‘பூலோகம்’



குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்காவின் நாதன் ஜோன்ஸை நம்ம ஊர் ஜெயம் ரவி நாக் அவுட் செய்தாரா என்பதே ‘பூலோகம்’.தமிழ் மண்ணில் தொன்று தொட்டு நடந்து வந்த குத்துச்சண்டை போட்டியை...

அதன் பெரிய வரலாற்றை கொஞ்சமாய் புரிகிற மாதிரி சொல்லி ஆரம்பித்து வைக்கிறார்கள். நாட்டு மருந்து பரம்பரை, ராஜமாணிக்கம் பரம்பரை எனப் பெரும் கோஷ்டிகளாக அந்த விளையாட்டே பிரிந்து நிற்கிறது. ஜெயம் ரவியின் அப்பாவை, எதிர் பரம்பரை வீரர் தோற்கடித்து விட, அவமானத்தில் தூக்கிட்டு இறக்கிறார் அவர்.

தோற்கடித்தவரின் மகனை தோற்கடிப்பதே லட்சியமாக வளர்கிறார் ரவி. ரவிக்கும், ஜோன்ஸுக்கும் நடக்கிற இறுதிச் சண்டையில் யாருக்கு வெற்றி என்பதுதான் பரபர, சுறுசுறு, விறுவிறு க்ளைமேக்ஸ். பரபரப்பான தொய்வேயில்லாத முழு கமர்ஷியல், க்ளாஸ், மாஸ் கதையைக் கொடுத்ததற்கு அறிமுக இயக்குநர் கல்யாண  கிருஷ்ணனுக்கு வெரிகுட்!

ஜெயம் ரவி ‘பூலோகமாக’வே மாறிவிட்டார். குறும்புக் காதலன், சின்ஸியர் பாக்ஸர், அப்பாவின் கனவை விட்டுக் கொடுக்காத மகன் என அத்தனை அம்சங்களிலும் அதகளம் பண்ணுகிறார். கஞ்சி போட்ட சட்டைக்குப் போட்டியாக விறைத்து, முறைத்து, ஜிம் பாடி உடம்போடு அவர் எகிறி அடிக்கும் அடி ஒவ்வொன்றும் செம வெயிட்டு. ஸ்கிரீனில் அவர் இருக்கும்போதெல்லாம் தடாலடிதான். பிரகாஷ்ராஜின் குள்ளநரித்தனத்தை அவர் வெட்ட வெளிச்சமாக்கிவிடும் காட்சிகளில் தியேட்டரே கலகலக்கிறது.

குலசாமி அங்காளம்மனுக்கு படையல் போட்டு கொண்டாட்டமும், ஆக்ரோஷமும், ஆவேசமுமாக ஜெயம் ரவி ஆடுகிற ஆட்டம், கிளாஸ். நம்மையே மூச்சு வாங்க வைக்கிறது! அதே மாதிரி, ரவி தனது குரு பொன்வண்ணன் இறந்த பிறகும் பாடை புறப்படும்போது செய்கிற இறுக்க நெகிழ்ச்சி தருணங்கள் இலக்கியம்.
அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு சண்டை போட வந்த ஜோன்ஸுக்குக் கூட தமிழ் முகம் காட்டுகிறார்கள்.

அத்தனை உயரத்திற்கு வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு நடன அசைவுகளில் கலகலக்கிறார். தொடையில் ரவியின் படத்தை டாட்டூ போட்டுக்கொண்டு வருகிறார் த்ரிஷா. வெடித்துச் சிதறும் பதற்ற நிமிடங்களுக்கு மத்தியில் த்ரிஷாவின் கொஞ்சமே கொஞ்சம் கிளாமர் ஆறுதல்! பிரகாஷ்ராஜ் ரகசியத் திட்டங்களும், அந்தப் போட்டியை வைத்தே காசு பண்ணப் பார்க்கும் உத்திகளும் என மனிதன் பாதி மிருகம் பாதியாக தூள் கிளப்பியிருக்கிறார்.

குத்துச் சண்டையின் பூர்வீகத்தையும் வளர்ச்சியையும் சேர்த்து ஒரு திரைக்கதையில் இணைக்க முடிவதும், அதை புது வகையில் கொண்டு செல்வதுமே படத்தின் சுவாரஸ்ய ப்ளஸ். தமிழ் சினிமாவின் வெளிச்சம் படாத கருவைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த இயக்குநருக்கு வசனத்தில் முழு வீச்சு கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஜனநாதன். ‘‘அவன் பொழப்புக்கு பாக்ஸர், நான் பரம்பரை பாக்ஸர்...’’, ‘‘பாரம்பரியமான நாகரிகம் உள்ள நாட்டில் குளிக்க ஒரு சோப்பும், குடிக்க ஒரு சோடாவும் தயாரிக்க முடியுதா?’’ என வசன விளாசல் அருமை.

காந்த் தேவா, ‘மசானக் கொள்ளையிலே’ பாட்டில் எழுந்து நிற்க வைத்து, பின்னணியிலும் தோள் கொடுக்கிறார். சதீஷ்குமார் கேமரா குளுமையும் மோதல் அனலும் கலந்த காக்டெயில். மிராக்கிள் மைக்கேல், லானெல் ஸ்டோவெல் ஆக்‌ஷன் மிரட்டி எடுக்கிறது.இயக்குநர் கல்யாண கிருஷ்ணனின் இயக்கமும் ரவியின் உடல்மொழியும் ‘பூலோகத்தை’ உயர்த்தி விட்டன!

- குங்குமம் விமர்சனக் குழு