விஜய் இன்னும் நல்ல மனுஷன்னு பெயர் வாங்கணும்!
முழு நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன். ‘நையப்புடை’ ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.‘‘சினிமாவுக்கு வந்து 50 வருஷமாச்சு. டைரக்டர் ஆகி 35 வருஷம் ஆச்சு. தங்கச்சிமடத்திலிருந்து தாகத்தோட வந்தேன். டைரக்டர் ஆகி, தயாரிப்பாளர் ஆகி, இன்னிக்கு முழுநேர நடிகன் ஆகிட்டேன். 73 வயதாச்சு. வீட்ல ரெஸ்ட் எடுக்கணும்னு வற்புறுத்தல்.
விஜய் சார் அதை என்னைத் தவிர எல்லார்கிட்டயும் சொல்லிப் பார்த்துட்டாரு. திடீர்னு தாணு சார் வந்து இதுக்கு அட்வான்ஸ் கொடுத்தார். அடுத்து டைரக்டர் விஜயகிரண் வந்தார். அவர் கதையை 25 நிமிஷம் குறும்படமா காட்டினதில் நான் இம்ப்ரஸ் ஆகிட்டேன்!’’ - அனுபவத்தின் நிழலடியில் அமர்ந்து பேசுவது எப்போதுமே சுவாரஸ்யம்தான்...
‘‘தலைப்பு ஒரு ஆக்ஷன் படத்திற்குரிய தலைப்பு...’’‘‘என்ன ஆச்சரியம்னா, என்னையே நினைத்து ஸ்கிரிப்ட் செய்திருக்கார். கிராமத்திலிருந்து ஓடிப் போய் மிலிட்டரியில் சேர்ந்து, சென்னைக்குத் திரும்பி, எளிய மக்களின் குழந்தைகளோடு குழந்தையாகத் திரிகிற கேரக்டர். என் கோபமான இயல்பை இதில் அப்படியே பதிவு செய்திருக்கார். 20 வயதில் ஒரு டைரக்டர் 73 வயது ஆளை நினைவில் வச்சுக்கிட்டு கதை பண்றது நிச்சயம் வயசுக்கு மீறிய இயல்பு.
இந்த வயதில் அமிதாப், ஓம்பூரி இப்படிப் பல பேர் கதை நாயகர்களா இருக்கும்போது இங்கே நானும் அப்படி வர நியாயம் இருக்கு. ஆனாலும் டைரக்டர்கிட்ட ‘எனக்கு நடிக்கத் தெரியாது’னு உண்மையைச் சொல்லிட்டேன். ‘அப்படியே இருங்க... உங்க இயல்புதான் படம்’னு சொல்றார்.
இப்ப திடீர்னு டைரக்டர் துரை செந்தில்குமார் வந்து, ‘தனுஷ் ஹீரோவா பண்ற படத்தில் ஒரு ஸ்டேட்டஸான ரோல் இருக்கு. நீங்கதான் சரியா வருவீங்க’னு நிற்கிறார். சினிமாவை நேசித்தால் அது நம்மளை உட்கார விடாது போலிருக்கு. படம் முழுக்க என்னையே பார்த்துட்டு இருக்க முடியாதுனு எனக்குத் தெரியும். அதனால் பா.விஜய்க்கு ஒரு வலுவான, சமமான கேரக்டரை உருவாக்கி, அவரும் என்னோடு இதில் இறங்கியிருக்கார். ஒரு கெரில்லா வீரன் மாதிரி புது உத்திகளில் ஜெயிக்கிற காட்சிகள் இருக்கு. டைரக்டர் விஜயகிரண் அபாரம். என் அனுபவத்திற்கு அவரோட அடுத்த சீனை என்னால கண்டுபிடிக்கவே முடியலை. இப்ப இளைஞர்கள் கையில் சினிமா இருக்கு!’’
‘‘எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. நன்றியா இருக்காங்களா?’’‘‘என்ன நன்றியை எதிர்பார்க்கிறது? எங்க பார்த்தாலும் மரியாதையா ‘வணக்கம் சார்’னு கும்பிடுறாங்களே... அது போதும். விஜயகாந்த், ரகுமான், விஜய்னு மூணு பேரை ஹீரோவா கொண்டு வந்தேன். விஜயகாந்த் ‘எங்க டைரக்டர் வர்றாரு’னு சொன்னா அது நான்தான்.
எத்தனையோ டைரக்டர்களோடு வேலை பார்த்தும் அப்படிச் சொல்றது எவ்வளவு பெரிய பெருமை! அவருக்கு குழந்தை மனசு. அவரெல்லாம் அரசியலில் இருப்பது ஆச்சரியம். ஷங்கர் என்னோட 17 படங்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தார். இன்னிக்கு பிரமாண்ட டைரக்டர். செந்தில்நாதன், பவித்திரன், வின்சென்ட் செல்வா, ராஜேஷ், பொன்ராம் இவங்க எல்லோரும் என் விழுதுகள்தான். ஆனா, வெளிநாடு போனா ‘விஜய் அப்பா போறாரு பாரு’னு சொல்றாங்க இல்லையா, அப்படியே மனசு நிறையும் தெரியுமா!’’
‘‘விஜய் எப்படி வரணும்னு மனப்பூர்வமா நினைக்கிறீங்க?’’‘‘இப்ப அவர் ஏதாவது உதவி செய்தால் வெளியே தெரிஞ்சிடும். அப்படித் தெரியக் கூடாதுனு நினைக்கிறார். தினமும் 15 மூட்டை அரிசி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு போய்க்கிட்டே இருக்கு. நல்ல நடிகர், வெற்றி பெற்றவர்னு பெயர் வாங்கினால் போதாது. இன்னும் நல்ல மனுஷன்னு பெயர் வாங்கணும். படத்தில் ஹெல்ப் பண்ற மாதிரி நடிக்கிறது பெரிய விஷயமில்லை. அவர் இன்னும் நல்ல மனுஷன்னு சொல்லக் கேட்கிறதில்தான் எனக்குப் பெருமை, ஆத்ம திருப்தி. இவ்வளவு பெரிய வெற்றியை அவருக்குக் கொடுத்தது மக்கள்தான். மக்களை அவர் மறக்கக் கூடாது. அவர் கவனம் உதவி செய்யிறதில் இருக்கணும்!’’
‘‘இந்த அனுபவத்தில் நீங்க உணர்ந்தது என்ன?’’‘‘நான் அதிகம் படிக்காதவன். தமிழே சரியா தெரியாது. கன்னடம் ஒரு வார்த்தைகூட தெரியாது. இந்தி கொஞ்சம் புரியும். தெலுங்கு பேச மட்டும் கத்துக்கிட்டேன். ஆனா, ராஜேஷ் கன்னா, அமிதாப், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், ரஜினினு பெரிய பெரிய ஸ்டார்ஸ் படங்கள் பண்ணிட்டேன். அவங்ககிட்ட நான் பார்த்தது எளிமைதான். ரஜினிகிட்டயே கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.
நம்மளை படிப்பறிவு உயர்த்தாது; திறமை கூட உயர்த்தாது. கடுமையான உழைப்பு மட்டும்தான் உயரத்தில் கொண்டு போய் வைக்கும். அதுதான் என்னையும், என் பிள்ளையையும் கொண்டு போய் நல்லபடியா வச்சிருக்கு. எங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துடாமல், 22 வருஷம் ராணி மாதிரி பார்த்துக்கிட்டேன். எங்க வேதத்துல ‘தாயை உயர்த்தினால்... உன்னையும் உயர்த்துவேன்’னு ஒரு வரி வருது. என்கிட்ட டிரைவரா இருந்தவரை தயாரிப்பாளரா மாத்தியிருக்கேன். பி.ஆர்.ஓவா இருந்த பி.டி.செல்வகுமாரை நாலாவது படம் தயாரிக்க வச்சிருக்கேன்.
நான் பரபரப்பா இருந்த காலத்துல 50 படம் பண்ணிட்டேன். காலை ஆறு மணிக்கு எழுந்திருச்சு போயி, ராத்திரி 10 மணிக்கு திரும்புவேன். அந்த இரண்டு நேரத்திலும் விஜய் சார் தூங்கிட்டு இருப்பார். பாண்டி பஜார் பக்கமா போனா, அங்கே தெரு ஓரமா நான் படுத்துக் கிடந்ததை நினைச்சுப் பார்ப்பேன். இப்ப நான் அதே வழியில் பி.எம்.டபிள்யூவில் போறேன். என் மகன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் போறாரு. உழைப்புக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் இது!’’
- நா.கதிர்வேலன்
|