நினைவோ ஒரு பறவை 9



மூழ்கி மூழ்கி
மீண்ட கதை
இத்தனைக்குப் பிறகும்
அழாமல் இருந்தோம்
அழுகை வராமல் இல்லை
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால்
அழக் கூடாது!
- கவிஞர்

மனுஷ்ய புத்திரன்எந்த ஊரில் அடகுக்கடையைப் பார்த்தாலும் என் கைவிரல்கள் நடுங்கத் தொடங்குகின்றன. இந்த நடுக்கம் என் பால்யத்தில் ஆரம்பித்தது. சாலையில் எத்தனையோ கடைகள் இருக்க, அது எப்படி அடகுக்கடை மட்டும் என் கண்களுக்கு தனியாகத் தட்டுப்படுகிறது என்று கை நடுங்க வியந்திருக்கிறேன்.
எங்கள் ஊரில் இருந்த அத்தனை அடகுக்கடைகளின் முகவரிகளும் சிறுவயதில் எனக்கு அத்துப்படி. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், எங்கள் வீட்டு முகவரி எல்லா அடகுக்கடைகளுக்கும் அத்துப்படி.

‘ஓம்’ என்று எழுதி, அதற்கும் கீழே பிள்ளையார் சுழி போட்டு, அப்புறமும் மூன்று கோடுகள் வரைந்து ‘லாபம்’ என்று எழுதப்பட்ட அடகுக்கடைகளின் சுவரில் மாட்டியிருந்த குமரன் காலண்டர் அட்டையில் தரிசனம் தந்த முருகர், இப்ேபாதும் அடிக்கடி கனவில் வேலுடன் வந்து அந்த நாட்களுக்கு கூட்டிச்செல்கிறார். அப்பா அடகு வைத்த நகைகளைப் போலவே நானும் நினைவுகளுக்குள் மூழ்கிப் போகிறேன்.

மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நகைகள், பட்டுப்புடவைகள், ரேஷன் கார்டு என அடகு வைக்கக் காத்திருப்போர் வரிசையில் அப்பாவின் கைகளைப் பிடித்தபடி நின்றபோது ஆரம்பித்த நடுக்கம்தான், இப்போதும் தொடரும் நினைவுகளின் நதிமூலம்.மாதந்ேதாறும் வரும் பென்ஷன் பணத்தில், அந்தக்காலத்து TNSC வங்கி விளம்பரத்தின் சிட்டுக்குருவிகளைப் போல் ஆயா சிறுகச் சிறுக சேமித்து தங்கக்கம்மல் வாங்கி காதுகளை அலங்கரிக்கும். அந்தக் காதுகள் அப்பாவின் கண்களை அபகரிக்கும்.

‘‘ஏம்மா, வாலாஜாபாத்துல ஒருத்தரு மூட்டை மூட்டையா பழைய புஸ்தகம் வெச்சிருக்காராம். மொத்தமா விக்கப் போறாராம். உன் கம்மலைக் கொடுத்தீன்னா... ஒண்ணாந்தேதி திரும்ப மீட்டுக் கொடுத்திடுவேன்’’ என்று அப்பா கெஞ்ச, ‘‘இது ஒண்ணுதான் தங்கம்னு வீட்ல இருக்கு. இதுக்கும் உலை வெக்குறான்’’ என்று அழுதபடி ஆயா கழட்டிக் கொடுக்கும்.

ஆயாவின் காதுகளில் ஈர்க்குச்சி கம்மலாகவும், அப்பாவின் கைகளில் கம்மல் காசாகவும் மாறும். இன்றைக்கும் எல்லா ஊர்களிலும் அடகுக்கடைகளின் கண்ணாடிப் பேழைக்குள் இருக்கும் கம்மல்களில் உலர்ந்துகொண்டிருக்கிறது, ப்ரியமில்லாமல் கழட்டிக் கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி.விபரம் தெரிந்த வயதில், அப்பா என் கைகளில் மஞ்சள் அல்லது ரோஸ் நிற ரசீதுகளையும், பணத்தையும் கொடுத்து, ‘‘இந்த நகைங்க மூழ்கிப் போய் ரெண்டு மாசம் ஆவுது. நோட்டீஸ் வந்திருக்கு. இதை மூட்டுட்டு மறுபடியும் வெச்சி பணம் வாங்கிட்டு வா’’ என்று அனுப்பி வைப்பார்.

நான் உற்சாகமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்புவேன். அன்றைய சிற்றுண்டிக்கும், சினிமாவிற்கும் அப்பாவிடமிருந்து பத்து ரூபாய் பயணப்படி கிடைக்கும். இப்படி தினமும் அப்பா நகைகளை அடகு வைத்தால் நிறைய சினிமா பார்க்கலாமே என்று நினைத்துக்கொள்வேன். இப்போது யோசித்துப் பார்க்கையில், நகைகளைப் போலவே கழுத்து வரை மூழ்கியபடிதான் அப்பா எங்களைக் கரை சேர்த்திருக்கிறார் என்பது புரிகிறது.

ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் என் நண்பர்கள் அவர்களின் அத்தை, மாமா, பாட்டி அல்லது பெரியம்மா வீட்டிற்குக் கிளம்பிவிடுவார்கள். விளையாடுவதற்கு நண்பர்கள் இன்றி, நான் சென்னையில் இருக்கும் அம்மாவைப் பெற்ற ஆயா வீட்டிற்குச் செல்லும் கனவுடன் அப்பாவை நச்சரிக்கத் தொடங்குவேன்.
‘‘அடுத்த வாரம் போலாம்...’’, ‘‘நாளைக்குக் கூட்டிப் போறேன்’’ என்று அப்பா நாட்களை நீட்டிக்கொண்டே போவார்.

விடுமுறை முடிவதற்கு பத்து நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொரு வருடமும் அழைத்துப் போவார். மாமியார் வீடிருக்கும் சென்னைக்குச் செல்வதென்பது அவரது சம்பளத்திற்கு சற்று ஆடம்பரமான செலவு.இத்தனைக்கும் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பேருந்துக் கட்டணம் அந்த நாட்களில் வெறும் எட்டு ரூபாய்தான். ஆனால் அப்பாவிற்கு குறைந்தபட்சம் ஐந்நூறு ரூபாயாவது தேவைப்படும்.

முதலில் அம்மாவைப் பெற்ற ஆயா சிறுவயதில் எனக்குப் போட்ட முருகர் டாலர் வைத்த செயினை மீட்பார். அதற்குப் பிறகு கூடை நிறைய வெற்றிலை, பாக்கு, இனிப்பு, காரப் பலகாரம், வீட்டு மரத்தில் காய்த்த புளி என பயணத்திற்கான ஏற்பாடுகள் தயாராகும். நான் முருகர் டாலர் அணிந்தபடி ரஸம் போன கண்ணாடியில் அழகு பார்ப்பேன். ‘ஊர் திரும்பியதும் அது மீண்டும் அடகுக்கடைக்குச் சென்றுவிடும்’ என்று உள்மனது சொல்லும்.

அப்பாவுடன் போகும் பயணங்களை விரும்பாத பிள்ளைகள் உண்டா? அப்பாவின் தோள்களில் அமர்ந்து பார்க்கிறபோதுதான் இந்த உலகம் பெரியதாகவும், இன்னும் அழகானதாகவும் தெரிகிறது. அப்பாவின் வேலை எல்லாம் முடிந்த ஒரு மாலை நேரத்தில் சென்னைக்குக் கிளம்புவோம். வாலாஜாபாத் தாண்டி படப்பை வரும் வரை எங்கெங்கும் வயல்வெளிகளும், ஏரிகளும், பறவைகளுமாக என் ஜன்னல், கண்களை விரிய வைக்கும். இன்று அந்த விளைநிலங்கள், விலை நிலங்களாகி கான்க்ரீட் காடுகளாக மாறிவிட்டன.

விமானத்தைப் பார்க்கும் ஆவலுடன் ‘‘மீனம்பாக்கம் எப்போது வரும்?’’ என்று நான் அப்பாவை நச்சரிக்கத் தொடங்குவேன். பெரும்பாலும் ஒவ்வொரு பயணத்தின்போதும் மீனம்பாக்கம் வருகையில் நான் உறங்கிவிட்டிருப்பேன். அப்பா தலையில் குட்டிக் குட்டி என்னை எழுப்பி, தரையிறங்கும் விமானங்களைக் காட்டுவார். அன்று என் தலையில் குட்டிய கைகள் இன்றில்லை. எப்போது விமானத்தில் பயணித்தாலும், அப்பாவின் நினைவுகளுடன் பறந்துகொண்டிருக்கிறேன்.
சென்னைக்கு வந்ததும் நான் ஆயாவின் கழுத்தைக் கட்டிக்கொள்வேன்.

‘‘வாய்யா ராசா...’’ என்று ஆயா என் கன்னத்தில் வெற்றிலைக்கறை முத்தம் பதிக்கும். அப்பா, தான் வாங்கி வந்ததை ஆயாவிடம் கொடுப்பார். ‘‘எதுக்கு இவ்ளோ வெத்தலை. ஏதோ ஆட்டுக்குத் தழை பறிச்சுட்டு வந்த மாதிரி’’ என்று ஆயா அங்கலாய்க்கும். ஆனாலும் பழைய வெற்றிலையைத் துப்பி விட்டு, மருமகன் வாங்கி வந்த வெற்றிலையை புதிதாக வாயில் போட்டு மெல்லும்.

‘‘அப்ப நான் கௌம்பறேன்’’ என்று அப்பா சொல்ல, ‘‘இருங்க. தோசை சுடறேன். சாப்டுட்டு போங்க!’’ என்று ஆயா சொல்லும். ‘‘இல்ல... வேலை இருக்கு. இருட்டுறதுக்குள்ள ஊருக்குப் போகணும்!’’ என்று அப்பா கிளம்பி விடுவார்.அப்பா புறப்பட்டதும் ஆயா என் கழுத்தைத் தடவி டாலர் செயினைப் பார்க்கும். ‘‘உன் மொத பொறந்த நாளுக்கு போட்டது. இதையாவது விக்காம வெச்சிருக்கானே!’’ என்று அலுத்துக் கொள்ளும். அடகுக்கடையில் இருந்து அந்த செயின் தப்பித்து வந்த ரகசியத்தை ஆயாவிடம் சொல்லாமல் அடை காப்பேன்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் நான் வளரத் தொடங்கியதும், அப்பாவின் கவலை காணாமல் போனது. டாலர் செயின் இல்லாமலே என்னை சென்னைக்கு அழைத்துச் செல்வார். ‘‘அப்பா... ஆயா என் கழுத்தை தடவிப் பார்த்து செயின் எங்கன்னு கேட்குமே?’’ என்பேன். ‘‘செயின் சின்னதாயிடுச்சுன்னு சொல்லுடா’’ என்பார்.
வழக்கம்போல் ஆயா கேட்கும். நான் ‘‘செயின் சின்னதாயிடுச்சி!’’ என்பேன். ‘‘சின்னதானா என்ன? அடுத்த தடவை எடுத்துட்டு வா... பெருசா செஞ்சு போடறேன். ஆனா அதையும் அடகு வெச்சி உங்க அப்பன் புஸ்தகம்தான் வாங்குவான்!’’ என்று ஆயா கோபப்படும். ஆயாவிடம் சொல்லாமல் நான் அடை காத்த விஷயம் ஆயாவிற்கு எப்படித் தெரிந்தது என்று நான் ஆச்சர்யப்படுவேன். வாழ்க்கையில் அனுபவம்தான் அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறது. அன்று நான் அறிந்தது இதுதான். ‘இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமே இல்லை!’

அந்த செயினை அப்பா விற்றுவிட்டார் என்றே ஆயா நம்பியது. என் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஆயா அப்பாவிடம் கேட்டது. ‘‘இவனுக்கு நான் போட்ட டாலர் செயின் எங்க இருக்கு?’’ அப்பா சொன்னார்... ‘‘என்கிட்டதான் இருக்கு!’’ ‘‘இருக்குன்னா? கண்ல காட்டுனாதானே நம்ப முடியும்!’’ என்று ஆயா கேட்க அப்பா சொன்னார். ‘‘என் பொண்டாட்டிக்கு நீங்க போட்ட எல்லா நகையையும் அவ செத்த பிறகு உங்ககிட்ட கொடுத்தேன் இல்ல. அது மாதிரி இந்த செயினையும் கொடுப்பேன். அப்புறம் இன்னொரு விஷயம். கண்ல பார்த்தாதான் நம்புவேன்னு சொன்னா அப்புறம் இந்த உலகத்துல மனுஷங்க எதுக்கு?’’

அப்பாவின் மனஸ்தாபம் ஆயாவின் மேல் எனக்கும் தொற்றிக்கொள்ள, திருமணத்திற்குப் பிறகு நான் தனிக்குடித்தனம் வந்தேன். எத்தனைக் காலம் மனஸ்தாபம் நீடிக்கும்? அப்பா இறந்த பிறகு நடந்த மாமா பையனின் திருமண விசேஷத்தில் ஆயா என் கைகளைப் பிடித்து அழுதபடி வீட்டிற்கு அழைத்தது. என் மகனுடன் சென்றேன். கடந்த நாற்பது ஆண்டுகளாக அப்பா அடகு வைத்து, மீண்டும் மீட்டு, மீண்டும் அடகு வைத்த முருகர் டாலர் பதித்த செயினை என் மகன் கழுத்தில் அணிந்திருந்தான்.

அந்தச் செயினை ஆயாவிடம் காட்டி ‘‘இது என்னன்னு தெரியுதா?’’ என்றேன். ஆயா தன் நெஞ்சில் கை வைத்து இரண்டு அடி பின்னால் நகர்ந்தது. ‘‘அடப்பாவி! இத உங்கப்பன் வித்துட்டான்னு நெனைச்சேன். இன்னுமா இருக்கு? தப்பு பண்ணிட்டேன்டா!’’ என்று என் மகனைக் கட்டிக்கொண்டு அழுதது.இன்று அப்பாவும் இல்லை. ஆயாவும் இல்லை.

அந்த செயினின் இன்றைய மதிப்பு முப்பதாயிரத்திற்குள் இருக்கும். ஆனால் அதற்காக அப்பா அதன் மதிப்பையும் தாண்டி பல ஆயிரங்கள் செலவு செய்து நாற்பது ஆண்டு களாக திரும்பத் திரும்ப மீட்டு அடகு வைத்திருக்கிறார். ஏனெனில் அவர் செலவு செய்தது நகைகளின் மதிப்பிற்காக அல்ல, தன் வைராக்கியத்திற்காக!

அப்பாவுடன் போகும் பயணங்களை விரும்பாத பிள்ளைகள் உண்டா? அப்பாவின்  தோள்களில் அமர்ந்து பார்க்கிறபோதுதான் இந்த உலகம் பெரியதாகவும், இன்னும் 
அழகானதாகவும் தெரிகிறது. இன்றைக்கும் எல்லா ஊர்களிலும் அடகுக்கடைகளின் கண்ணாடிப் பேழைக்குள்  இருக்கும் கம்மல்களில் உலர்ந்துகொண்டிருக்கிறது, ப்ரியமில்லாமல் கழற்றிக்  கொடுத்த ஒரு பெண்ணின் கண்ணீர்த்துளி.‘‘கண்ல பார்த்தாதான் நம்புவேன்னு சொன்னா அப்புறம் இந்த உலகத்துல மனுஷங்க எதுக்கு?’’

(பறக்கலாம்..)

நா.முத்துக்குமார்

ஓவியங்கள்: மனோகர்