ரிஷப லக்னத்துக்கு சுக்கிரனும் சனியும் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் 19
ஜோதிட சாஸ்திரத்தின் மாபெரும் அத்தியாயமே சனி கிரகம்தான். வான சாஸ்திரப்படி பல துணைக் கோள்களைத் தன்னிடத்தே கொண்டிருக்கின்றது இது. சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் குளிர்ச்சி பொருந்தியதாக இருக்கிறது.
கார்பன் உள்ளிட்ட பல்வேறு வேதிப் பொருட்களையும் தன்னிடத்தே கொண்டது. இந்த கிரகத்தோடு சுக்கிரன் சேர்வதென்பது நன்மையைத்தான் பெரும்பாலும் தரும். பொதுவாகவே சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்களாகும். கலையுணர்வைக் கொடுக்கும் சுக்கிரனோடு கறாரான கிரகமான சனி சேர்ந்தால், ஈடு இணையற்ற செயல்களை அநாயாசமாகச் செய்யும் வலிமையைப் பெறலாம். சுக்கிரனின் அழகும், சனியின் உழைப்பும் சமூகத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும். எல்லா கனவுகளுமே பிரமாண்டமானதாக இருக்கும். தேசிய அளவில், மாநிலம் தாண்டி என்றுதான் எதையுமே யோசிப்பார்கள். எனவே, இவர்கள் இருவரும் பன்னிரெண்டு ராசிகளிலும் நிற்பதால் ஏற்படும் பலன்களை அறிவோமா!
ரிஷப ராசியிலேயே - அதாவது லக்னத்திலேயே - லக்னாதிபதியான சுக்கிரனும், பாக்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான சனியும் சேர்ந்திருப்பது நல்லதாகும். மேலும் சனியானவர் இப்படி சுக்கிரனோடு அமரும் ஜாதகம் அமைந்தால், தந்தையாரை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில், தந்தைக்குரியவராக சனி பகவான் வருகிறார். வெளியாட்களிடம் தந்தையாரை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள்.
ஆனால், நேருக்கு நேர் நின்று பேசினால் தந்தையாரோடு பிரச்னை வரும். ‘‘இவ்வளவு செல்வாக்கு இருந்து எனக்கு நீ என்ன செய்து விட்டாய்?’’ என்று வார்த்தைகளால் தந்தையைத் துளைத்து எடுப்பார்கள். தந்தையாரிடமிருந்து வித்தியாசப்பட வேண்டுமென்று ஏதேனும் சாதிக்கத் துடிப்பார்கள். தந்தையுடன் ஏதேனும் ஒரு நிழல் யுத்தம் இருந்தபடி இருக்கும். ஆனால், பாட்டனாரை மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு தோல் கருவிகள் வாசிப்பதில் மிகவும் ஈடுபாடுண்டு.
சிலர் வித்வான்களாக வருவார்கள். கார் தொடர்பான வியாபாரம் அல்லது சர்வீஸ் சென்டர் வைப்பார்கள். அதேபோல அரிசி மண்டி வைத்து நடத்துவார்கள். இவர்களுக்கு ஜமீன்தார் போல வாழும் ஆசையுண்டு. கூடவே தயாள குணமும் உண்டு. சருமத்தில் ஒவ்வாமை பிரச்னை இருந்தபடி இருக்கும். தூக்கமின்மையும் கண்களைச் சுற்றிலும் வளையமும் வரும். பழைய பொருட்களைப் பாதுகாப்பார்கள். இது கொள்ளுத் தாத்தாவின் கையெழுத்து, மூக்குக் கண்ணாடி, கட்டில் என்று பெருமை பொங்க பேசுவார்கள்.
மிதுனத்தில் இந்த இரு கிரகங்களும் சேர்ந்திருந்தால், காதில் கடுக்கண், வளையம் என மாட்டிக் கொள்வார்கள். இவர்களுக்கு காதில் ஏதேனும் இரைச்சல் இருந்தபடி இருக்கும். ‘வீர்யத்தைவிட காரியம்தான் பெரிது’ என்று நினைத்து காரியமாற்றும் திறமையும் உண்டு. தாவரவியல், வனவியல் கல்வியில் சேர்ந்து வித்தியாசமாக வருவதற்கு முயற்சிப்பார்கள். பத்தாம் வகுப்பு வரையிலும் சுமாராகப் படித்த இவர்கள், பிளஸ் 2வில் வெளுத்து வாங்குவார்கள். சிறியதாக மாறு கண் அமைப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு மூன்று நாட்கள் கண்களே திறக்கவில்லை என்றெல்லாம் சொல்வார்களே, அதுபோல இருந்து, பிறகு இயல்பான அமைப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள். காசை சிக்கனமாக செலவழிப்பார்கள். பழைய ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் பத்திரப்படுத்துவார்கள். ஆரம்பத்தில் திக்கிப் பேசிய பின்பு சரளமாக பேசுவார்கள். வேற்று மொழிகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தி கற்றுக் கொள்வார்கள்.
கடகம் என்பது மாதுர்காரகன் என்றழைக்கப்படும் சந்திரனுடைய வீடாகும். மேலும், இது சனிக்கு பகை வீடும் ஆகும். ஆனால் தன் வீட்டை தானே பார்ப்பதால், தந்தையார் அறிவாளியாக இருந்தால் சொத்து சேர்க்கை இருக்காது. அதாவது இரண்டில் ஒன்றுதான் நன்றாக இருக்கும். சம்பாதிக்கும் திறமை இருந்தால் சேர்த்து வைக்கும் திறமை வாய்க்காது. தாயாருக்கு மூட்டு வலி, முதுகு வலி வந்து நீங்கும். இனிப்பும், புளிப்பு கலந்த உணவுச் சேர்க்கை மிகவும் பிடிக்கும். ரசமோ, சாம்பாரோ அடிமண்டியைக் கலக்கிப் பிசைந்து சாப்பிடவே விரும்புவார்கள். இளைய சகோதரர்கள் கூடவே இருக்க மாட்டார்கள். தனித்தனியே இருப்பதுதான் இருவருக்கும் நல்லது. வாகனப் பிரியர்களாக இருப்பார்கள்.
சிம்மம் என்பது சனி மற்றும் சுக்கிரன் இருவருக்குமே பகை வீடு. சிம்ம ராசியில் மகம், உத்திரம் ஒன்றாம் பாதத்தில் இந்த கிரகங்கள் அமைந்திருந்தால் மிகவும் அவஸ்தைதான். தந்தைக்கு ஏதேனும் கண்டம் வந்தபடி இருக்கும். தாய்க்கும் தந்தைக்கும் நடக்கும் பிரச்னையால் இருவரையும் அவ்வப்போது பிரிய நேரிடும். ஆனால், பூரம் நட்சத்திரத்தில் சனி இருந்தால் பாதிப்பு கொஞ்சம் குறையும். வாகன வசதிகளும், வீடு, மனை சொத்து சுகங்களும் நிச்சயம் உண்டு. ‘களவும் கற்று மற’ என்கிற பழமொழிக்கேற்ப எல்லாவற்றையும் தெரிந்து கொள்வார்கள். சிறியதாக ஒரு கள்ளத்தனம் இருந்து கொண்டேயிருக்கும். அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை மறைத்துப் பேசியபடி, திரைமறைவு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். கண்ணாடித் தொழில், ஜல்லி, சிமென்ட், மணல் கலவை இயந்திரம் என்று வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். தாய்வழி உறவினர்களால் ஏதேனும் தொந்தரவு வந்தபடி இருக்கும்.
கன்னி ராசியில் நீசம் பெற்ற சுக்கிரனுடன் சனி அமர்கிறார். சனிக்கு இது நட்பு வீடுதான். ஒன்பது மற்றும் பத்துக்குரியவனும், ஒரு திரிகோணம் மற்றும் கேந்திரத்திற்கு உரியவனுமானவன் ஐந்தில் இருக்கிறார். பொதுவாக ஐந்தில் சனி இருப்பது விசேஷம் கிடையாது. ஆனால், இந்த லக்னத்திற்கு யோகாதிபதியாக இருப்பதால் நல்லதையே செய்வார். ஆனாலும், இது பூர்வ புண்ணிய ஸ்தானமாக இருப்பதால் முதலில் பூர்வீகச் சொத்தில் பங்கு இல்லை என்பார்கள்.
பிறகு போராடி சொத்துக்களைப் பெறுவார்கள். இறுதியில் வெற்றி இவர்களுக்கே. எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருப்பார்கள். பகல் நேரத்தில் மந்தமாகவும், இரவு நேரத்தில் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். சிறியதாக எதிலேயும் ஒரு தொடக்கச் சிரமம் இருக்கத்தான் செய்யும். சிலருக்கு தாமதமாகக் குழந்தை பிறக்கும். இல்லையெனில், பிறக்கும் குழந்தை சற்றே தாமதமாகப் பேசும். பயம் கொள்ள வேண்டாம். இவர்கள் நண்பர்களின் வார்த்தைகளைவிட குரு போன்று இருப்பவர்களின் பேச்சையே கேட்க வேண்டும்.
துலாம் ராசியான ஆறாம் இடத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்கிறார். கூடவே, பாக்யாதிபதியான சனி பகவான் உச்சம் பெற்றும் அமர்ந்திருக்கிறார். இவர் தகப்பனாரை மிஞ்சி மேலே செல்வார். எனவே, சிறியதாக ஒரு பகை தந்தையாருடன் இருந்து கொண்டே இருக்கும். நிறைய தர்ம காரியங்கள் செய்வார்கள். எந்த நகரத்தில் இருந்தாலும் பிறந்த ஊரை மறக் காமல் இருப்பார்கள்.
பணப்புழக்கமும் எப்போதும் இருந்தபடியே இருக்கும். இவர்கள் விழா விரும்பிகளாக இருப்பார்கள். ஏதேனும், ஒரு விழாவை நடத்திக்கொண்டே இருப்பார்கள். சனி பத்துக்குரியவராக இருப்பதால் மிக நிச்சயமாய் வியாபாரத்தில்தான் ஈடுபடுவார்கள். கப்பல் வணிகமான ஏற்றுமதி, இறக்குமதி, கட்டிடத் தொழில், காயலாங்கடை, சவுக்கு, தேக்கு மர விற்பனை, ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்று பிரமாண்டமாகவே தொழில் செய்வார்கள். இவர்களுக்கு முதுகெலும்புத் தண்டில் சிறிய பிரச்னை வந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சமூக சேவையில் நாட்டம் இருப்பதால் அடிக்கடி பொதுநல வழக்குகளை போட்டபடி இருப்பார்கள்.
விருச்சிக ராசியில் இருவரும் அமரும்போது, சனி பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து நேருக்கு நேராக லக்னத்தைப் பார்க்கிறார். இதனால் தீர்க்காயுசு யோகம் உண்டு. ஆனால், கொஞ்சம் முசுட்டுத்தனமும், அசட்டுத்தனமும் இருக்கும். ஏதாவது ஒரு பிடிவாத குணம் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் ஏன் இப்படி சிரமப்படுத்துகிறார்கள் என்று மற்றவர்களை நினைக்க வைப்பார்கள். திருமணமும், குழந்தை பாக்கியமும் தாமதமாகக் கிட்டும். வாழ்க்கைத் துணை, வசதியான பெரிய இடத்தில் அமையும். அதேசமயம் பாரம்பரியம் சார்ந்த குடும்பமாகவும் இருப்பார்கள். சனி இங்கு திக்பலம் பெறுவதால் பெரிய நிறுவனங்கள் வைத்து நடத்துபவர்களாக இருப்பார்கள். விட்டகுறை தொட்ட குறைபோல 39லிருந்து 46 வயதுக்குள் புதிய நட்புகள் ஏற்படும். எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
தனுசு ராசியில் இந்த இரண்டு கிரகங்களும் நடுநிலையான பலன்களைத் தருகின்றன. சனியினுடைய இடமான மகரத்திற்கு 12ல் சனி மறைவதும் நல்லதுதான். அதாவது ஒன்பதிற்குரியவன் இந்த இடத்தைப் பொறுத்தவரை 12ல் மறைவது நல்லதேயாகும். செல்வமும் செல்வாக்கும் பெருகியபடி இருக்கும். ஆனால், அதேநேரம் ஊதாரித்தனமாக செல்வத்தை வாரி இறைப்பார்கள். திரைமறைவு சந்தோஷங்களை அனுபவித்தபடி இருப்பார்கள். ‘நான் கொஞ்சம் வித்தியாசமான ஆள்’ என்று விவகாரமாக ஏதாவது செய்தபடி இருப்பார்கள். இவர்கள் சுயமாக இரவு நேரம் மற்றும் அதிகாலைப் பொழுதுகளில் வாகனங்களை இயக்காமல் இருப்பது நல்லது. அது அவர்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
மகர ராசிக்குள் சனி ஆட்சி பெற்று அமருகிறார். ஆனாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் உருப்படியாக எதுவும் செய்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள். கடன் இருந்துகொண்டே இருக்கும். ‘‘அவருக்கு என்னங்க குறைச்சல்’’ என்று பிறர் ஏற்றி விட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களில் சிலர் தந்தையின் சொத்தை அழிப்பார்கள். அதற்குப் பிறகுதான் சம்பாதிக்கவே தொடங்குவார்கள். ஷேர் மார்க்கெட் என்று ஈடுபட்டு சம்பாதிப்பார்கள். தவறான வழியில் சென்று பணம் சம்பாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
கும்பம் சனிக்கு ஆட்சி வீடாகும். கூடவே சுக்கிரனும் நல்ல நிலையில் அமர்கிறார். எனவே, பஞ்சாயத்து செய்வது முதல் பார்லிமென்ட்டில் அமர்வது வரை அபாரமான வளர்ச்சி நிலையை அடைவார்கள். எந்த விஷயத்தைக் கொடுத்தாலும் பேசுவார்கள். பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப்பார்கள். ஏதாவது ஒரு பதவியில் இருந்தபடி இருப்பார்கள். அடிக்கடி தனிமையிலும், எதையோ இழந்ததைப் போல ஏக்கத்துடனும் இருப்பார்கள். மீன், இறால், கோழிப்பண்ணை, உரக்கடை போன்ற தொழில் செய்தால் பெரும் முன்னேற்றம் இருக்கும். தாயாருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கும்.
பதினோராம் இடமான மீனத்தில் இவ்விரு கிரகங்களும் அமைவதென்பது மாபெரும் யோகமாகும். ஏனெனில், உச்ச சுக்கிரன் உச்சாணியில் கொண்டு போய் அமர்த்துவார். சொந்த சகோதரரே இவர்களிடம் வேலை பார்த்து ஆதரவாக இருந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார். ஆனால், இவர்களின் மூத்த பிள்ளைகளோடு மட்டும் சண்டை வரும்.
மேஷமான பன்னிரெண்டாம் இடத்தில் இந்த இரு கிரகங்களும் மறைவதென்பது அவ்வளவு நல்லதல்ல. ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகிக் கிடப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்கள் கூட தள்ளிப் போய்த்தான் முடியும். காலில் அடிபடுவது, தேவையற்ற எலும்பு வளர்வது என்றெல்லாம் ஏற்படும். கையில் பணம் தங்கவே தங்காது. எவ்வளவு வந்தாலும் செலவும் இருந்தபடியே இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி, நிறைய புலம்பியபடி இருப்பார்கள். சனி - சுக்கிரன் சேர்ந்த அமைப்பானது சட்டென்று தவறை நியாயப்படுத்தி பேச வைக்கும். ‘எது சரி, எது தவறு’ என புரியாத மயக்கம் உருவாகும். அதீத நம்பிக்கையால் எளிதாக ஒருவரை மறுதலிப்பார்கள். ‘வாழ்க்கையில் வெற்றி என்பது பணம் மட்டுமல்ல, மன நிம்மதியே’ என்று இவர்கள் உணர கொஞ்சம் காலதாமதமாகும். இதுபோன்று பலவீனங்களை இந்த அமைப்பு உருவாக்கும்போது ஏற்படும் மன உளைச்சல் மிக அதிகமானது. சில சமயம் நல்லோர்களையும் இது இழக்க வைக்கும். எனவே, சனி மற்றும் சுக்கிரனின் நேர்மறைச் சக்தியானது கிடைக்கவும், நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கும் கீழையூர் கீழரங்கனை தரிசிப்பது நல்லதாகும்.
மார்க்கண்டேய மகரிஷிக்கு சயனக் கோலத்திலும், குழலூதும் கோபாலனாகவும் தரிசனம் அளித்த தலம் இது. தாயாருக்கு ரங்கநாயகி என்றே திருப்பெயர். உற்சவ தாயார் அதிரூபவல்லி எனும் திருநாமத்தோடு சேவை சாதிக்கிறார். மிகப் பழமையான இத்தலம் நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி பாதையில் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
(கிரகங்கள் சுழலும்...)
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்
|