சீஸன் சாரல்
பாபனாசம் அசோக்ரமணி
சிக்கில் குருசரண்
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பில் சிக்கில் குருசரண் கச்சேரி. நல்ல சாரீரம். பளிச்சென்று முகம். இப்படி இவருடைய பல சங்கீத குணங்களுக்கு ரசிகர்கள் சரண். ஹெச்.கே.வெங்கட்ராம் வயலின் மிக அருமை. திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம்.
நாதம், விறுவிறுப்பு எல்லாவற்றிலும் கச்சேரி களை கட்டியது.கிரிதர் உடுப்பா கடம். தஞ்சாவூர் கல்யாணராமன் எழுதிய ‘குறமகள் மகிழ்’ என்ற கல்யாண வசந்த ராக கீர்த்தனையை குருசரண் பாடியது அருமையோ அருமை. ஸஹானா ராகத்தில் பல சங்கதிகள் ப்ராசீனமாக வந்து விழுந்தன. ‘கிரிபைநெல’ தியாகராஜர் கீர்த்தனையை நிர்வகித்த விதம் நேர்த்தி. வைத்தியநாதனின் தனி, கச்சேரியை எங்கேயோ எடுத்துச் சென்றது.
பிரம்ம கான சபையில் பரத் சுந்தர் கச்சேரி. பிரமாதமான சாரீரம். அலட்டிக்கொள்ளாத ஒரு சங்கீதம். திறமையான இளம் கலைஞர். அன்று நாகை ராம் வயலின். பத்ரி சதீஷ்குமார் மிருதங்கம். கே.வி.ஜி. கஞ்சிரா, மோஹன ராகத்தில் பிரமாதமாகப் பாடி ரசிகர்களை பிரமிக்க வைத்தார் பரத்சுந்தர். ‘ஜகதீச்வரி’ கீர்த்தனை கவர்ந்தது. ஷண்முகப்ரியா ராகம், பரத் சுந்தர் வசம் சரணாகதி. ராகம் தானம் பல்லவியை நிர்வாகம் பண்ணிய பரத் சுந்தரை பாராட்டியே ஆகவேண்டும். கண்ட நடை பல்லவியை, கடைசியில் ஒரு களையில் ஐந்து அட்சரமாகக் காட்டி, த்ரிகாலம் செய்தது அவர் திறமையைக் காட்டியது. நாகை ராம் கை தேன்தான். எதைக் கொடுத்தாலும் வாசிக்கக்கூடிய கலைஞர். பத்ரி சதீஷ் மிருதங்கம் இருந்தாலே கச்சேரி சக்ஸஸ்தான்.
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சபையின் தமிழ் இசை விழா தொடக்க நாளன்று, பாரதிய வித்யா பவனில் ராமகிருஷ்ணமூர்த்தி கச்சேரி. சாருமதி ரகுராம் வயலின். கே.வி.பிரசாத் மிருதங்கம். சந்திரசேகர சர்மா கடம். ‘சிவகாம சுந்தரி’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் கிருதி... பிறகு தோடி ராகத்தில் ‘நோற்று சுவர்கம்’ திருப்பாவை...
இரண்டையும் ராமகிருஷ்ணமூர்த்தி அருமையாகப் பாடினார். நல்ல பாடாந்திரம். பிகுசுகுவோடு பாடக்கூடிய இளம் பாடகர். திருப்புகழ் ‘மருக்குலாவிய’ பாடி, நிரவல் ஸ்வரம் எல்லாம் திறமையாகக் கையாண்டார். சாருமதி ரகுராம் வயலின் மிகப் பிரமாதம். ‘எந்நேரமும்’ கீர்த்தனை மனதைக் கவர்ந்தது. காம்போஜி ராகம் விஸ்தாரமாகப் பாடி, ‘காண கண் கோடி’ என்ற பாபனாசம் சிவனின் கீர்த்தனையைப் பாடியது மயிலை ரசிகர்களை மெய் மறக்கச் செய்தது. பிரசாத் மிருதங்கம் ரொம்ப அனுசரணை.
க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை நடத்தி பல இளம் கலைஞர்களை அமெரிக்கா அழைத்து ஆதரவு தருவது மட்டுமல்லாமல், சென்னை இசை விழாவிலும் பலருக்கு வாய்ப்பு கொடுத்து, ஆதரவு கொடுத்து வரும் க்ளீவ்லாண்ட் வி.வி.சுந்தரம் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த இசை விழாவில் பாடி அனைவரையும் கவர்ந்தார் இளம் பாடகி நிஷேவிதா ரமேஷ். நல்ல குரல். நல்ல பாடம். எல்லா அம்சங்களும் நிறைந்த பாட்டு. ‘ப்ரோவ வம்மா’
கீர்த்தனையை இந்த வயதில் நிர்வகித்துப் பாடியது சிறப்பு. ஹேமவதி ராகம், ‘ காந்திமதிம்’ கீர்த்தனை எல்லாம் சபாஷ் போட வைத்தது. ஹெச்.என்.பாஸ்கர் இந்த இளம் பாடகியை ஊக்குவித்து வாசித்தது சிறப்பு. வினீத் மிருதங்கம், திருச்சி முரளி கடம் என கச்சேரியில் பக்க வாத்தியங்கள் அனைத்தும் சோபித்தன.மியூஸிக் அகாடமியில் இளம் பாடகி சுஷ்மா ஸோமசேகரன் பாட்டு ரசிகர்களைக் கவர்ந்தது. நல்ல சுத்தமான பாடாந்திரம், லயம், குரல் எல்லாம் அமைந்த இளம் கலைஞர்.
‘பாஹிமாம் ’ என்ற நாட்டை ராக கீர்த்தனை, ‘ஞான சபையில்’ என்ற சாரங்க ராக பாபனாசம் சிவன் கீர்த்தனை எல்லாம் அருமை. நாட்டைக் குறிஞ்சி ராக கீர்த்தனையான ‘மாமவ ஸதா’, ‘விடஜாலதுரா’ தியாகராஜர் கீர்த்தனை கச்சேரியை களை கட்டச் செய்தது. பைரவி ராகத்தை கையாண்ட சுஷ்மாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். ‘பாலகோபால’ ரொம்ப சுத்தம். சந்தீப் ராமச்சந்திரன் வயலினும், சாய்சிவலக்ஷ்மி மிருதங்கமும் கச்சேரிக்கு ரொம்ப பக்கபலம். நல்ல எதிர்காலம் உள்ள கலைஞர் சுஷ்மா ஸோமசேகரன்.
படங்கள்: புதூர் சரவணன்
|