கவிதைக்காரர்கள் வீதி



*அனாதையாக அலையும்
காற்று
எல்லா வீடுகளுக்குள்ளும்
நுழைந்து
அடைக்கலம் தேடுகிறது

*வரைந்தது
என்ன ஓவியமென்று
தூரிகைக்குத் தெரியாது

*சூரியன் உதித்தால்
தெரிந்துவிடும்
எந்த திசை கிழக்கென்று

*மரணம் காதோரம்
சொல்லிச் சென்றது,
‘வாழ்க்கைப் பந்தயத்தில்
ஓடிக் களைத்தவர்கள்
என்னிடம் வந்து
இளைப்பாறுங்கள்’ என்று

*சலனமற்ற குளத்தில்
விழுந்த கல்லைப் பற்றி
வட்ட வட்ட அலைகள்
எழுந்து
கரையிடம் புகார் சொல்லின
uதட்டிய கதவிற்குப் பின்னே
தனிமை
கதறி அழுகிறது

*பிச்சைக்காரன்
கனவுகளில்
சோற்றுப்பருக்கைகள்

*நின்றுவிட்ட ஊஞ்சல்
மனதில் இன்னும்
அதன் ஆட்டம்

*சவப்பெட்டியில்
ஆணி அறைந்தார்கள்,
செத்தவன்
எழுந்து வந்துவிடுவானோ
என்ற பயத்தில்

*கனவு
வசந்தத்துக்கான அழைப்பு
நனவு
முட்களின் மீதான நடனம்

ப.மதியழகன்