கடலுக்குள்ளே புதையல்!
விநோத ரஸ மஞ்சரி!
ஒரே நாளில் புதையல், லாட்டரி, ஜாக்பாட் மூலம் மனிதர்கள் கோடீஸ்வரர்கள் ஆகலாம். ஒரு நாடே ஓவர் நைட்டில் ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாகி, பணக்கார நாடுகள் வரிசையில் பல இடங்கள் முந்திவிட முடியுமா? கொலம்பியாவுக்கு வாய்த்திருக்கிறது அந்த அதிர்ஷ்டம். இவர்கள் புதையல் எடுத்திருப்பது மண்ணில் அல்ல... கடலுக்கு அடியில் 1000 அடி ஆழத்தில்!
1708ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி தென் அமெரிக்க நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் நவரத்தினக் குவியலுடன் கொலம்பியாவிலிருந்து ஸ்பெயின் நோக்கி ‘ஸான் ஜோஸ்’ என்ற கப்பல் புறப்பட்டது. ஸ்பெயின் அரசருக்கு இந்தப் பொக்கிஷம் போய்ச் சேரக் கூடாது என எதிரி நாடான பிரிட்டன், இக்கப்பலை நடுக்கடலில் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பொக்கிஷம் எதிரிகளிடம் அகப்படக் கூடாது என்று முடிவெடுத்த கப்பல் கேப்டன், ஒரு கட்டத்தில் கப்பலை வெடிகுண்டு வைத்துத் தகர்த்து மூழ்கடித்து விட்டாராம். ஆக, 600 மனித உயிர்களோடு அவ்வளவு பெரிய பொக்கிஷக் குவியல் ஜல சமாதி ஆகிவிட்டது.
இந்தக் கப்பலைத்தான் 308 வருடங்கள் கழித்து கொலம்பிய அரசு கண்டுபிடித்திருக்கிறது. கொலம்பிய ஜனாதிபதி ஜான் மானுவேல் சான்டோஸ், டிசம்பர் 4ம் தேதி இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதன் தற்போதைய மதிப்பு சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாயாம். ‘‘இவ்வளவு மதிப்புள்ள பொக்கிஷம் சரித்திரத்தில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டதில்லை!’ என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருக்கிறார் அவர்.
ஆனால், இந்தப் பொக்கிஷம் ஸ்பெயின் நாட்டிற்காக ஸ்பெயின் கப்பலில் சேகரித்து அனுப்பப்பட்டதால் ‘எங்கள் சொத்து எங்களுக்குத்தான்’ என உரிமை கோருகிறது ஸ்பெயின். அவசியம் ஏற்பட்டால் ஸ்பெயின் இந்தப் பஞ்சாயத்தை ஐ.நா சபைக்கும் கொண்டு போகுமாம். கொலம்பியாவின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா?
- பிஸ்மி பரிணாமன்
|