கல்யாணம் ஆகாமலே விதவை!



ஒரு சூப்பர் ஹிட் காதல் கதை

கேரளாவில் ஒரு சினிமா 19 நாளில் 20 கோடி ரூபாய் வசூல் அள்ளுவதெல்லாம் நம்ப முடியாத சாதனை. அதைச் சமீபத்தில் செய்திருக்கிறது ‘என்னு நிண்ட மொய்தீன்’ திரைப்படம். இதுவரை அதிக கலெக்‌ஷன் அள்ளிய டாப் 5 மலையாளப் படங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. தமிழில் இதுவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரீமேக்கப்படும் என்கிறார்கள்.

1960களைக் கண்முன் நிறுத்தியிருக்கும் இந்தப் படம், மொய்தீன் - காஞ்சனமாலா எனும் நிஜக் காதலர்களின் கதை. கல்யாணம் ஆகாமலேயே மொய்தீனின் விதவையாக வாழும் காஞ்சனமாலாவுக்கு இப்போது 75 வயது. ஒரு காவியக் காதலை சம காலத்தில் காணத் தந்தவர் எனும் மரியாதையை அவர் மீது வைத்திருக்கிறார்கள் கேரள மக்கள்!

கோழிக்கோடுக்கு அருகே உள்ள முக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் காஞ்சனமாலா. மதங்கள் தாண்டி இவர் மொய்தீன் என்பவரைக் காதலித்ததும், சமூகம் அவர்களைச் சேர விடாமல் தடுத்ததும், அசைக்க முடியாத உறுதியோடு இருவருமே வேறு வாழ்க்கை தேடிக்கொள்ளாமல் வாழ்ந்ததும்... கேட்கக் கேட்க நெகிழ்ச்சிக் குவியல். இதுவரை புத்தகமாகவும் ஆவணப்படமாகவும் வந்திருக்கும் இவர்களின் வாழ்க்கை, திரைப்படமாக இத்தனை பெரிய வெற்றியைத் தொடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை!

‘‘நான் அந்தப் படத்தையே பார்க்கவில்லை. பார்க்கப் போவதும் இல்லை. என் வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளை திரையில் பார்த்தால் மீண்டும் தகர்ந்து விடுவேன். நான் மொய்தீனுக்காக செய்ய வேண்டிய சமூக சேவைகளை விரிவுபடுத்த இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழ வேண்டும்!’’ - இடுங்கிய கண்களில் சோகம் வழியப் பேசுகிறார் காஞ்சனமாலா.

‘‘இந்த ஊரிலேயே பிரபலமான இரண்டு குடும்பங்கள் எங்களுடையவை. என் அப்பாவும் அவர் அப்பாவும் நண்பர்கள். ஒன்றாக சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள். நாங்கள் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். அதன் பின்புதான் எங்களிடையே இருந்தது காதல் என இனம் கண்டுகொண்டோம். எங்களிடையே கடிதப் போக்குவரத்து அதிகரித்தது. இது ஒரு நாள் வீட்டிற்குத் தெரிய வர... என் படிப்பை நிறுத்தினார்கள்.

அதன் பின், ஒன்றல்ல... இரண்டல்ல... 25 ஆண்டுகள் வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டேன். 10 ஆண்டுகள் மொய்தீனுக்கும் எனக்கும் கடிதப் போக்குவரத்து கூட இல்லை. ஆனால், உள்ளுக்குள் முன்பைவிட தீவிரமாகக் காதலித்தோம். வீட்டில் அடிக்கடி அடி... உதை... மிதி..! மொய்தீனுடன் வாழ வேண்டும் என்று நான் ரொம்பவும் விரும்பியதால், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை!

மொய்தீனின் வாப்பாவிற்குத் தன் மகன், தன் உயிர் நண்பனின் மகளைக் காதலித்துவிட்டதில் பெரும் கோபம். பச்சை துரோகம் செய்துவிட்டதாகத் திட்டினார். மொய்தீனை கத்தியால் குத்திய சம்பவம் கூட நடந்தது. மொய்தீனும் நானும் தனியே போய் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அப்படிச் செய்தால் எனது ஆறு சகோதரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் பொறுத்திருக்கத் தீர்மானித்திருந்தோம். முதல் 10 ஆண்டு காலத்தில், சகோதரிகளுக்குத் திருமணம் ஆகிவிட்டதால், அதன்பின் என் மேல் இருந்த கட்டுப்பாடு ஓரளவிற்குத் தளர்த்தப்பட்டது.

எங்கள் காதலைப் புரிந்துகொண்டவர்கள் கடிதப் பரிவர்த்தனைக்கு ரகசியமாக உதவினார்கள். நானும் மொய்தீனும் என்ன எழுதியிருக்கிறோம் என்று யாருக்கும் தெரியாமல் இருக்க, நாங்களாகவே குறியீடுகளை வைத்து புதிய எழுத்துகளை உருவாக்கி அதில் எண்ணங்களைப் பரிமாறிக்கொண்டோம். இருவரின் காதலுக்காக ஒரு மொழியையே உருவாக்கியது அநேகமாக நாங்களாகத்தான் இருப்போம்.

இந்தக் கால கட்டத்தில், மொய்தீன் ஒரு கால்பந்தாட்டக்காரராக, அரசியல்வாதியாக, பஞ்சாயத்து உறுப்பினராக, பேச்சாளராக, முக்கம் பஞ்சாயத்தின் முக்கிய பிரமுகராகப் பரிணமித்தார். முக்கம் வந்திருந்த பிரதமர் இந்திரா காந்தி, மொய்தீன் ஆரம்பித்த ‘ஸ்போர்ட்ஸ் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிட்டார் என்றால் அவர் செல்வாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள். மொய்தீனின் வாப்பா இறந்த பின்பு, அவரது தம்பிக்கு 18 வயது நிறைவடையக் காத்திருந்தோம். 1983ம் ஆண்டின் துவக்கத்தில் அவன் மேஜர் ஆனதும், சொத்துகளைப் பிரித்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளலாம் என்று மொய்தீன் தீர்மானித்தார்!’’ என்கிற காஞ்சனமாலாவின் வாழ்வில் அதன்பின் விதி வில்லனாகியிருக்கிறது.

‘‘1982 ஜூலை 14 இரவில் இங்கு பேய்மழை. இருவழிஞ்சி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அடுத்த நாள் காலை கோழிக்கோடு செல்ல மொய்தீன் படகில் ஏற... அவருடன் 28 பயணிகளும் இருந்தனர். நடு ஆற்றில் அந்தப் படகு கவிழ்ந்தது. மொய்தீனுக்கு நீச்சல் மிக நன்றாக வரும். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர் கரை நோக்கி நீந்தவில்லை. மற்ற பயணிகளைக் காப்பாற்றியிருக்கிறார்.

கடைசி இருவரை காப்பாற்றும் முயற்சியில் அவர் சுழலுக்குள் சிக்கிவிட்டார். இருவழிஞ்சி ஆற்றில் குளித்து, நீந்தி வளர்ந்தவர் மொய்தீன். கடைசியில் அந்த நதியிலேயே முடிவைத் தேடிக்கொண்டார். மூன்றாம் நாள் மொய்தீனின் உடல் கிடைத்தது. அவரின் இறுதி நிலையைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. அந்தக் கோலத்தைப் பார்த்தால், நானும் இறந்துவிடுவேன் என்று பயந்தார்கள். தற்கொலைக்கு முயல்வேன் என்று பயந்து, வீட்டின் கொல்லைப் புறத்தில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எல்லாம் அகற்றினார்கள். பட்டினி கிடந்து சாகலாம் என்று முடிவு செய்தேன்.

மொய்தீனின் உம்மாவைக் கொண்டு எனக்கு ஆறுதல் சொல்லச் சொன்னார்கள். மொய்தீன் ஊருக்குச் செய்ய நினைத்த நல்ல காரியங்களைத் தொடரவேனும் நான் உயிரோடிருக்க வேண்டும் என்றார் அவர்.

அந்த ஆறுதல் வார்த்தைகள் மொய்தீன் சொல்வதாகவே எனக்குப் பட்டன. தட்டிக் கழிக்க முடியவில்லை. மொய்தீன் உயிரைக் குடித்த இருவழிஞ்சி ஆற்றின் தண்ணீரைக் குடித்து உண்ணாவிரதத்தை முடித்தேன். மொய்தீனின் மனைவி ஆகத்தான் முடியவில்லை... மொய்தீனின் விதவையாக மாற முடிவு செய்தேன்!’’ என்கிற காஞ்சனமாலா, அபலைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவு தரும் ‘மொய்தீன் சேவா மந்திர்’ அமைப்பை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

என் வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளை திரையில் பார்த்தால் மீண்டும் தகர்ந்து விடுவேன்.இருவரின் காதலுக்காக ஒரு மொழியையே உருவாக்கியது அநேகமாக நாங்களாகத்தான் இருப்போம்.

தண்ணீரால் காயமுற்றவள்!

‘ஜலம் கொண்டு முறிவேற்றவள்’ (தண்ணீரால் காயமுற்றவள்) என்ற பெயரில் காஞ்சனமாலாவின் கதையை டாகுமெண்டரி படமாக எடுத்தவர் இயக்குநர் விமல். அவரேதான் ‘என்னு நிண்ட மொய்தீன்’ திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். ‘‘மொய்தீன் சாயல் கொண்ட பிரித்விராஜ் மொய்தீனாக நடித்தால் நன்றாக இருக்கும்’’ என காஞ்சனமாலா பரிந்துரைத்தார். காஞ்சனமாலாவாக பார்வதி நடித்தார். ‘‘எங்கள் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் படத்தில் மாற்றிக் காட்டப்பட்டிருக்கின்றன’’ என இடையில் காஞ்சனமாலா குற்றம் சாட்டினார்.

இருந்தாலும் படம் பல கோடிகள் வசூல் செய்தது. காஞ்சனமாலாவின் சமூக சேவைகள் தற்சமயம் நடப்பது இரும்புத் தகடுகள் வேயப்பட்ட ஒரு சாதாரண இடத்தில். இதைப் படக்குழு கண்டுகொள்ளாமல் விட்டாலும், ‘என்னு நிண்ட மொய்தீன்’ படம் பார்த்த மலையாள நடிகர் திலிப், காஞ்சனமாலாவைச் சந்தித்து, அவரது சமூக சேவைகளுக்காக நிதி உதவி செய்வதாக அறிவித்திருக்கிறார். இதன் பின்பாவது படக்குழு உதவ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

- பிஸ்மி பரிணாமன்