நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?



யூத் விசாரணை

‘‘டெக்ஸ்ட் புக்கை மறந்து ஃபேஸ்புக்கில் கிடக்கிறோம்... வாட்ஸ்அப்பில் கடலை வறுக்கிறோம்... குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம். நீங்கள் நினைப்பீர்கள் இதையெல்லாம் மறுக்கப் போகிறோம் என்று!இல்லை...ஃபேஸ்புக்கில் செல்ஃபி போடுகிறோம்... எதற்காக? செல்போன் செல்லரித்து விடும் என்பதற்காக அல்ல... செல்ஃப் கான்ஃபிடன்ஸை வளர்ப்பதற்காக! வாழ்க்கையை செல்ஃப் ஸ்டார்ட் பண்ணுவதற்காக!’’ - இட்டுக் கட்டினால் இன்னமும் போகும் போலிருக்கிறது இளைஞர்களின் கற்பனை.

சென்னையை அடுத்த சிறுசேரியில் இருக்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு நாம் போகக் காரணமும் இதுதான். ‘‘ஒரு பக்கம் பொறுப்பே இல்லாத பயலுகன்னு பேர் வாங்குறீங்க... மறுபக்கம் பார்த்தா மழை வெள்ளத்துல முதல் ஆளா வந்து நிக்கிறீங்க. யாருப்பா நீங்கல்லாம்?’’ என்றால் மடை திறக்கிறார்கள்.
‘‘எங்க வாழ்க்கையே வேற மாதிரி சார்! ஒரு பக்கம் பார்த்தா நாங்க பாவப்பட்ட கைய்ஸ்... இன்னொரு பக்கம் பார்த்தா கொடுத்து வச்ச தலைமுறை!’’ என பில்டப் கொடுத்து துவங்குகிறார் முஜீஃப் ரஹ்மான்.

‘‘காலையில 4.30 மணிக்கு எழுந்திருக்கணும். இல்லாட்டி காலேஜ் பஸ்ஸுக்கு லேட் ஆகிடும். அடிச்சிப் பிடிச்சி ஆறு மணி பஸ்ல ஏறி 9 மணிக்கு காலேஜ் வந்தா, முழுக்க முழுக்க படிப்புதான். அப்புறம் வீட்டுக்குப் போய்ச் சேர சாயந்திரம் 6 மணி ஆகிடும். அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் விளையாடி, ரெண்டு மணி நேரம் படிச்சு, ஒரு மணி நேரம் டி.வி பார்த்துன்னு டைம் டேபிள்ல கழியுது வாழ்க்கை! இதுல எங்களுக்கெல்லாம் ரிலாக்ஸ் தர்ற விஷயம்னா அது போனும் அதில் இருக்குற நீல பட்டனும் பச்சை பட்டனும்தான்(Facebook & Whatsapp)!’’ என்கிறவரைத் தொடர்கிறார் ஸ்வரூப்.

‘‘நானெல்லாம் காலையில எழுந்ததும் ஃபேஸ்புக்ல என்னென்ன அப்டேட்ஸ்னு பார்த்துடுவேன். அப்புறம் வாட்ஸ்அப். அதுக்கு அப்புறம்தான் மார்னிங் டெபிட்ஸ்(!) எல்லாம். எங்க உலகத்தை இதுதான் கலர்ஃபுல் ஆக்குது. ஃப்ரெண்ட்ஸ் எப்பவும் பக்கத்துலயே இருக்குற மாதிரி உணர வைக்குது. கூட இருந்து அரட்டை அடிச்சா ஒரு வித கிரியேட்டிவிட்டி வளரும் தெரியுமா? அந்த படைப்பாற்றல் எங்களுக்கு ஆன்லைன் அரட்டையிலயே கிடைக்குது. என்ன... வாய்விட்டுப் பேசற மாதிரி இல்லாம ஒரு டெக்ஸ்டிங் தலைமுறையா வளர்ந்துட்டோம். ஆனா, நீங்க பேசுறதை விட வேகமா எங்களால டைப் பண்ண முடியும். இது ஒரு இவாலுவேஷன். அவ்ளோதான்!’’ என்கிறார் அவர் கூலாக.

இப்படி டைம் ஒதுக்கியும் ஒதுக்காமலும் நாளெல்லாம் சோஷியல் நெட்வொர்க்கில் என்ன செய்கிறார்கள் இவர்கள்?‘‘கலாய்க்கிறதுதான் மெயின் வேலை. கிளாஸுக்குன்னு ஒரு குரூப் இருக்கு… அதுல நிறைய ஃபார்வேர்டு செய்திகளை பகிர்ந்துப்போம். காமெடிதான் நிறைய இருக்கும். சில சமயம் சென்ஸிட்டிவான விஷயங்கள்ல பெருசா விவாதம் பத்திக்கும். பீப் சாங் மேட்டர்லயே எடுத்துக்குங்க…

பாட்டுப் பாடி அது நெட்ல வந்ததால சிம்பு மேல தப்பா… குழந்தைங்க பார்க்குற டி.வி வரை அதை விவாதமா எடுத்துட்டு வந்தவங்க மேல தப்பா? இப்படியெல்லாம் பேசிக்குவோம்! இந்த மழை, வெள்ளம் சமயத்துல எங்களுக்கு வந்த ஒவ்வொரு தகவலையும் போன் பண்ணி உண்மையானு கன்ஃபார்ம் பண்ணி அடுத்தவங்களுக்கு ஃபார்வேர்டு பண்ணினோம். தூரத்தில் இருந்து பார்த்தா நாங்க இந்த உலகத்தைப் பத்தியே கவலைப்படாம தலையை குனிஞ்சு செல்போனை நோண்டிக்கிட்டிருக்கோம்னுதான் நீங்களே சொல்வீங்க!’’ என்கிறார் அஷ்வின்.

‘‘இப்ப காதல் படங்கள் ஓடுறதில்லனு எல்லாரும் குறைபட்டுக்குறாங்களே... ஏன் தெரியுமா? இப்போதைய காதல் கதைகள் எல்லாம் எங்க வாட்ஸ்அப் குரூப்லயே 100 நாள் ஓடி முடிச்சிடுது. அதை வேற எதுக்கு தியேட்டர்ல வந்து பார்க்கணும்னு எங்களுக்கு டயர்ட் ஆகிடுது. நாங்க இப்ப ஃபர்ஸ்ட் இயர். எல்லாருக்கும் ஆவரேஜா 17தான் ஏஜ். எங்க வயசுல நீங்க எத்தனை காதல் கதைகளைக் கேட்டிருப்பீங்க, பார்த்திருப்பீங்க?

ஃப்ரெண்டோட லவ், ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்டோட லவ்னு எல்லாமே எங்க குரூப்புக்குள்ள வந்துடும். வெறுமனே ‘காதல் வாழ்க’னு கோஷம் போடுற சினிமா காதலைப் பார்த்து நாங்க வளரல. கட்டிக்கிட்ட காதல், வெட்டிக்கிட்ட காதல், கட்டிக்கிட்டு வெட்டிக்கிட்ட காதல்னு நிஜத்தை அப்படியே ரத்தமும் சதையுமா கேள்விப்படுறோம். நாமெல்லாம் ரேஸ் குதிரை… ஓடி ஜெயிச்சா கிடைக்கிற புல்லுக்கட்டுதான் லவ். ஓடும்போதே புல்லுக்கட்டுக்கு ஆசைப்பட்டா ரேஸும் கிடைக்காது புல்லுக்கட்டும் கிடைக்காதுனு புரிஞ்சு வளருறோம் நாங்க. நீங்க புனிதமான காதல்னு மார்க்கெட்டிங் பண்ணியெல்லாம் எதையும் எங்க மைண்டில் ஏத்த முடியாது!’’ என்கிறார் ராஷிக்.

‘‘அப்போ, காதலுக்காக உயிரைக் கொடுக்கிறதெல்லாம்…’’ என ஆரம்பிக்கும்போதே நம்மைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கிறார்கள் இவர்கள்.‘‘கேரியரா, லவ்வானு கேட்டா, கேரியர்தான் முதல்ல. ஃப்ரெண்ட்ஷிப்பா, லவ்வானு கேட்டா ஃப்ரெண்ட்ஷிப்தான். சரி, லவ் பண்ணிட்டோம். ஃபேமிலி சம்மதிக்கல. ஃபேமிலியா, லவ்வானு கேட்டாலும் ஃபேமிலி தான் எங்க சாய்ஸ். ஆக, எல்லாத்திலும் நாங்க கடைசி ஆப்ஷனா தள்ளி விடுற மேட்டர்தான் இந்த லவ்...’’ - பையன்கள் வர்க்கம் இப்படிப் பேச, பெண்கள் இருவர் இத்தனையையும் ஆமோதித்துதான் அமர்ந்திருக்கிறார்கள்.

‘‘கேர்ள்ஸ் எங்களுக்குள்ள தனி குரூப்ஸ் இருக்கு. அதுல கிசுகிசு, டிஸ்கஷன்ஸ் எல்லாம் இருக்கு. எல்லாத்துக்கும் மேல லவ் அது, இதுனெல்லாம் குழப்பிக்காம பசங்களோட நல்ல நட்பு இருக்கு. பொண்ணுங்ககிட்ட சொன்னா கூட வெளிய பரவிடும்னு நினைக்கிற சில பிரஸ்டீஜ் இஷ்யூ மேட்டரை எல்லாம் பசங்ககிட்ட நம்பி சொல்லலாம். ஆலோசனை கேக்கலாம். டைம் இருந்தா சொல்வானுங்க. இல்லாட்டி திட்டிட்டு போயிடுவாங்க. ஈஈனு வந்து இளிச்சிக்கிட்டுப் பேசுறதெல்லாம் இப்ப இல்ல!’’ என்கிறார்கள் ஆஸ்மாவும் நசீராவும்.

‘‘எது எப்படியோங்க. சந்தானத்துக்கு கை தட்டுறதும் நாங்கதான்… கண் தானத்துக்கு கையைத் தூக்குறதும் நாங்கதான். எங்கே பிளட் டொனேஷன் கேம்ப்னாலும் அதுல எங்களை மாதிரி காலேஜ் பசங்களை நீங்க கண்டிப்பா பார்க்கலாம். இந்த சென்னை வெள்ளத்துல எங்க கிளாஸ்ல பாதிக்கப்பட்டவங்க ஒரு 3, 4 பேர்தான் இருப்பாங்க. ஆனா, ரிலீஃப் வொர்க்குக்குப் போனவங்க கிட்டத்தட்ட 10, 15 பேர்.

எங்களுக்குள்ள ஈகோ இல்ல, காம்ப்ளெக்ஸ் இல்ல, எதிலும் சீரியஸ்னஸ் இல்ல. அதுதான் எங்களோட ப்ளஸ். சீரியஸாவும் சென்சிட்டிவாவும் இருந்தா எடுத்ததுக்கெல்லாம் பிரச்னை வரும். எதையும் உருப்படியா செய்ய முடியாது. நாங்க பர்சனல் வாழ்க்கையை ரொம்ப சிக்கலாக்கிக்காம ஃப்ரீயா இருக்கோம். அதனால சோஷியல் வாழ்க்கைக்கு நேரம் இருக்கு. இதோ 2016ம் வருஷமே பிறந்துடுச்சு. நீங்கல்லாம் இதோ கடந்து போச்சுனு நினைக்கிறீங்களே மில்லினியம்… கிட்டத்தட்ட அப்போ பொறந்த பசங்க நாங்க. இனிமேலாவது எங்களை எங்க உலகத்துக்குள்ள வந்து புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க!’’ - நமக்கே செக் வைத்து முடிக்கிறது இந்த யூத் குரூப்.

எல்லாத்திலும் நாங்க கடைசி ஆப்ஷனா தள்ளி விடுற மேட்டர்தான் இந்த லவ்...

- கோகுலவாச நவநீதன்
படங்கள்: புதூர் சரவணன்