துணிச்சல்



நாங்கள் நான்கு பேர்... மூர்த்தி, வாசு, ராஜேந்திரன் மற்றும் நான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். தினம் மாலை கடற்கரையில் சந்திப்போம். மூர்த்தி நான்கு நாட்களாக வரவில்லை. அவருடைய அண்ணன் மகன் மரணத்துக்குப் போயிருந்தவர் இன்றுதான் வந்தார்.‘‘ப்ச்... 35 வயசுதான்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு படுத்ததும் இல்லை. ஆனாலும் திடீர் ஹார்ட் அட்டாக். பாவம், மூணு பொட்டப் புள்ளைங்க, பொண்டாட்டி எல்லாரையும் அம்போனு விட்டுட்டுப் போயிட்டான்!’’ - அவர் சொன்னதும் சாவின் நிதர்சனம் எங்களுக்கும் உறைக்க, நிசப்தம் நிலவியது.

நான் மௌனம் கலைத்து, ‘‘ஓகே... என்னுடைய எல்லா கடமைகளும் முடிஞ்சுடுச்சு. நான் ரெடியாயிட்டேன். எந்த பஸ் வந்தாலும் ஏறிக்குவேன்...’’ என்றேன்.
உடனே மூர்த்தியும், வாசுவும், ‘‘நாங்களும்  ரெடி. வேளை வந்தால், நாம் சொர்க்கத்தில் சந்திப்போம்!’’ என்றனர். ராஜேந்திரன் அமைதியாக இருந்தார்.‘‘என்ன ராஜேந்திரன்? ஒண்ணுமே சொல்லலை, மூணு பேரப் பிள்ளைகளைப் பார்த்துட்டீங்க. இன்னுமா உங்களுக்கு உயிர் மேல் ஆசை..?’’ என்றேன்.

‘‘இல்லை, இன்னும் எனக்கு அம்மா இருக்காங்க, அவங்க உயிரோடு இருக்கும் வரை நான் இருக்கணும். இல்லாட்டி அவங்க அநாதையாகிடுவாங்க!’’ என்றார்.
சாவு குறித்த துணிச்சல் நம் கையில் இல்லைதான்.           

ந.திருக்காமு