மொத்தமாக ரத்தாகுமா கேஸ் மானியம்?
‘சமையல் எரிவாயு மானியம் நேரடியாக நுகர்வோரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்’ என்று சொன்னபோதே, ‘மானியத்தை நிறுத்துவதற்கான தொடக்கம் இது’ என்று எச்சரித்தார்கள் சமூக ஆர்வலர்கள். அதுதான் நடந்திருக்கிறது. ‘ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வரி கட்டத்தக்க வருமானம் உள்ளவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் இல்லை’ என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ‘‘அடுத்த கட்டமாக, ‘எரிவாயுவுக்கு மானியமே இல்லை’ என்ற அறிவிப்பும் வரலாம்...’’ என்கிறார்கள்.
தற்போது நாடு முழுவதும் எரிவாயு மானியமாக ரூ.35,700 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் சுமார் 63 லட்சம் பேர். இவர்களுக்கு மானியத்தை ரத்து செய்தால் ரூ.1400 கோடி மிச்சமாகும். அதை இலக்கு வைத்துத்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இந்த ஜனவரி 1ம் தேதி முதல் இவர்கள் சந்தை விலைக்கே கேஸ் சிலிண்டரை வாங்க நேரும். ஆனால், ‘‘இதில் அரசுக்கு உள்நோக்கம் இருக்கிறது’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்தியாவில் 16.35 கோடி எரிவாயு இணைப்புகள் உள்ளன. வருடத்துக்கு 12 சிலிண்டர்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. சென்னையில், 14.2 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் சந்தை விலை, ரூ.622.50. (டெல்லியில் ரூ.608, கொல்கத்தாவில் ரூ.637.50, மும்பையில் ரூ.620). மத்திய அரசு ஒரு சிலிண்டருக்கு 216 ரூபாய் மானியமாக வழங்குகிறது (இந்தத் தொகை ஊருக்கு ஊர் வேறுபடுவது தனிக்கதை).
மானியங்கள் உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்காக, நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கிலேயே செலுத்தும் ‘பஹல்’ திட்டத்தை 2014ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி மத்திய அரசு கொண்டுவந்தது. 2015 ஜனவரி முதல் எரிவாயு மானியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, GiveItUp LPG Subsidy என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார் பிரதமர் மோடி. ‘வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து எரிவாயு மானியத்தை விட்டுத்தர வேண்டும்’ என்ற கோரிக்கையை அரசு எழுப்பியது. இதை ஏற்று, 57.5 லட்சம் வாடிக்கையாளர்கள் மானியத்தை விட்டுக் கொடுத்தார்கள். இதன்மூலம் சுமார் ரூ.3400 கோடி மிச்சமானது.
‘‘தற்போது தனி நபரின் வருமானத்தை கணக்கு வைத்து மானியம் பறிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, ‘குடும்ப வருமானம் இவ்வளவு இருந்தால் மானியம் கட்’ என்பார்கள். அடுத்த கட்டம், ‘5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கு மானியம் இல்லை’ என்பார்கள். இறுதியில், ‘கேஸ் சிலிண்டருக்கு மானியமே கட்’ என்ற நிலையில் வந்து நிற்பார்கள். இதுதான் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டம். பல நூறு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துவிட்டுச் சென்ற நோக்கியா நிறுவனம் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என்கிறார்கள்.
ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, வட்டித்தள்ளுபடி, மானியமாக வழங்கப்படுகிறது. இதைத் தவிர்த்தால் பற்றாக்குறையில்லாத பட்ஜெட்டே போடலாம். அதில் ஆர்வம் காட்டாமல் குடிமக்கள் வயிற்றில் அடிக்கப் பார்க்கிறது மத்திய அரசு...’’ என்கிறார், ‘இந்தியன் குரல்’ அமைப்பின் நிறுவனரும், நுகர்வோர் விவகாரங்களைக் கையாள்பவருமான பாலசுப்பிரமணியன்.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது. ‘‘மானியம் பெறுவது பெரும் குற்றம்; மானியத்தை திருப்பித் தராதவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற சித்தரிப்பை மத்திய அரசு உருவாக்குகிறது. கேஸ் விலையில் 40 சதவீதத்துக்கு மேல் வரிகளே நிறைந்திருக்கின்றன. இந்த வரிகளை முழுமையாக நீக்கிவிட்டால் மானியமே தேவையில்லை. இயல்பாக பாதி விலைக்குக் கிடைத்துவிடும். கல்வி, மருத்துவம், விவசாயம்... இது மூன்றுக்கும்தான் மானியங்கள் தேவை. பிற அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளுக்கு வரிகளைக் குறைத்தாலே போதும். அனைத்து தரப்பு மக்களுக்கும் வாங்கும் விலைக்கு அவை இறங்கிவிடும்...’’ என்கிறார் சிவ.இளங்கோ.
தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் சடகோபன் ஆதங்கமாகப் பேசுகிறார். ‘‘இந்தியாவில் மாத ஊதியம் பெறுபவர்களைத் தவிர பெரும்பாலானோர் தங்கள் வருமானத்தை முறையாகக் காட்டுவதில்லை. அந்த வகையில், முறையாக வருமான வரி கட்டுபவர்களுக்கு அரசு தரும் அதிகபட்ச தண்டனை என்றுதான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 63 லட்சம் பேர்தான் 10 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறார்களாம். அரசின் இந்த நடவடிக்கை, கேஸ் மீதான மொத்த மானியத்தையும் நிறுத்துவதன் தொடக்கம்தான். படிப்படியாக, மின்சார மானியத்தை நிறுத்துவார்கள். அடுத்து ரேஷன்... இதுதான் அரசின் திட்டம்’’ என்கிறார் அவர்.
பொருளாதார நிபுணர் நாகப்பன் அரசின் நடவடிக்கையை வரவேற்கிறார். ‘‘அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் 40 சதவீத வருமான வரி வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் அங்கு சாலை, தண்ணீர், மருத்துவம், போக்குவரத்து என எல்லாமே தரமாகக் கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் அரசே பொறுப்பேற்றுக் கொள்கிறது. ஆனால் இங்கு நிலைமை வேறு. சாலைகளே மோசமாகக் கிடக்கின்றன. ஆனால் அதற்கும் டோல்கேட்டில் கட்டணம் வாங்குகிறார்கள். இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்களிடம் இருக்கும் மனக்குறை நியாயமானது. இதுமாதிரியான சிறு சலுகைகளும் நிறுத்தப்படும்போது, அவர்கள் ஆதங்கப்படுவது சரிதான். ஆனால், தற்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கை ஆக்கபூர்வமானது.
நேர்மையானது. ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள், அதாவது ஆண்டுக்கு 30% வருமான வரி கட்டுபவர்கள், தங்கள் வருமானத்தில் வெறும் 1 சதவீதத்தைத்தான் மானியமாக விட்டுத் தரப்போகிறார்கள். இது பெரிய இழப்பில்லை. எதிர்காலத்தில் ஆண்டுக்கு 6 லட்சத்துக்கு மேல் (மாதம் 50 ஆயிரத்துக்கு மேல்) சம்பாதிப்பவர்களுக்கும் மானியம் கட் செய்யப்படலாம் என்று சிலர் அஞ்சுகிறார்கள்.
அவர்களுக்கும் தாராளமாக மானியத்தை நிறுத்தலாம். வருடத்துக்கு 5 லட்சத்துக்குள் சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே மானியங்கள் கிடைக்க வேண்டும். அதுதான் நியாயமானது’’ என்கிறார் பொருளாதார நிபுணர் நாகப்பன். இன்று, உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகளே நாட்டின் செயல் திட்டங்கள். ‘மானியத்தை நிறுத்து; அனைத்திலும் வணிகம் செய்’ என்பதுதான் உலக வர்த்தக அமைப்பின் வேத வாக்கு. அடுத்தடுத்து வரும் அரசுகள் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. தற்போதைய அரசு இறுதி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது!முறையாக வருமான வரி கட்டுபவர்களுக்கு அரசு தரும் அதிகபட்ச தண்டனை இது
- வெ.நீலகண்டன்
|