சலுகையா? சாத்தானா?



ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்!

ஊர் உலகத்தில் ஓணான், பல்லியெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்வது ஃபேஸ்புக்கில்தான். அந்த ஃபேஸ்புக்கையே வண்டி வண்டியாய் விளம்பரம் செய்ய வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது ‘ஃப்ரீ பேசிக்ஸ்’...

இலவச இணைய இணைப்புத் திட்டம். இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள் பலவற்றை ஃபேஸ்புக்கின் இரண்டு பக்க விளம்பரங்கள் கடந்த வாரம் முழுக்க நிறைத்தன. ‘‘அம்மா, தாயே... கணேசனுக்கு உதவுங்கள்! அவர் இலவச இன்டர்நெட் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்படுகிறார்...’’ என்ற ரீதியில் மிடில் கிளாஸ் குடும்பத்தைக் காட்டி சென்டிமென்ட் சிக்ஸர் அடித்தன அந்த விளம்பரங்கள்.

அது என்ன ஃப்ரீ பேசிக்ஸ்? அதை ஏன் ஃபேஸ்புக் உயர்த்திப் பிடிக்கிறது? யார் அதை எதிர்க்கிறார்கள்? - வரிசை கட்டும் இந்தக் கேள்விகள் உங்களிடமும் இருந்தால் வாங்க உள்ளே...அதிகம் பேர் பயன்படுத்தும் இணையதள வரிசையில் ஃபேஸ்புக்குக்கு இரண்டாம் இடம். முதல் இடத்தில் நீண்ட நெடுங்காலமாக ஆணியடித்து அமர்ந்திருப்பது கூகுள். பலருக்கு கூகுள் இல்லையென்றால் இந்த உலகம் ஸ்தம்பித்து விடும்.

அப்படிப்பட்ட கூகுளை கீழே இறக்கிவிட்டு நம்பர் 1 ஆக வேண்டும் என இந்த நம்பர் 2வுக்கு ஆசை. அதனால் பிறந்ததுதான் Internet.org எனும் ப்ராஜெக்ட். அதுவே தற்போது ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ எனப் பெயர் மாறி வந்திருக்கிறது. இப்போது செல்போனில் இணைய வசதி இருந்தாலோ, ப்ரீபெய்டு போன்களில் நெட் பேக் வாங்கினாலோதான் இணையத்தைப் பயன்படுத்த இயலும். ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ இந்த ரூட்டை பைபாஸ் செய்கிறது. இது ஒரு ஸ்மார்ட் போன் ஆப். இணைய இணைப்பே இல்லாத போனிலும் கூட இந்த ஆப் வழியே இணையத்தைப் பயன்படுத்த முடியும், அதுவும் இலவசமாக!

இது உலகம் முழுமைக்குமான ப்ராஜெக்ட். ஒவ்வொரு நாட்டிலும் லோக்கல் மொபைல் சேவை நிறுவனங்களோடு இணைந்து இந்தச் சேவையை வழங்குகிறது ஃபேஸ்புக். இந்தியாவில் ரிலையன்ஸ் + ஃபேஸ்புக் இணைந்து 2015ன் துவக்கத்தில் இருந்தே இந்த இலவச இணையத்தை வழங்கி வந்தார்கள். ஆனால், கடந்த டிசம்பர் 1ம் தேதி... இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய், திடீரென இந்தச் சேவையை நிறுத்தி வைக்குமாறு ஆணையிட்டிருக்கிறது. காரணம், நாடெங்கும் இதற்குப் பெருகி வந்த எதிர்ப்பு!

‘இலவச இன்டர்நெட் நல்ல விஷயம்தானே... இதை ஏன் எதிர்க்கிறார்கள்?’தூரத்தில் இருந்து பார்த்தால் இப்படித்தான் நமக்குக் கேட்கத் தோன்றும் ஆனால், இந்தியாவில் நெட் நியூட்ரலிட்டிக்காகப் போராடி வரும் அமைப்புகள் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தைப் பற்றிப் பேசினாலே டென்ஷன் ஆகின்றன.
‘‘ஃபேஸ்புக்குக்கு சொந்தமான ஆப் மூலம் நாம் இணையத்தைப் பயன்படுத்துவதால் அவர்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.

நாம் விரும்பும் வலைத்தளங்கள் எல்லாவற்றையும் அதில் பார்க்க முடியாது. அவர்கள் வடிகட்டி சில வலைத்தளங்களை மட்டுமே பார்க்க அனுமதிப்பார்கள். இது ஒரு வகையான அடிமைத்தனம். இதை மட்டும் இப்போது அனுமதித்தோம் என்றால், ‘இந்திய மக்கள் எதைப் பார்க்க வேண்டும்... எதைப் பார்க்கக் கூடாது...’ என தீர்மானிக்கிற அதிகாரம் ஃபேஸ்புக் கைக்குப் போய்விடும். அதன்பின் இந்திய அரசியலையே தீர்மானிக்கும் சக்தியாகக் கூட அது மாறலாம்!’’ என்கிறார் நெட் நியூட்ரலிட்டி இயக்கத்தைச் சேர்ந்த நிகில் பாவ்வா.

இணையம் என்பது மின்சாரம் மாதிரி. அது கட்டுப்பாடு அற்றிருக்க வேண்டும். ‘நான் கொடுக்கும் மின்சாரத்தில் லைட் எரியாது... ஃபேன் மட்டும் ஓடும். அதுவும் நான் சொல்கிற குறிப்பிட்ட கம்பெனி ஃபேன் மட்டும்தான் ஓடும்’ எனக் கட்டுப்படுத்துவது மாதிரிதான் இந்த இலவச இன்டர்நெட் என்கிறார்கள் இந்தத் தரப்பினர்.
இன்னொரு பக்கம் ஃபேஸ்புக் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக்கொள்கிறது.

‘ஒரு நாட்டின் இணைய இணைப்பு வேகம் 10 சதவீதம் அதிகமாகும்போதெல்லாம் அதன் பொருளாதாரம் 1.3 சதவீதம் உயர்வதாகச் சொல்கிறது உலக வங்கி. ஆனால், உலகில் இன்னும் 389 கோடி மக்கள் இணையமே இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு அறியாமையும் வறுமையுமே காரணம். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளோ, நவீன விவசாய முறைகளோ... ஏன், வெள்ள அபாயம் போன்ற அவசரச் செய்திகளோகூட அவர்களைச் சென்று அடைவதில்லை. அவர்களுக்கெல்லாம் அடிப்படை இணையத்தைக் கொடுக்க நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அதை சில விஷமிகள் தடுக்கிறார்கள்’ என வெளிப்படையாகவே மக்களிடம் பிரசாரம் செய்கிறது ஃபேஸ்புக்.

‘நீங்கள் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை ஆதரியுங்கள்...’ என்று விளம்பரங்களில் ஒரு போன் நம்பரைக் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள். ஃபேஸ்புக் தளத்தில் இந்த ஆதரவை ஒரே ஒரு க்ளிக் மூலம் தெரிவிக்க வசதி செய்திருக்கிறார்கள். இவை எல்லாம் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் மக்கள் கோரிக்கையாகப் போய்ச் சேர்ந்துவிடும்!

பொதுமக்களில் பலரும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதும் உண்மைதான். ‘எதுவுமே இல்லாமல் இருக்கும் மக்களுக்கு எதையாவது கொடுப்பதில் என்ன தவறு?’ என்பது அவர்களின் பாயின்ட். ஆனால், இதன் பின்னே இருக்கும் அரசியல் மிக நுட்பமானது. ‘‘இந்தியாவில் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ விளம்பரங்களுக்காக மட்டும் ஃபேஸ்புக் முதலீடு செய்திருப்பது 132.48 கோடி ரூபாய். லாப நோக்கம் இல்லாமல் இவ்வளவு பணத்தை செலவழிப்பார்களா? இது நூறு சதவீதம் பிசினஸ்.

இந்தியாவில் இப்போது மொத்தமே 27 சதவீதம் பேர்தான் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். மிச்சமிருக்கும் 73 சதவீத இந்தியர்களை அப்படியே லபக்கி தன் கஸ்டமர் ஆக்கிக்கொள்ளும் தந்திரம் இது. ஆனால், இதை ஏதோ ‘பொதுநலம் கருதி...’ என்பது போல வேஷமிட்டுப் புகுத்துகிறார்கள். இந்த இணைய சேவையில் கூகுள் போன்ற போட்டி தளங்களை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

லோக்கல் வியாபாரிகள் கூட இந்த சேவை வழியே தங்கள் இணையதளம் மக்களிடம் செல்ல வேண்டும் என்றால் ஃபேஸ்புக்கிடம் கோரிக்கை வைக்க வேண்டியிருக்கும். பிற்காலத்தில் அதற்காக பணம் கைமாறலாம். தன் வியாபாரத்தை விரிவுபடுத்த ஃபேஸ்புக் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யட்டும். அதை வெளிப்படையாகச் செய்யட்டும். இப்படி பொதுநலன் எனும் போர்வையில் இந்திய தொலைத்தொடர்பு சேவையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. செயற்கைக்கோள் நம்முடையது, அலைக்கற்றை நம்முடையது, செல்போன் டவர்கள் நம்முடையவை. ஆனால், அதில் மக்கள் எதைப் பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பது மட்டும் ஃபேஸ்புக். அக்கிரமம் அல்லவா இது?’’ என்கிறார் நிகில் பாவ்வா.

இந்தக் கேள்விக்கு பதிலாக இன்னொரு கோணத்தையும் முன்வைக்கிறார்கள் டெக் வல்லுநர்கள். ‘‘பாரதிய ஜனதா அரசு, நேரடியாக இது போன்ற இலவச இணையத்தை வழங்கினால், ‘மதவாதம், இஸ்லாமிய வெறுப்பு போன்றவற்றைத் திணிக்கிறார்கள்; பகுத்தறிவுத் தளங்களை தடை செய்கிறார்கள்’ என விமர்சனம் எழும். அதனால் பெயருக்காக ஃபேஸ்புக்கை வைத்து மத்திய அரசே இப்படி கேம் ஆடுகிறது’’ என்பதே அது. கவர்ன்மென்ட்டோ, கலிபோர்னியா கம்பெனியோ... இன்டர்நெட்டுக்கு கேட் போட்டு வாட்ச்மேன் வேலையை யார் பார்த்தாலும் கெட் அவுட்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் நெட் நியூட்ரலிட்டி இளைஞர்கள்!

இலவச இணையம் கொடுக்கட்டும்... அதைக் கட்டுப்பாடு களோடும் கொடுக்கட்டும்... ஆனால், 200 எம்.பி... 300 எம்.பி... என அளவு சார்ந்த கட்டுப்பாடுகளோடு எல்லோருக்கும் கொடுக்கட்டும். ‘கூடை வச்சவங்களுக்கெல்லாம் லைட்டு தர்றதில்லை’ என்கிற மாதிரி சில தளங்களை நிறுத்தி, சிலவற்றைத் தருவதெல்லாம் கூடவே கூடாது! இதுவே இந்திய மனங்களின் கோரஸ்!

செயற்கைக்கோள் நம்முடையது, அலைக்கற்றை  நம்முடையது, செல்போன் டவர்கள் நம்முடையவை. ஆனால், அதில் மக்கள் எதைப்  பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பது மட்டும் ஃபேஸ்புக். அக்கிரமம் அல்லவா  இது?

- நவநீதன்