சொந்தம்
கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர்.
ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார்.
‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்டாங்களே! அதனால இப்ப நான் யாருக்கும் சொந்தம் இல்ல. நான் ஒரு அனாதை. என்னை ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்துல சேர்த்து விடுங்க யுவர் ஆனர்!’’ என்று சசி சொல்ல, சித்தார்த்தும், சியாமளாவும் விக்கித்து நின்றனர்.
‘‘எங்களை மன்னிச்சிடுங்க யுவர் ஆனர்! தயவுசெஞ்சு எங்க விவாகரத்தை ரத்து பண்ணிடுங்க! எங்களுக்கு எங்க மகள்தான் முக்கியம். அவளுக்காக சேர்ந்து வாழறோம்!’’ என்று ஒரே குரலில் இருவரும் சொல்ல, நீதிபதி சிரித்த முகத்ேதாடு அந்த கேஸ் ஃபைலை மூடினார்.
பா.விஜயராமன்
|