மாசு
ஆறாயிரம் சதுர அடியில் அமைந்த தனது பிரமாண்ட பங்களாவின் போர்ட்டிகோவில் சாய்மர நாற்காலியில் அமர்ந்து இங்கிலீஷ் பேப்பரை வரி விடாமல் மேய்ந்துகொண்டிருந்தார் ராஜமன்னார்.
பக்கத்து காலி இடத்தில் புது பங்களா உருவாகிக் கொண்டிருந்தது. ஏழடி மட்டம் கட்டிடம் உயர்ந்திருக்க, லிண்டல் கான்க்ரீட் போட்டுக் கொண்டிருந்தார்கள். பணியாட்களின் சத்தம், மேஸ்திரியின் புலம்பல்... இதற்கு நடுவே சித்தாள்களின் பீடி புகை நாற்றம்... வாடை குமட்டியது ராஜமன்னாருக்கு.
‘கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் பொது இடத்தில் புகை பிடிக்கிறானே! கூப்பிட்டுக் கண்டித்துவிட வேண்டியதுதான்’ - தீர்மானத்தோடு அவர் எழுந்திருக்க, அப்போது அவர் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்ட்டிகோவில் வந்து நின்றது அரசு அலுவலக கார் ஒன்று. காரிலிருந்து இறங்கியவர் ராஜமன்னாரைப் பார்த்து, வணக்கம் வைத்தபடி, ‘‘என்ன சார்... என்னைத் தெரியலையா? முருகேஷ்... மாசு கட்டுப்பாடு வாரியம்!’’ என்று கை குலுக்கினார்.
‘‘ஓ! வாங்க சார்... என்ன இந்தப் பக்கம்?’’‘‘அப்புறம்... உங்க மசாலா ஃபேக்டரிக்கு பக்கத்துல இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்காரங்க அதிகம் ‘நெடி’ அடிக்குதுனு புகார் கொடுத்தாங்களே, பிரச்னையை சரி பண்ணிட்டீங்களா?’’அசடு வழிந்தபடி, ‘இவரை எப்படி சரி பண்ணுவது’ என யோசிக்க ஆரம்பித்தார் ராஜமன்னார்... ‘ராஜா மசாலா’ அதிபர்.
சி.பிரகாஷ்
|