இனி எவ்வளவு மழை வந்தாலும் தாங்குவோம்



மீண்டெழுகிறது முன்மாதிரி முடிச்சூர்

தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருப்பவருக்கும் இப்போது சென்னையில் சென்ட்ரல், எக்மோரை தெரியுமோ இல்லையோ... முடிச்சூரைத் தெரியும். ‘மூழ்கியது முடிச்சூர்’... கடந்த டிசம்பர் 1ம் தேதி, பெரும்பாலான ஊடகங்களின் தலைப்பே இதுதான். ஒன்று, இரண்டு, மூன்று... என வெள்ளம் பனிரெண்டு அடி உயரத்தைத் தொட்டதும், எல்லோருமே பதை பதைத்துப் போனார்கள். தமிழகம் முழுவதும் முடிச்சூர் பற்றியே பேச்சு. இப்போது, எப்படியிருக்கிறது முடிச்சூர்? ஒரு விசிட் அடித்தோம்...

தாம்பரத்திலிருந்து பெரும்புதூர் செல்லும் சாலையில் ஐந்து கி.மீ தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். ஏதோ மழைக்கு மழை கையேந்தி நிற்கும் மக்கள் என நினைக்க வேண்டாம். கடந்த நவம்பர் 15க்கு முன்பு வரை தமிழகத்தின் சூப்பர் கிராமம் இது.  மத்திய, மாநில அரசுகளிடம் பல வகைகளில் ‘சிறந்த’ விருதுகள் வாங்கிக் குவித்திருக்கிறது முடிச்சூர் ஊராட்சி. சாலையின் இருபுறங்களிலும் எழுந்து நிற்கும் அபார்ட்மென்ட்களுக்கு நடுவே தெரிகிறது முடிச்சூரின் ஒரிஜினல் தோற்றம். சிவா விஷ்ணு கோயில்... அதன் அருகே பெரிய குளம்...

பஞ்சாயத்துக்கென்றே ஊரின் நடுவில் ரம்மியமாகக் காட்சியளிக்கும் ஆலமரம்... இது சென்னையின் புறநகரா என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இதைவிட, இந்த வெள்ளத்தில் ஒரு மனித உயிர்ச்சேதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்ட கிராமமும் முடிச்சூர்தான்! ‘‘இதுதான் பழைய முடிச்சூர் கிராமம். இங்கே தண்ணீர் வரவேயில்ல. காரணம், எங்க முன்னோர்கள் அந்தக் காலத்துலயே மேட்டுப் பகுதியில குடியிருப்புகள் அமைச்சு இன்னைக்கு எங்கள காப்பாத்தியிருக்காங்க. இப்போ புதுசா வந்த குடியிருப்புகள்தான் பள்ளம். அதெல்லாம் ரொம்ப பாதிக்கப்பட்டுருச்சு. அதான் கஷ்டமா இருக்கு!’’ எனத் துவங்குகிறார் முடிச்சூரின் பஞ்சாயத்துத் தலைவர் தாமோதரன். இங்ேக தலைவர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை அனைவரும் சுயேச்சைகள். உள்ளாட்சித் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சுயேச்சைகள் மட்டுமே ஜெயித்து நிர்வாகம் செய்யும் கிராமம் இது.

‘‘அன்னைக்கு எல்லா ஊடகங்களிலும் முடிச்சூர் செய்தி கொஞ்சம் ஓவராவே போயிருச்சுனு நினைக்கிறேன். ஆனா, இப்படி எங்களுக்கு, மீடியா அதிக முக்கியத்துவம் கொடுக்கக் காரணமே முடிச்சூர் செய்த சாதனைகள்தான். இங்க மொத்தம் 12 வார்டு இருக்கு... இதுல 56 குடியிருப்புகளும், ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனியா சங்கங்களும் இருக்கு. சாலைகள் அமைக்கக் கூட மூன்றில் ஒரு பங்கு மக்கள் பணம்.

அதனால இங்க 90 சதவீதம் சாலைகள் அமைச்சாச்சு. எல்லாப் பகுதியிலும் தண்ணீர் வசதியும் செய்திருக்கோம். வீட்டுக்குள்ளேயே கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மைனு எல்லாத்திலும் எங்க கிராமத்தை முன்னோடி கிராமமாதான் எப்போதுமே வச்சிருக்கோம். இதனாலதான் 1999ல் சிறந்த நிர்வாகம்னு பிரதமர் விருது, 2008ல் நிர்மல் கிராம புரஸ்கார் விருது, 2013ல் தூய்மை கிராமம் விருதுனு தேடி வந்தது. ஆனா, இந்த மழை எங்களைப் புரட்டிப் போட்டுடுச்சு. இதுல, மனித உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தினதே பெரிய வெற்றி. ஏன்னா, முதல் மழை எங்களுக்குப் பல பாடங்களை கத்துக் கொடுத்திடுச்சு!’’ என்கிற தாமோதரனைத் தொடர்கிறார் டியரா ரெசிடென்ஸி அபார்ட்மென்ட்வாசியான முத்துராமன்...

‘‘நவம்பர் 15ல் முதல் மழை பெய்தபோதே எல்லாப் பகுதியிலும் இடுப்பளவுக்கு தண்ணி. அது வடியவே மூணு நாட்களாகிடுச்சு. அதிலிருந்து ரொம்பக் கஷ்டப்பட்டு மீண்டோம். அதனால, ரெண்டாவது மழை பத்தின செய்திகளைப் பார்த்ததுமே தயாராகிட்டோம். முதல் மழை முடிஞ்சதும் எங்க பஞ்சாயத்து பசுமை நண்பர்கள் டீம் நிறைய இடங்களை சுத்தப்படுத்திடுச்சு. அடைப்பு ஏற்பட்ட இடங்கள எடுத்து விட்டுட்டாங்க. இதனால, டிசம்பர் 1ம் தேதி பெய்த மழை ஒரே நாள்ல வடிஞ்சிருச்சு. ஆனாலும், மழை விடாம பெய்ததால 12 அடிக்கு தண்ணி வந்து கிரவுண்ட் ஃப்ளோர் எல்லாம் மூழ்கிடுச்சு. பொருட்சேதம் கொஞ்சம் அதிகம். ஆனா, எங்களை விட பக்கத்து ஏரியா வரதராஜபுரத்தில்தான் ரொம்ப பாதிப்பு!’’ என்கிறார் வருத்தமான குரலில்!

இந்தளவு கச்சிதமாக, கட்டுக்கோப்பாக இருக்கும் முன்மாதிரி கிராமத்துக்கே இந்த நிலை என்றால் நிர்வாகம் சரியில்லாதிருக்கும் பகுதிகளில் இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருந்தால்? நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது. சரி, அரசு அனுமதியுடன் பக்காவாக கட்டமைக்கப்பட்ட முடிச்சூரின் புதிய குடியிருப்புகளில் இப்படியொரு வெள்ளம் ஏற்படக் காரணம் என்ன? தாமோதரன் அதை விரல் நுனியில் வைத்திருக்கிறார்...

‘‘முடிச்சூர்ல சீக்கனா ஏரி, பெரிய ஏரி ரெண்டும் முக்கியமானது. இந்த ஏரிகள் முதல் மழைக்கே நிரம்பிடுச்சு. அதிலிருந்து உபரி நீர் வடிஞ்சு அடையாறுல போய்க் கலக்கணும். ஆனா, வழியில் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் இருந்ததால, வீடுகளுக்குள்ள நீர் புகுந்துடுச்சு. முடிச்சூர் பகுதியில அரசு அங்கீகரித்த புதிய நகர்கள், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள்னு ரெண்டு வகை இருக்கு. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் 1996க்கு முன்னாடியே வந்திடுச்சு. அதனால, எங்களால அதை ஒண்ணும் செய்ய முடியாது. இப்பவும் எங்க கன்ட்ரோல்ல எதுவும் கிடையாது. எங்க கிராமம் சென்னை பெல்ட்ல வர்றதால எல்லா அனுமதியுமே சி.எம்.டி.ஏதான் கொடுக்கும். பில்டிங் கட்டியிருக்காங்களா...

அப்ரூவல் வாங்கியிருக்காங்களா... அவ்வளவுதான் எங்களால பார்க்க முடியும். ‘இது தண்ணீர் நிற்கிற பகுதி... அப்ரூவல் கொடுக்காதீங்க’னு சொல்ல முடியாது. இருந்தும் எங்க கருத்தை அரசுகிட்ட சொல்லியிருக்கோம். ஆனா, சி.எம்.டி.ஏ.வோ, அரசோ யாருமே எங்க கருத்தை கேட்கிறதில்ல. ஆனா, இங்க குடியிருப்பு வந்துருச்சுன்னா அவங்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது எங்க வேலை. நாங்க, இன்னைக்கு வரை அதைக் கச்சிதமா செய்து கொடுக்கிறோம்!’’ என்கிறவர், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நம்மை அழைத்துப் போகிறார். வாசல்தோறும் ஃப்ரிட்ஜ், கிரைண்டர், கட்டில் மெத்தை, டேபிள் ஃபேன் போன்றவை வெயிலில் காய வைக்கப்பட்டிருக்கின்றன.

எத்தனை நாள்தான் சோகத்தோடு இருப்பது, இன்முகமும் தன்னம்பிக்கையும் பளிச்சிடுகிறது இவர்கள் முகங்களில்.‘‘பார்த்துட்டோம்ங்க... இதுக்கு மேல கஷ்டப்பட ஒண்ணுமில்ல. இப்ப பெய்தது 53 சென்டிமீட்டர் மழைனு சொல்றாங்க. இனி 100 சென்டிமீட்டர் மழை பெய்தா கூட தாங்கிக்கிற பக்குவம் எங்களுக்கு வந்துடுச்சு!’’ என்கிறார் லட்சுமி நகர் பகுதியில் ஃப்ரிட்ஜை காய வைத்துக் கொண்டிருக்கும் சத்யபாமா.

வீட்டுக்குத் தேவையான சில அடிப்படை ஃபர்னிச்சர்களை எப்படியோ கடன்பட்டு வாங்கி வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருக்கிறார் சக்தி நகரைச் சேர்ந்த ராஜ்குமார்.‘‘நான் போன மழையில் அலர்ட் ஆகி சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுக்கு வந்தேன். இப்ப வாடகை வீட்டிலும் பொருட்கள் எல்லாம் நாசமாகிடுச்சு. அதுக்காக அப்படியே இடிஞ்சு போய் உட்கார முடியுமா? வாழ்க்கை நகரணுமே!’’ என நம்பிக்கை தெளிக்கிறது அவர் பேச்சு.

‘‘இப்போ அரசுகிட்ட உள்கட்டமைப்புக்கு நிதி ஆதாரம் கேட்டிருக்கோம். நிவாரணத் ெதாகை வீட்டுக்கு ஐந்தாயிரம்... போதாதுதான். ஆனா, அரசால ஒவ்வொரு வீட்டுக்கும் லட்சக்கணக்கிலா கொடுக்க முடியும்? அட்லீஸ்ட், வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு மட்டும் கடைகள்ல வாங்குற பொருட்களுக்கு வரிகளை நீக்கி உத்தரவு போடுங்கனு கேட்கப் போறோம்.

இதுபோக நாங்க ஒவ்வொரு பகுதி மக்கள்கிட்டயும் கூட்டம் போட்டு நம்பிக்கை தரலாம்னு இருக்கோம். சீக்கிரமே எழுந்துருவோம் சார்... நம்பிக்கைதானே வாழ்க்கை!’’ என முத்தாய்ப்பாக முடிக்கிறார் தாமோதரன்.  இது தண்ணீர் நிற்கிற பகுதி... வீடு கட்ட அப்ரூவல்  கொடுக்காதீங்க’னு பஞ்சாயத்து சார்பா சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும், யாருமே எங்க கருத்தைக்  கேட்கிறதில்ல!

- பேராச்சி கண்ணன்