உதவி



‘‘பத்மா, இந்த ‘பேன்ட் ஷர்ட்டெல்லாம் பழசாயிடுச்சு.. அக்கம் பக்கத்து ஏழைங்களுக்குக் குடுத்துடு!’’‘‘என்ன பீரோவுல பழைய புடவை நிரம்பி வழியுது? ஒவ்வொண்ணா எடுத்து வேலைக்காரிக்குத் தந்துட வேண்டியதுதானே!’’ - இப்படித்தான் சொல்வார் கார்த்திகேயன். ஆனால் இன்று அவரே சொல்கிறார்... வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துணிமணிகள் கொடுக்க வேண்டாமாம்!பத்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘என்னாயிற்று இவருக்கு?’ கேட்டே விட்டாள்.

‘‘என்னங்க... கட்டின துணியோட உயிர் பிழைச்சா போதும்னு நடுரோட்டுல வந்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க ஜனங்க. சாப்பாடு இல்ல... குடிக்கிற தண்ணி இல்ல... பலவீனப்பட்டு வேதனையோட நிக்கிறாங்க. எப்பவும் பழைய துணிகளைக் கொடுக்கச் சொல்ற நீங்க இப்ப வேண்டாம்ங்கறீங்களே ஏன்?’’

‘‘நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட. முறையான சாப்பாடு இல்லாம, சுகாதாரம் இல்லாத இடங்கள்ல இருக்கறதால, அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முழுமையா இருக்காது. நீ பழைய துணிமணிகளைக் கொடுக்க, அதுல ஏதாவது கொஞ்சம் தொற்று இருந்தாக் கூட அத எதிர்க்க அவங்க உடம்புக்கு பலம் இருக்காது. வெள்ளத்தவிட கிருமித் தொற்றுதான் பேராபத்து! இப்பெல்லாம் நூற்றி ஐம்பதுக்கும் இருநூறுக்கும் கூட சேலை கிடைக்குது. நம்மால முடிஞ்சது எத்தனையோ அதைப் புதுசாவே வாங்கிக் கொடுத்திடுவோம்...’’ என்றார் கார்த்திகேயன். டபுள் சம்மதத்தோடு தலையாட்டினாள் பத்மா!                   

கே.எம்.சம்சுதீன்