாலினத்தை 'டிக்’ செய்து கல்லூரியில் சேர்ந்திருக்கும் திருநங்கை தி(வ்யா)னேஷ்தான் என்பதால் சிறப்பு கவனம் பெறுகிறார். வாழ்த்துக்களோடு சந்தித்தோம். “ப்ளீஸ்...என்னோட ஊர் பெயர், போட்டோ எதுவும் வேண்டாம். வீட்டுல பிரச்னையாகிடும்’’ என்கிற வேண்டுகோளோடு பேசத் தொடங்கினார் தி(வ்யா)னேஷ்.

“அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பையன். உடன் பிறந்தவங்க யாருமில்ல.அதனால, வீட்டுல நான் ரொம்ப செல்லம்.  சின்ன வயசுலேயே எனக்குள்ள நான் ஒரு பெண்ணுங்கற நெனப்புதான்  இருந்துச்சு. நான்காவது படிக்கும் போது ஸ்கூலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்ததும் பெண்களோட டிரஸ்தான் போட்டுக்குவேன். வீட்டுலயும் ‘சின்ன பையன் ஆசையா போட்டுகிறான்’னு விட்டுடுவாங்க. அப்புறம் 8வது படிக்கும் ஏதோ என்னோட மனத் தவிப்பு அதிகமாச்சு. அப்ப எனக்குள் என்ன நடக்குதுங்கற புரிதல் கொஞ்சம்கூட இல்ல.

வீட்டுலையும் இதை யாரும் புரிஞ்சுக்கல. எனக்கு ரொம்ப குழப்பமான டைம் அது. அந்த நேரத்துல ஸ்கூல்ல படிக்கும் மாணவர்களோட கேலியையும் சீண்டல்களையும் அதிகமா சந்திச்சேன். கிளாஸ்ல பசங்ககூட உட்கார மனசு ஒப்பாது. பொண்ணுங்க கூட உட்கார விடமாட்டாங்க. அவஸ்தையோட முதல் பெஞ்சுல உட்காந்திருப்பேன். நரக வேதனை அது. இப்படிதான் என்னோட ஸ்கூல் லைஃப் போனது.

அதே சமயம் படிப்புனா எனக்கு ரொம்ப இஷ்டம். அதுக்காக, எல்லா கேலிப் பேச்சு களையும் பொறுத்துக்கிட்டேன். நல்லா படிச்சு முதல் ரேங்க் வாங்கி எல்லோரையும் நம்மள திரும்பிப் பார்க்க வைக்கணும்னு நினைச்சிட்டே இருப்பேன். அதேமாதிரி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுல 436 மார்க் எடுத்தேன். ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் நான்.  அப்புறம் ப்ளஸ் டூவிலும் நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எல்லோரும் என்னை பாராட்டினாங்க. இருந்தும் அந்த சந்தோஷத்தை என்னால முழுமையா அனுபவிக்க முடியல. ஏன்னா எனக்கான அடையாளம் என்ன...நான் யாருங்கறதை பகிரங்கமா வெளிப்படுத்த முடியாத வயசு அது.

சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்களோங்கிற தயக்கத்துல வீடும் மௌனமா இருந்துச்சு’’என சோகம்  பொங்க சொல்லும் தி(வ்யா)னேஷ் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்த கதையை சொல்லும் போது புன்னகை பூக்கிறார்.  “பத்தாவது படிக்கும் போதே சில திருநங்கைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. வீட்டுக்கு தெரியாம அவங்களோட இயக்கத்துல சேர்ந்து வேலை செஞ்சேன். ஒருசமயம் சென்னை மாநிலக் கல்லூரி விண்ணப்பத்தை பார்த்தேன். அதுல பாலினம் பகுதியில திருநங்கைன்னு போட்டிருந்தாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பள்ளிப் படிப்பு முடிச்சதும் இங்க வந்து சேரணும்னு அப்பவே முடிவு செஞ்சேன்.

திருநங்கை உரிமை இயக்கத்தைச் சேர்ந்த ஜீவாம்மாதான் என்னை இந்தக் கல்லூரியில சேர்த்துவிட்டாங்க. பிளஸ் டூவுல கெமிஸ்டரி பாடத்துல 156 மார்க் எடுத்தேன்.
அதனால, இங்க வேதியியல் பிரிவுல சீட் கிடைச்சது’’ என்கிறார், உற்சாகமாக.

அவரைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் சாந்தி நம்மிடம், “எங்க துறையில அவங்க சேர்ந்ததும், ஆசிரியர்கள் மீட்டிங் போட்டு, ‘எங்க உட்கார வைக்கணும், எந்த கழிப்பறையை பயன்படுத்தணும், அதுக்கு அரசு விதி ஏதாவது இருக்கான்’னு எல்லாம் பேசினோம். பிறகு பெண்களோடயே உட்கார வைக்கலாம்னு முடிவு செய்தோம். மாணவர்கள், பணியாளர்கள் எல்லாருக்கும் அவங்களைப் பத்தி தெரியப்படுத்துனோம்.

இதனால, எல்லாரும் அவங்களைப் புரிஞ்சிகிட்டாங்க. எந்தப் பாகுபாடும் காட்டாமல் சகஜமாக பழகுறாங்க. அவங்களும் ரொம்ப ஆர்வமா படிக்கிறாங்க’’ என்றார்.  “மூணு வருஷமா எங்க ஃபார்ம்ல பாலினம் பகுதியில ஆண், பெண், திருநங்கை என மூன்று பாலினத்தையும் போட்டு வர்றோம். ஆனா, அப்ப யாரும் வந்து சேரல. எனக்கு தெரிஞ்சு தினேஷ்குமார் தான் முதல் திருநங்கையா இந்தக் கல்லூரியில படிக்க வந்திருக்கார். எங்க கல்லூரி பழமை வாய்ந்தது.

எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்படக் கூடியது. இங்கு ஒரு கோர்ஸ்ல சேர்ந்தால் பி.எச்டி வரை முடிச்சிட்டு வெளியே வரமுடியும். தினேஷூம் இந்த மாதிரி நிறைய படிக்கணும். இப்பகூட தினேஷ் இங்க படிப்பதை பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தியது விளம்பரத்திற்காக இல்லை. ஒரு விழிப்புணர்வு வரும் என்பதற்காகத்தான். நிறைய திருநங்கைகள் நம்பிக்கையோடு இங்கே படிக்க வரலாம்’’ என்கிறார், மாநிலக் கல்லூரி முதல்வர் முனைவர்.முகமது இப்ராஹிம்.

“இன்னும் ஒரு வாரத்துல என்னோட பெயரை திவ்யான்னு மாத்திக்கப் போறேன். இப்ப என்னோட ஆசையெல்லாம் பி.எஸ்சி வேதியியல்ல நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி ஃபர்ஸ்ட்டா வரணும்.  ஏன்னா, படிப்புதான் சமூகத்துல அங்கீகாரத்தை மதிப்பையும் பெற்றுத் தரும்னு நம்புறேன். அதன்பிறகு எம்.எஸ்சி., எம்.எட்., முடிச்சு ஒரு ஆசிரியரா ஜொலிக்கணும். இது என் கனவு. சீக்கிரமே அந்த கனவு நிறைவேறும்’’ என்று நம்பிக்கையோடு பேசும் தி(வ்யா)னேஷ்குமார் மூன்றாம் பாலின உலகின் நம்பிக்கை நட்சத்திரம்.

பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்