ஃபேன்டஸி கதைகள்!



குரலைத் திருடினால்...

செல்வு @selvu


அந்த செல்போன் அவனை ஒரே மாதத்தில் பெரும் பணக்காரனாக மாற்றியது. மாதா மாதம் இரண்டு சம்பளத் தேதி வராதா என்று காலண்டர்களை சரிபார்க்கும் சொற்பமான மாதச் சம்பளக்காரனை ஒரு செல்போன் ஒரே மாதத்தில் பெரும் பணக்காரனாக மாற்றியதென்றால் எப்படி நம்புவது?அந்த செல்போனில் இருந்த வாய்ஸ் ரெக்கார்டர், மற்றவர்களின் குரலைத் திருடியது.

குரலைத் திருடுவது என்றால் நிஜமாகவே திருடுவதுதான். ஒரு பொருளை ஒருவர் திருடிச் சென்றால் அது காணாமல் போய்விடுவது போலவே, அந்த செல்போனின் வாய்ஸ் ரெக்கார்டரில் உங்களின் குரலைப் பதிவு செய்துவிட்டால் அதன்பிறகு அதில் பதிவான உங்களது குரல் உங்களிடமிருந்து காணாமல் போய் விடும்; அதே சமயம் செல்போனில் பதிவாகியிருக்கும். அதில் பதிவாகி விட்ட உங்களது சொற்களை நீங்கள் அதன்பின் எப்பொழுதுமே பேச முடியாது. பேசினால் வெறுமனே உதடுகள் மட்டுமே அசையும்; குரல் வராது.

உதாரணத்திற்கு, ‘‘ஹலோ, என்ன பண்ற?’’ என்று நீங்கள் பேசிய மூன்று சொற்களை மட்டும் அதில் ரெக்கார்ட் செய்துவிட்டால், அதன்பிறகு நீங்கள் யாரிடமும் ‘‘ஹலோ, என்ன பண்ற?’’ என்று பேசவே முடியாது. அதனை அடுத்து நீங்கள் பேசுபவை வழக்கம் போலவே வெளிப்படும். இந்த மூன்று சொற்கள் மட்டும் ஸ்வாஹாதான். சரி, அந்தச் சொற்களைத் திரும்பவும் பெற என்ன செய்ய வேண்டும்? அதே செல்போனில் இருக்கும் ஸ்பீக்கரில் அவற்றை ஒலிக்க விட்டுக் கேட்க வேண்டும்; அவ்வளவுதான்! உங்களின் ஹலோ உங்கள் காதுகளின் வழியாக நுழைந்து உங்களுக்குத் திரும்பி வந்துவிடும்.

அந்த செல்போனில் அப்படியொரு சக்தியிருக்கிறது என்று புரிந்துகொண்டதுமே குரலை மிக முக்கியமான மூலதனமாக வைத்து வேலை செய்வோரின் பட்டியலை அவன் தயாரித்தான். குறிப்பாக எஃப்.எம். ரேடியோவில் பேசுகிற ஆர்.ஜே.க்கள், கண்டக்டர்கள், டாக்டர்கள்... இப்படி. ரேடியோவில் வேலை செய்பவர்களின் குரலைத் திருடிவிட்டால் அவர்கள் எதை வைத்து வேலை செய்வார்கள்? அவர்கள் பேசுகின்ற எல்லாவற்றையுமே பதிவு செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு முறை பேசத் துவங்கும்போதும், பேசி முடித்ததும் அவர்கள் வேலை பார்க்கும் ரேடியோவின் பெயரை அழுத்தமாக உச்சரித்து, டேக் லைனெல்லாம் சொல்லுவார்களே! அந்தச் சில சொற்களை மட்டும் திருடிக் கொண்டாலே போதும். அதன்பிறகு அவர்களால் எவ்வளவு முயற்சித்தாலும் அதே பெயரை உச்சரிக்கவே முடியாது. அப்படி உச்சரிக்காவிட்டால் அவர்களுக்கு அங்கே வேலையும் கிடையாது.

‘நாம் பேசுகின்ற மற்ற சொற்களெல்லாம் அருமையாக எல்லோருக்கும் கேட்கிறது. இந்த நான்கைந்து சொற்களுக்கு மட்டும் என்ன ஆனது’ என்று அவர்கள் குழம்பும்போது இவன் அவர்களை ரகசியமாக அழைப்பான். குரலைத் திருடிய விவரத்தைச் சொல்லிவிட்டு, அந்த நான்கைந்து சொற்களும் திரும்பவும் வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையைத் தனக்குத் தரும்படி பிளாக்மெயில் செய்வான். அப்படி அவர்கள் தந்ததும் தனது செல்போனில் பதிவு செய்திருக்கும் அவர்களின் குரலை ஸ்பீக்கரில் ஒலிக்க விடுவான்; அவ்வளவுதான். அவர்களுக்கு அவர்களது குரல் திரும்பிவிடும்.

இப்படியாக அடுத்தவரின் குரலைத் திருடி பணக்காரனாக உருமாறிக் கொண்டிருந்த அவனது வாழ்க்கையில் ஒரு ட்விஸ்ட் வந்தது. ஒரு டீக்கடையில் டீ குடித்தபோது அங்கே பணிபுரியும் சர்வர் ஒருவனின் குரலைப் பதிவு செய்து கொண்டான். “மாஸ்டர், ரெண்டுல ஒண்ணு ஆத்தாம’’ என்பதுதான் திருடிய வார்த்தைகள். அதன்பின் டீக்கடையிலிருந்து வந்துவிட்டான். பொதுவாக இப்படிக் குரலைத் திருடிய ஒரு வாரத்திற்குப் பிறகுதான் சம்பந்தப்பட்டவருக்குத் தகவல் சொல்வான் என்பதால், ஒரு வாரம் கழித்து அந்த டீக்கடைக்குச் சென்றான். அங்கே அந்த குறிப்பிட்ட சர்வரைக் காணோம். விசாரித்ததில், இரண்டு நாட்களுக்கு முன்பே அவன் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். ‘அடடா, வடை போச்சே’ என்று நினைத்தபடி இடத்தை காலி செய்தான்.

வீட்டிற்கு வந்ததும் அந்த சர்வரின் குரலை டெலிட் செய்ய முயற்சித்தான். அது டெலிட் ஆகவில்லை. இதுவரை யாருடைய குரலையும் அவன் டெலிட் செய்ததே இல்லை. ஏதோ ஒரு பெயரில் அதுவே பதிவாகும்; திரும்பவும் ஒலிக்க விட்டு, குரலுக்கு உரியவர் கேட்டதும் அது மறைந்துபோகும்; அவ்வளவுதான்! ‘சரி, இப்பொழுதும் அப்படியே செய்யலாம்’ என நினைத்து அந்தக் குரலை ஸ்பீக்கரில் ஒலிக்க விட்டான். போனில் இருந்து மறைந்து போனது. ஆனால், அந்தக் குரல் தனது சொந்தக்காரனான சர்வரைத் தேடி அலைந்து, அவனைக் காணாமல் போகவே அது இவனது காதுகளின் வழியாகப் புகுந்து இவனுக்குள்ளேயே ஐக்கியமாகி விட்டது.

இப்பொழுது இவன் எதற்காக வாயைத் திறந்தாலும், ‘‘மாஸ்டர், ரெண்டுல ஒண்ணு ஆத்தாம” என்ற சப்தம்தான் வருகிறது. அதாவது, ஒவ்வொருமுறை இவன் வாயைத் திறக்கும்போதும் அந்த சர்வரின் குரல் வெளியே வந்து சர்வரைத் தேடும். அவன் கிடைக்காததால் திரும்பவும் இவனுக்குள்ளேயே போய்விடும். இப்படியாக அது சுற்றிக் கொண்டே இருக்கிறது.

சாப்பிடவோ, பேசவோ, கொட்டாவி விடவோ என்று எப்பொழுது வாயைத் திறந்தாலும், ‘‘மாஸ்டர், ரெண்டுல ஒண்ணு ஆத்தாம’’ என்ற சப்தம் வெளியேறும். இதற்கு பயந்து அவன் சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ கூட வாயைத் திறக்காமல் இறந்துபோகும் நிலைக்குப் போய்விட்டான். குரல் வந்தாலும் பரவாயில்லை என சாப்பிட நினைத்தாலும் முடியவில்லை.

சென்னையைத் தாக்கிய வெள்ளத்தை விடவும் அதிவேகமாக அந்த சர்வரின் குரல் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்ததால் சாப்பாடு தெறித்து வெளியே விழுந்தது.திரும்பவும் செல்போனில் ரெக்கார்ட் செய்து அதிலேயே அடைத்துவிடலாம் என்று நினைத்து செல்போன் ரெக்கார்டரை ஆன் செய்தபோது, ‘ஒருமுறை பதிவு செய்த குரலை மறுமுறை பதிவு செய்ய முடியாது’ என்று திரையில் மின்னிக் காட்டியது, இவனைப் பணக்காரனாக்கிய அதே செல்போன்.