பசங்க 2 - விமர்சனம்
குழந்தைகளின் தன்மையைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைத் தன் பிடிக்குள் கொண்டு வர நினைக்கும் இரண்டு குடும்பங்களின் அவஸ்தைகளையும் அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வரும் இளம் டாக்டரின் முயற்சிகளுமே ‘பசங்க 2’.குழந்தைகளின் மனசைப் புரிந்துகொள்ளாமல் அவர்களைப் பிழியும் பரிதாப நிலையையும், அவர்களை அவர்களின் குறைகளோடு புரிந்துகொள்ளுதலின் அவசியத்தையும் பேசுகிறது படம். கொஞ்சமும் கமர்ஷியல் அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல், குழந்தைகள் தரப்பில் நின்று, அச்சு அசலாகப் படம் பிடித்த அக்கறைக்காகவும், துணிச்சலுக்காகவும் இயக்குநர் பாண்டிராஜ் டிஸ்டிங்ஷன் பாஸ்!
மத்திய தர மேல்தட்டுக் குழந்தைகளின் தயக்கங்களைக் களைய வைக்கும் உத்வேகமான கருத்துகள். ‘‘குழந்தைகள் எப்பவும் கெட்ட வார்த்தைய பேச மாட்டாங்க, கேட்ட வார்த்தையைத்தான் பேசுவாங்க’’, ‘‘மதிப்பெண்களை விதைக்கிறதுக்கு பதிலா மதிப்பான எண்ணங்களை விதைங்க’’, ‘‘மந்தமா இருக்கான்னு சொல்லாதீங்க; சாந்தமா இருக்கான்னு சொல்லுங்க’’ போன்ற வசனங்கள் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர் என மூன்று தரப்பினரும் ரசிக்க வேண்டிய ப(ா)டம்!
ஒவ்வொருவரின் மாணவப் பருவங்களையும், அதில் பிடித்திருக்கும் நினைவுகளையும் மீட்டெடுக்கிறார் பாண்டிராஜ். புத்திசாலித்தனத்தையே தொல்லையாக நினைக்கும் ஆசிரியர்களையும், சூட்டிகையான இயல்பையே சுட்டித்தனமாக நினைத்து பொருமும் பெற்றோர்களையும் சொன்ன விதத்தில் ‘பசங்க 2’ தனிக் கவனம் பெறுகிறது. குழந்தைகள் நிஷேஷ், வைஷ்ணவி இருவரும் கதையோடு ஒன்றுகிறார்கள்.
வைஷ்ணவி தலைமை ஆசிரியையிடம் நேர்காணலில் புதுவிதமாக ராமாயணக் கதைக்குள் ஸ்பைடர் மேன், ஹல்க், டோரா என சிறுவர்களின் விருப்பத்திற்குரியவர்களைப் புகுத்தி கதை சொல்லும் விதம் பார்த்துப் பார்த்து ரசிக்க வைக்கிற அழகு. நிஷேஷ் ஆரம்பத்திலிருந்து தன் கேரக்டரில் புகுந்து ‘விளையாடி’ இருக்கிறார். எங்கே சாவு குத்தாட்ட சத்தம் கேட்டாலும் எகிறி டான்ஸ் ஆடி எமோஷனல் ஆவது கலகலப்பு!
தனியார் பள்ளிகளின் மெத்தனம், அவர்களின் விசேஷமான கொள்கைகள், அவர்களிடம் கோபமுகம் காட்டும் ஆசிரியர்கள் எனப் பள்ளிக்கூடங்களின் இன்றைய கலவர நிலவரத்தை உள்ளும் புறமுமாகக் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சமூக அக்கறை. தாய்மை, தவிப்புடன் பொறுப்புள்ள பெற்றோர்களாக மாறத் துடிக்கும் பிந்து மாதவி - கார்த்திக், முனீஸ்காந்த் - திவ்யா ஜோடிகள் கச்சிதம்.
திடீரென என்ட்ரி ஆகி மனம் கவர்கிறார் சூர்யா. இனிமையும், தன்மையும் காட்டி, மாணவர்களை அழுத்தம் திருத்தமாகக் கையாண்டு நம் அன்புக்குரிய நண்பனை நினைவுபடுத்துகிறார். ‘இப்படி ஒரு டாக்டர் நம் அருகிலேயே இருந்தால் நன்றாக இருக்குமே’ என அத்தனை பெற்றோர்களையும் ஏங்க வைக்கிறார் சூர்யா.
வைஷ்ணவி க்ளைமேக்ஸில் உருக்கமான கதை சொல்லி கல்நெஞ்சங்களையும் கரைய வைக்கிறார். சமுத்திரக்கனி ஒரே காட்சியில் வந்தாலும் நம் மீது வீசுவது சாட்டையடி. அமலா பால் குழந்தைகளை அரவணைத்துக் கொண்டு செல்வது சித்திர அழகு. எனினும் அவருக்கான காட்சிகள் குறைவே. பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் ஸ்கிரீன் சேவராக மனம் மயக்குகிறது.
அரோல் கரோலி பின்னணி இதம் பதம்.பெற்றோர் தம் குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் விதத்தை எடுத்துக் காட்டியதற்காகவும், கை பிடித்து எதிர்காலத்திற்கு பெருவெளிச்சம் காட்டும் அக்கறைக்காகவும் இந்தப் ‘பசங்க’ளை கையில் ஏந்தி உயர்த்தலாம்.
- குங்குமம் விமர்சனக் குழு
|