குட்டிச்சுவர் சிந்தனைகள்
புத்தாண்டைக் கடந்திருக்கிற இந்த நேரத்தில் போன வருஷம் வந்த மறக்க முடியாத படங்களைப் பற்றி பார்ப்போம்... முதல்ல நாம பார்க்கப் போற படம் ‘கை’. குண்டாவ வச்சாவே போதும்ங்கிற இடத்துலயும் அண்டாவ வச்சுத்தான் படமெடுப்பேன்னு அடம்பிடிக்கும் பிரமாண்ட இயக்குநர் பங்கர் இயக்கத்துல, பொங்கலுக்கு நயன்தாரா நடுத்தெருவுல கோலம் போட வரேன்னு சொன்ன மாதிரி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்போட வந்த படம்தான் ‘கை’.
தள்ளுவண்டில தோசை சுட்டுக்கிட்டு இருக்கிற நம்ம ஹீரோ, தினம் டி.வில வந்து சமையல் நிகழ்ச்சி செய்யுற ஹீரோயின் மேல காதல் வயப்படுறாரு. ‘‘கட்டுனா இவளைக் கட்டணும்டா! இல்லைன்னா, இவளைக் கல்யாணம் பண்ணினவன் கைய வெட்டி முறிக்கணும்டா’’ என்ற கொள்கையோடு வாழுறார். எதிர்பாராத விதமா, ஹீரோயின் சமையல் நிகழ்ச்சில இருந்த தோசை வில்லன், ‘TRP டி.வி’யின் சமையல் போட்டிக்கு ஜட்ஜா போயிட்டதால, ஹீரோயினோட சேர்ந்து சமையல் பண்ண சான்ஸ் வருது ஹீரோவுக்கு.
இதனால கடுப்பான வில்லன், பஜ்ஜி சுட்ட எண்ணெயை ஹீரோ மூஞ்சில ஊத்தி அப்பளம் பொரிச்சிடுறாரு. கழுவி வச்ச தக்காளிப் பழமாட்டம் இருந்த ஹீரோவோட முகம், கிண்டி வச்ச கத்திரிக்காய் மாதிரி சுண்டிப் போயிடுது. ஹீரோயினையும் அப்படிப் பண்ணிடுவாங்கன்னு கிட்னாப் பண்ணி கிச்சன்ல இருக்கிற ஃபிரிட்ஜ்ல வச்சுக்கிட்டு படத்த நகர்த்த முடியாம இழுக்கிறதுதான் கதை.
அரபிக்கடல் முழுக்க அல்வாவ கொட்டுறது, சீனப் பெருஞ்சுவர் முழுக்க ஜிலேபிய ஒட்டி வைக்கிறது, ஈஃபிள் டவர் முழுக்க நூடுல்ஸ சுத்தி வைக்கிறது, பசிபிக் பெருங்கடல் முழுக்க பாயாசமா காட்டுறதுன்னு படம் முழுக்க கிராபிக்ஸ்ல பூந்து விளையாடியிருப்பாங்க. சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தை வடை சுடுற சட்டியா மாத்தறது, மேட்டூர் டேம்ல குலோப் ஜாமூன ஊறப் போடுறது, முல்லைப் பெரியாறு டேமுக்கு அடில அடுப்ப பத்த வச்சு மொத்த நீரையும் ரசமா கொதிக்க விடுறதுனு டைரக்டர் யோசிச்சதுல கொஞ்சத்தையாவது ‘இந்த கதைய மக்களுக்கு எப்படி காட்டுறது’னு யோசிச்சு இருந்திருக்கலாம்.
இந்த வருஷம் வந்ததில் மறக்க முடியாத இன்னொரு படம், ‘பருத்த வீரன்’ பார்த்தி நடித்த ‘கம்பன்’. கொதிக்கிற எண்ணெயில கொட்டுன கடுகைப் போல, தாளிக்கிற நேரத்துல தட்டுன தக்காளி போல, எப்பவும் மூஞ்சி மேல கோவத்தை ஆஞ்சி வச்ச ஹீரோவுக்கும், பொங்குற பால் மேல ஊத்துன தண்ணியைப் போல, பழைய சாம்பார பாதுகாக்கிற கிண்ணியைப் போல இருக்கும் மாமனாருக்கும் நடக்கிற பாசப் போராட்டம்தான் கதை.
வெகுநேரம் வெயில்ல நடந்தா தாகம் வர்ற மாதிரி, வெறுமனே நடந்தாக்கூட கோவம் வர்ற கேரக்டர்தான் நம்ம ஹீரோ. கோவம் வர்றப்பலாம், எதிர்ல யாரு இருந்தாலும், அவங்க காதை கைல புடிச்சு பீப் சாங் பாடிடுவாரு. ரொம்ப கோவமா இருந்தா, மொத்த பாட்டையும் விட்டுட்டு முதல் சரணத்தை மட்டுமே மூணு மணி நேரம் பாடி, அவங்க காதுல கடப்பாரைய விட்டு கிளறி கான்க்ரீட் கலவைய கொட்டி கம்ப்ளீட்டா கேட்காத மாதிரி செஞ்சிடுவாரு.
இப்படி இருக்கிறப்ப, ஊருக்குள்ள எங்க நடவு நட்டாலும் பொங்க வச்சாலும் ஓடி வந்து உள்ளூர்க் கிழவிகளோட சேர்ந்து குலவி சத்தம் கொடுக்கிற ஹீரோயின கண்டுட்டு, காதலிச்சு கல்யாணமும் பண்ணிடுறாரு. செல்போன் டவரோடவே போற நாய் மாதிரி, இந்த செல்லப் பொண்ணு போற இடத்துக்கு எல்லாம் கூடவே போற பொண்ணோட அப்பா, வீட்டோட மாப்பிள்ளைகள் மத்தியில், வீட்டோட மாமனாரா வந்திடுறார். சோறு போடுறதுக்கு முன்பே உப்பை அள்ளித் தின்ன ஒரு சந்தர்ப்பத்துல, சொந்த மாமானாருனு கூட பார்க்காம, கடும் கோவத்துல ஹீரோ தன் மாமனார் காதுலயே பீப் சாங்கை பாடிடுறாரு. இதனால அதிர்ச்சியடைஞ்ச மாமனாரும், கோவம்அடைஞ்ச ஹீரோயினும் வீட்டை விட்டுட்டு வெளிய போயிடுறாங்க.
அவங்க மனசை மாத்தறதுக்காக, பீப் சாங்குக்கு பதிலா, கம்ப ராமாயணப் பாடல்களை மனப்பாடம் பண்ணி ஹீரோ பாட பாடுபடுற கதைதான் கம்பன். ‘கம்பன் பாட்ட மட்டும் பாடினா, எங்க திருவள்ளுவர் என்ன தக்காளி தொக்கா’ என ஒரு குரூப்பும், ‘ஏன்... எங்க சிலப்பதிகாரம் என்ன செத்துப்போன அக்காவா’ என்று ஒரு குரூப்பும், ‘கம்பன்’ படத்தை எதிர்த்து போராட்டம் பண்ணினது வேறு கதை.
பம்பரத்த குப்புறப் போட்டு, அதிர அதிர ஆக்கர் அடிச்சா மாதிரி நம்ம நெஞ்சுல பசுமரத்தாணி போல பதிஞ்ச இன்னொரு படம் ‘ஸாரி’. இயக்குநர் செலவுராகவனோட தம்பி கனுஷ் பாரி என்ற வேடத்தில் பட்டாசா நடிச்ச படம். தெருவில ஓடி விளையாடுற ஒரு பையன், ஆடி கார் மேல மோதி அதன் பாடிய சேதமாக்க, கடுப்பா முகம் வாடி இறங்குற கார் ஓனரை தேடிப் போய் ஸாரி கேட்க, அதைப் பார்த்த ஏரியா ஜனங்க ‘மன்னிக்கிறவன் மனுஷன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்’னு அந்தப் பையன பெரிய ஆளாக்கி விட்டுடுறாங்க.
அதுக்கு அப்புறம் அந்த ஏரியாவுல, பஸ்ல பிரேக் புடிக்கிறப்ப தெரியாம இடிச்சாலோ, அடுத்தவன் பாக்கெட்ல பிக்பாக்கெட் அடிக்கிறேன்னு பர்ஸ் எடுக்கிறப்ப புடிச்சாலோ, சைக்கிளும் ஸ்கூட்டரும் மோதிக்கிட்டு ஓட்டுனர்கள் மாத்தி மாத்தி முறைச்சாலோ, வர்க்கி வைக்கலனு பக்கத்து வீட்டு நாய் விடாம குரைச்சாலோ, ஏரியாவுல எந்த பிரச்னைன்னாலும், முன்னால வந்து வாலன்டியரா ஸாரி கேட்பாரு நம்ம பாரி.
இப்படி ஹோட்டல்ல தோசை கருகுனா, சைக்கிள் பஞ்சரானா, ரேஷன் கடைல சீமெண்ணெய் தீர்ந்து போனா, தெருவுல டிரைனேஜ் அடைச்சுக்கிட்டா எல்லாத்துக்கும் தன்னால முன்னால வந்து ஸாரி கேட்குற பாரி அப்படியே ஏரியாவுல பெரிய கையாகுறார். ‘‘வெறும் ஸாரி மட்டும் கேட்டா பத்தாது, பாவ மன்னிப்பும் கேட்டாதான் இன்னமும் பெரியாளாக முடியும்’’னு அந்த ஏரியா சர்ச் பாதர் அவருக்கு அடைக்கலம் தராரு. இப்படியே போனாக்கா, வெயில் காலத்துல பாரியோட ஏரியாக்காரங்க, பக்கத்து ஏரியாவுக்கு தண்ணி லாரிய அனுப்பாம, அதுக்கும் பாரிய வச்சு ஸாரி சொல்லிடுவாங்கன்னு பயந்து அரசாங்கம் ஒரு போலீச அனுப்புது. மன்னிப்பு என்கிற வார்த்தையே புடிக்காத அந்த போலீசுக்கும் மழைக் காலத்துல வர காளான்கிட்ட கூட மன்னிப்பு கேட்கும் பாரிக்கும் நடக்கும் தர்மயுத்தம்தான் மிச்ச கதை. மொத்தத்துல பாரி, நம்ம நெஞ்சுல ‘ஸாரி’ படம் மூலம் பண்ணிட்டாரு கீறி.
நமது உள்ளத்தை கொள்ளை கொண்ட அடுத்த படமென்றால் அது, நவரச நாயகி பாதிகா (வேதிகா, ராதிகான்னு பேரை வேற மாத்த முடியாததால், இந்த பேரை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்) நடித்த ‘அறுபத்தாறு வயதினிலே’. வயதான காலத்தில் மூக்குக் கண்ணாடிய எங்கயாவது வச்சுட்டு தேடுறது, நம்ம காது சரியா கேட்கலை என்பதற்காக பாத்ரூம்ல இருந்து பத்து மைல் தூரம் கேட்கிற மாதிரி பாடுறது, ‘‘யூசுப் பாய்...
அப்பா பேன்ட ரெண்டு ஜாண் கம்மி பண்ணுங்க’’ன்னு மறதில பத்து பாஞ்சு தடவை உப்ப போடுறது, அதுவும் உப்பை தப்பா பாயாசத்துல போடுறதுன்னு செய்யும் பாதிகா பாட்டியை வீட்டில் உள்ள எல்லோரும் அவமதிக்கவும் புறக்கணிக்கவும் தொடங்க, தனிமையின் தவிப்பைப் புரிந்த பாட்டி, தன்னைப் போன்ற பாட்டிகளும் தாத்தாக்களும் மறதியில் தவிக்கும் தவிப்பை மாற்ற டெக்னாலஜி துணைக்கொண்டு, வழக்கமாக காணாமல் தேடும் கண்ணாடியில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவது, காணாமல் போன பல்செட்டை கூகுளில் தேடிக் கண்டுபிடித்துச் சொல்வது, வீடு துடைக்கும் மாப் ஸ்டிக்கை உடைத்து வாக்கிங் ஸ்டிக்காய் மாற்றுவது என பாரத தேசமே விரும்பும் பாட்டியாகும் கதை. க்ளைமேக்சில் பாதிகா பாட்டி, முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டில் கையால் பரிசாக பயணச்சீட்டு வாங்கும் காட்சி, போர்க் குழியிலிருந்து தண்ணீரை எடுப்பதைப் போல நம்ம கண்ல இருந்து கண்ணீரை எடுத்துவிடுகிறது.
இந்த வருடத்தின் சிறந்த படம்னா, அது இப்ப பார்க்கப் போற ‘தாத்தா முட்டை’தான். விஸ்கி, பிராந்தி, ஸ்காட்ச் என்றே குடித்துப் பழகிய வயசான ரெண்டு பணக்கார தாத்தாக்கள் எப்படியாவது நாட்டுச் சரக்கான பட்டை சாராயத்தை குடிச்சுப் பார்த்திடணும்னு கங்கணம் கட்டிக்கொண்டு எடுக்கும் விடா முயற்சியே இந்தப் படத்தின் அடி நாதம்.
நாட்டுச் சரக்கை குடிப்பதற்காக, அது எங்கெங்கு காய்ச்சப்படுகிறது என்று தமிழகம் முழுக்க ரமணா நெட்வொர்க்கோட சேர்ந்து தேடுறப்ப படுற கஷ்டமெல்லாம் கண்ணீரையும் புன்னகையையும் ஒண்ணா கொண்டு வரும். ஸ்காட்ச்சுக்கு மட்டை ஊறுகாயை சைட் டிஷ்ஷா இவங்க பயன்படுத்தினதை ஒருவர் வீடியோ எடுத்து டி.வி சேனல்களில் கொடுக்க, ‘பணக்காரர்கள் பட்டை சாராயத்துக்கு படும் கஷ்டத்தை பாருங்கள்’ என டி.வி சேனல்கள் டிஆர்பி ஏத்தின. இவங்க படுற கஷ்டத்தைப் பார்த்த எதிர்வீட்டு பாட்டி, குளுகோஸ்ல இருமல் மருந்தக் கலந்து கொடுத்ததே பரவாயில்லைனு சொல்லும் காட்சியில் தியேட்டரே 7.2 ரிக்டர் அளவில் குலுங்கியது. ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்
|