ரஜினிக்கு மீண்டும் படம்?
கே.எஸ்.ரவிகுமார்
M.I.P ஸ்பெஷல்
எதிர்பாராத பொங்கல் பரிசு கிடைப்பது போலத்தான், கே.எஸ்.ரவிகுமார் பேட்டி. இப்போது சுதீப்பை வைத்து அவர் இயக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ டைட்டில் போலவே, சின்னதொரு சேஸிங்கிற்குப் பின், கே.எஸ்.ஆரைப் பிடித்தோம். ‘தங்கமகன்’ படத்தில் சாஃப்ட் அப்பாவாக நடித்ததில் கே.எஸ்.ஆருக்கு சந்தோஷப் பாராட்டுகள் இன்னமும் குவிகின்றன.
‘‘அந்த அப்பா கேரக்டரை நீங்கதான் பண்ணணும்’னு ரெண்டு தடவை என்கிட்ட தனுஷ் கேட்டார். ‘நீங்க ஒரு முரட்டுத்தனமான ஆளுனு நிறைய பேர் நினைக்கறாங்க சார். இதுக்காகவே நீங்க ஒரு சாஃப்டான ரோல் பண்ணினா நல்லா இருக்கும்’னு அவர் சொன்னார். தனுஷுக்காக அந்த கேரக்டர் பண்ணியிருந்தேன். இப்போ எல்லாருமே, ‘இவருக்குள்ள இப்படி ஒரு மென்மையான மனசா?’னு பாராட்டுறாங்க. சந்தோஷமா இருக்கு!’’ - மெலிதான புன்னகையுடன், ‘‘டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்ப்பா’’ என ஆரம்பித்தார்.
‘‘சென்னை மழை, வெள்ளம்... உங்களையும் விட்டு வைக்கலை?’’‘‘ஆமாப்பா... சைதாப்பேட்டையில எங்க வீட்ல 8 அடிக்கு தண்ணி. கிரவுண்ட் ஃப்ளோர்ல ஜெனரேட்டர், ஸ்டெபிலைஸர், லிஃப்ட் ரூம், என்னோட மூணு கார்கள் எல்லாம் போச்சு. என் மகளோட ரூம் முழுக்க தண்ணி போயி நிறைய பொருட்கள் வீணாகிடுச்சு. அதே மாதிரி அசோக் நகர்ல என் ஆபீஸ்ல எடிட்டிங் ரூம் சேதமாகிடுச்சு. எதுக்கும் இன்சூரன்ஸ் பண்ணாததால, முப்பது லட்ச ரூபாய்கிட்ட நஷ்டம். எனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இப்படின்னா... எங்க ஏரியாவில நிறைய பேர் வீடே இழந்து தவிச்சாங்க. ஸோ, எங்க கவலையை ஒதுக்கி வச்சிட்டு அவங்களுக்கு உணவு ரெடி பண்ணிக் குடுத்தோம். சமையல் பாத்திரங்கள், வாட்டர் பாட்டில்கள், மெடிக்கல் கிட்ஸ்னு ஆயிரம் பேருக்கு உதவினோம்!’’ ‘‘ ‘முடிஞ்சா இவன புடி’ எப்படி வந்திருக்கு?’’
‘‘முழு ஷூட்டிங்கும் முடிஞ்சிடுச்சு. ‘முடிஞ்சா இவன புடி’... சுருக்கமா ‘எம்.ஐ.பி.’ இதை தமிழ், கன்னடம்னு ஒரே நேரத்தில் ரெண்டு மொழிகள்ல கொண்டு வர்றோம். கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் இமேஜ் உள்ள ஹீரோ சுதீப். தமிழ்ல அவருக்கு வில்லன் இமேஜ்தான் இருக்கு. இந்த ரெண்டு இமேஜுக்கும் அவர் நியாயம் செய்கிற மாதிரி ஒரு கதை இது. டைட்டில் மாதிரியே சேஸிங்கும், ஆக்ஷனும் அள்ளும். காமெடி, ஆக்ஷன், பாடல்கள்னு செம கமர்ஷியல் பேக்கேஜா இருக்கும். ஆக்சுவலா, இது ‘லிங்கா’வுக்கு முன்னாடியே பண்ண வேண்டிய கதை.
‘லிங்கா’வோட கதை ரஜினி சாருக்கு பிடிச்சுப் போனதால, உடனே அதை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. சுதீப்பும், தயாரிப்பாளர் ராம்பாபுவும் ‘பரவாயில்ல... முதல்ல ரஜினி சாருக்கு பண்ணிட்டு வாங்க. அப்புறமா நம்ம படத்தை பண்ணிக்கலாம்’னு க்ரீன் சிக்னல் குடுத்தாங்க. ‘லிங்கா’ முடிச்சிட்டு உடனே தொடங்கிட்டோம். ‘நான் ஈ’ படத்துலயே சுதீப் என்னைக் கவர்ந்திட்டார். என் கூட படம் பண்ணணும்னு அவரும் விரும்பினார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில மட்டும்தான் நித்யா மேனன் நடிப்பாங்க. இந்தப் படத்தோட கதை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
படத்துல சரத், முகேஷ் திவாரினு நிறைய வில்லன்கள் உண்டு. நாசர், பிரகாஷ்ராஜ்... ரெண்டு பேருக்கும் நல்ல ரோல். காமெடிக்கு சதீஷ், இமான் அண்ணாச்சி. சேஸிங் ஆக்ஷன் கதைக்கு இமானோட இசை ப்ளஸ்ஸா அமையும். கதை - வசனத்தை சிவக்குமார் எழுதியிருக்கார். வழக்கம் போல திரைக்கதை, டைரக்ஷனை நான் பண்ணியிருக்கேன். பிரமாதமான டெக்னீஷியன்கள் டீம் அமைஞ்சிருக்கு. மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணின ராஜரத்தினம்தான் கேமரா. ஆக்ஷன் கமர்ஷியல்ல கேமராவொர்க் முக்கியமானதுனு அவர் நிரூபிச்சிருக்கார். ‘விஸ்வரூபம்’ ஆர்ட் டைரக்டர் இளையராஜாவோட செட்டுகள் பிரமாதமா வந்திருக்கு. டீஸர் வெளியிட்டிருந்தோம். பார்த்திருப்பீங்க. ஸ்டன்ட்ஸ் கனல் கண்ணன். பின்னியெடுத்திருக்கார். கொஞ்சம் பொறுமையா ஏப்ரல்ல வர்றோம்!’’ ‘‘ரஜினி சார்கிட்ட டச்ல இருக்கீங்களா?’’
‘‘மாசத்துக்கு ஒரு முறையாவது அவர்கிட்ட பேசிடுவேன். இந்த பிறந்த நாள் அன்னிக்குக் கூட அவர் ஷூட்டிங்ல இருந்தார். போன்லதான் வாழ்த்து சொன்னேன். பத்து நிமிஷம் பேசினோம். ‘கபாலி’க்கு விஷ் பண்ணினேன். ‘ரசிகர்கள் உங்ககிட்ட பன்ச் டயலாக்ஸ் எதிர்பார்க்குறாங்க. ஏதாவது புது ஸ்டைல் எதிர்பார்க்குறாங்க’னு ரஜினி சார்கிட்ட சொன்னேன். சந்தோஷமா கேட்டுக்கிட்டார். ‘கபாலி’ தொடங்குறதுக்கு முன்னமே, ஒரு ஃபங்ஷன்ல ரஞ்சித்தைப் பார்த்து வாழ்த்தினேன்!’’ ‘‘பெரிய ஹீரோ, ஹீரோயிசம் எதுவும் இல்லாத பேய்ப் படங்கள் ஹிட் ஆகுது. அதே சப்ஜெக்ட்ல பெரிய ஹீரோ நடிச்சா சரியா போக மாட்டேங்குது. இனிமே ஹீரோயிசம் எடுபடாதா?’’
‘‘ஹீரோயிஸம் இருக்கு! அது இல்லன்னா பெரிய ஆர்ட்டிஸ்ட் படங்களுக்கு ஓபனிங் எப்படி கிடைக்குது? அந்த ஓபனிங்தான் ஹீரோயிஸம். சின்ன படமோ, பெரிய படமோ... எல்லாப் படங்களுமே இப்ப ஒரு வாரம்தான்! இதைப் புரிஞ்சுக்கிட்டா பிரச்னை இல்லை. அடுத்த தலைமுறை இயக்குநர்கள்ல ஹரி, சுசீந்திரன் எல்லாருமே நல்லா பண்றாங்க. இப்போ வர்ற படங்கள் எல்லாமே கமர்ஷியல் படங்கள்தான். ‘காக்கா முட்டை’யும்கூட கமர்ஷியல் படம்தான். நாலு பாட்டு இருக்கே! வேண்டுமானா, யதார்த்தம் அதிகம் உள்ள படம்னு அதைச் சொல்லலாம்!’’
‘‘ ‘லிங்கா’ சரியா போகலைனு வருத்தம் இருக்கா?’’‘‘ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? 2015ல அதிகமா வசூல் ஆன படம்னு ‘லிங்கா’வைத்தான் சொல்றாங்க. உலக அளவில் 158 கோடி ரூபாய் வசூல் பண்ணின தமிழ்ப் படம் அது. அதே மாதிரி வசூல் பண்ணின படம், அதுக்கு முன்னாடி ‘எந்திரன்’தான். 158 கோடி வசூல்ங்கறது சாதாரண கலெக்ஷன் இல்லையே! படம் வசூல்ல ஹிட்தானே!’’
‘‘ரஜினி சாரோட மறுபடியும் படம் பண்ணுவீங்களா?’’‘‘ரஜினி சார் மட்டுமில்ல. எந்த ஹீரோகிட்டேயும் நான் பட வாய்ப்புகள் கேட்டு பழக்கமில்லை. அவங்களா விரும்பி பண்ணச் சொன்னால் சந்தோஷம். இல்லன்னா வருத்தமில்ல. நல்லதொரு நட்பைத் தொடருவேன். எந்த நடிகர்களோடவும் எனக்குத் தகராறே வராது. சினிமாவை நான் தெய்வமா நினைக்கறேன். டெடிகேஷனோட உழைக்கறேன். அதனாலேயே என்னை எல்லாருக்கும் பிடிக்கும்!’’ ‘‘சுதீப் - நித்யா மேனன் லவ் பண்றாங்கனு சொல்றாங்களே?’’
‘‘ஷூட்டிங்ல ஷாட் பிரேக்ல ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருக்கறது எல்லா படப்பிடிப்பிலும் சகஜம்தான். அவங்க நட்பா பழகுறாங்க. அதைக் காதல்னு நான் சொல்லமாட்டேன். அதை அவங்கதான் சொல்லணும். மத்தவங்க பர்சனல் மேட்டர்ல நான் தலையிடுறதில்ல!’’
- மை.பாரதிராஜா
|