ஆகாயம் கனவு அப்துல் கலாம்



இந்திய ராக்கெட்டின் சரித்திரம் 7

முதல் தீக்குச்சி


21 நவம்பர் 1963. நவீன இந்திய ராக்கெட் சரித்திரத்தில் ஒரு முக்கியமான தினம். அன்றுதான் இந்தியா முதன்முதலாக ஒரு சவுண்டிங் ராக்கெட்டை தும்பா ஏவுதளத்திலிருந்து ஏவியது. அந்த ராக்கெட்டின் பெயர் நைக் - அப்பாச்சி (Nike - Apache).இது இருநிலை திட எரிபொருள் ராக்கெட் (Two stage solid propellant vehicle).

நைக் என்பது முதல் நிலை. இதை செயலூக்கி (Booster) என்பர். அப்பாச்சி என்பது இரண்டாம் நிலை. இது நிலைபேணி (Sustainer). இவை ராக்கெட்டின் இரு பகுதிகள். பொதுவாக 200 கி.மீ உயரம் வரை பாயக்கூடிய சக்தி படைத்தது இவ்வகை ராக்கெட். அடிப்படையில் இது இந்திய ராக்கெட் அல்ல; அமெரிக்கத் தயாரிப்பு. முதன்முதலில் 1958ல் மெக்ஸிகோவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இதற்குத் தேவையான MPS-19 என்ற ரேடார், DOVAP (Doppler Velocity and Positioning) என்ற இடங்காணல் அமைப்பு ஆகிய இரண்டையும் அமெரிக்கா தந்தது. MINSK என்ற கணிப்பொறியையும், ஒரு ஹெலிகாப்டரையும் சோவியத் யூனியன் அளித்தது. ஆராய்ச்சியின் இதயமான சோடியம் ஆவி தாங்கு சுமையை (Sodium Vapour Payload) பிரான்ஸ் கொடுத்தது. இதில் இந்தியாவின் பங்கு என்பது ஒருங்கிணைத்தலும் செயல்படுத்தலும் மட்டும்தான்.

இந்திய நேரப்படி மாலை 6:25 மணிக்கு நைக் - அப்பாச்சி ராக்கெட் பெருஞ்சப்தத்துடன் சுற்றுப்புறத்தைத் தொந்தரவு செய்து கொண்டு கிளம்பியது. சற்று நேரத்துக்கெல்லாம் இருள் சூழத் தொடங்கிய அந்தி வானப் பின்னணியில் பிரமாண்ட மேகக்கூட்டம் ஒன்று உருவாகி, ஆரஞ்சு - மஞ்சள் நிற ஒளிர்வாய்த் திரண்டது. அந்த ஆரஞ்சு நிற மேகமானது அவ்வுயரத்தில் காற்று மேலோங்கி இருப்பதை உணர்த்துவதாகும்.

சுற்றி 250 கி.மீ தூரத்திற்கு அக்காட்சி தெரிந்தது.  கேரளா முழுக்கவும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் பொதுமக்கள் பலர் இதை வாய் பிளந்து பார்த்தனர். அதற்கு மறுநாள் தி இந்து நாளேட்டின் தலைப்புச் செய்தி: “India’s First Two-stage Rocket Launched”. மாறாய், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தலைப்புச் செய்தி: “Tense Drama in Kerala Village”.

அதைக் கொண்டாட அன்றிரவு பிரமாண்ட பார்ட்டி நடந்தது. ஆனால் இந்த வெற்றி எளிதாய்க் கிடைத்து விடவில்லை. தும்பா ராக்கெட் ஏவுதள கட்டமைப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் இந்திய விஞ்ஞானிகள் நாசா சென்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க, ஏவப்பட வேண்டிய ராக்கெட் இந்தியா வந்திறங்கியது.
தும்பாவிலிருந்த தேவாலயத்தின் பிரார்த்தனை அறையே ஆய்வுக்கூடமானது; பிஷப் அறை, வடிவமைப்பு மற்றும் வரைகலை அலுவலகமானது.

 நாசாவில் ஆறு மாதப் பயிற்சி முடிந்து இந்திய விஞ்ஞானிகள் 1963ன் மத்தியில் இந்தியா திரும்பினர் (இந்தப் பயிற்சிக்காக அப்துல் கலாம் நாசாவின் வாலோப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி சென்றிருந்தபோதுதான், அங்கே திப்பு சுல்தானின் வீரர்கள் போர்க்களத்தில் ராக்கெட் பயன்படுத்தியதைக் காட்டும் ஓவியத்தைக் கண்டார்).
பிரான்ஸிலிருந்து வந்த ஜேக் ப்ளாமௌண்ட் என்பவர் இத்திட்டத்தில் உதவிகரமாக இருந்தார். (அவர் செய்த உதவிக்கு பிற்பாடு அவருக்கு பத்ம விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு.) பி.டி.பவ்சர் என்ற இந்திய விஞ்ஞானியை ப்ளாமௌண்ட்டுடன் இணைந்து செயல்படப் பணித்தார் விக்ரம் சாராபாய்.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த காலம். அப்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் என முரண்பட்ட நாடுகளிலிருந்து ஒரே சமயத்தில் ஒரு திட்டத்துக்கு ஒத்துழைப்பை இந்தியா போன்ற ஒரு தொழில்நுட்பக் கத்துக்குட்டி தேசம் பெற முடிந்ததற்குக் காரணம், விக்ரம் சாராபாயின் ஆளுமையும் அவருக்கு இருந்த சர்வதேசியத் தொடர்புகளும்தாம்.

ராக்கெட் உதிரிப் பாகங்களும் உதவி இயந்திரங்களும் இந்தியா வந்தடைந்த பிறகுதான் ஒரு விஷயம் கண்டறியப்பட்டது. அமெரிக்கா தந்த நைக் - அப்பாச்சி ராக்கெட்டில் பிரான்ஸ் கொடுத்த சோடியம் ஆவி தாங்குசுமையை வைக்க முடியாது என. அளவு வேறுபாடு. குழப்பத்திற்கான காரணம், அமெரிக்கக்காரர்கள் பிரிட்டிஷ் அளவைகளைப் பின்பற்ற, பிரான்ஸ்காரர்களோ மெட்ரிக் அளவையைப் பயன்படுத்தி இருந்தார்கள்.

இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டபோது ராக்கெட் ஏவ இன்னும் சில தினங்களே இருந்தன. பதற்றம் அதிகரித்தது. உலகம் இந்தியாவைக் கவனித்துக் கொண்டிருந்தது. அப்போது தோற்றால் அது பெரிய அவப்பெயர் ஆகும். ஏவுகணை தாங்குசுமை இரண்டும் பரஸ்பரம் இணையும் பகுதியில் திருகுபுரி (Screw Thread) சரி செய்யப்பட வேண்டும். அதனால் எந்தப் பாகமும் சேதமாகி விடக்கூடாது. கவனமாகச் செய்ய வேண்டிய விஷயம். அப்துல் கலாமின் மேற்பார்வையில் பஞ்ச்சால் என்பவர் இதைத் திறமையாகச் செய்து முடித்தார். ஒரு வழியாக ராக்கெட் ஏவத் தயாராகியது.

சவுண்டிங் ராக்கெட்களில் தற்கால செயற்கைக்கோள்கள் போல் பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தகவல் அனுப்பும் வசதியோ அவசியமோ இல்லை. பதிலாக ராக்கெட் ஏவப்படும்போது பல்வேறு இடங்களிலிருந்து ஒரே சமயத்தில் புகைப்படங்கள் எடுக்கப்படும். அவற்றைக் கொண்டு ஆராய்ச்சி நடக்கும்.நைக் - அப்பாச்சி ராக்கெட் ஏவுதலின்போது கன்னியாகுமரி, பாளையங்கோட்டை, கொடைக்கானல், கோட்டயம் என நான்கு ஊர்களில் கேமரா வைத்து ஒரே சமயத்தில் படங்கள் எடுத்தனர். ஒரே சமயத்தில் எனில் ஒரு விநாடி மட்டுமே கூடக்குறைய இருக்குமளவு துல்லியமாய் இருக்க வேண்டும். தனிப்பயன் தொலைபேசி இணைப்புகளின் (Dedicated Telephone Lines) வழி முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட நேர அழைப்புகளின் (Fixed-time Calls) மூலம் இப்படிப் படமெடுப்பது சாத்தியமானது.

ராக்கெட் ஏவத் திட்டமிட்டிருந்த தினம். அமெரிக்க மற்றும் பிரெஞ்சு விஞ்ஞானிகள் ராக்கெட்டை ஒருங்கிணைப்பதில் உதவு செய்தனர். தேவாலயத்தில் வைத்துத்தான் ராக்கெட் ஒருங்கிணைக்கப்பட்டது. பிறகு ஒரு லாரியில் ஏற்றி ஏவுதளத்திற்குக் கொண்டு சென்றனர். இது போக, கைகளால் இயக்கப்படும் ஒரு ஹைட்ராலிக் க்ரேன் இருந்தது. அதைப் பயன்படுத்தி ராக்கெட்டை லாரியிலிருந்து எடுத்து ஏவுகலத்தில் நிலைநிறுத்த முயன்றனர். அச்சமயம் ராக்கெட் ஒருபக்கமாகச் சாயத் தொடங்கியது. க்ரேனில் கசிவு. க்ரேனைப் பழுது நீக்கச் சமயமில்லை. கடைசியில் அங்கிருந்தவர்கள் அனைவரும் கைகளாலேயே தூக்கிச் சுமந்து, ராக்கெட்டை அதன் ஏவுகலத்தில் பொருத்தினர்.

அதோடு பிரச்னை முடியவில்லை. ராக்கெட்டைக் குறிப்பிட்ட திசையில் ஏவுதற்கு ஏவுகலத்தை சரியான கோணத்தில் நிலை நிறுத்த ஒரு ரிமோட் சிஸ்டம் அமைக்கப்பட்டிருந்தது. அது சரியாய் வேலை செய்யவில்லை. அதனால் ராக்கெட்டின் அருகே ஆட்கள் சென்று ஏவுகலத்திலேயே சரியான கோணம் குறித்தனர். ராக்கெட் ஏவப்பட ஐந்து நிமிடம் இருக்கும்போது, அதனருகே குறிப்பிட்ட தூரத்திற்கு ஆட்களை வெளியேற்ற எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. அதற்கு இரு நிமிடம் பின்பும் ஒருவர் ஏவுகலத்தை சீர்செய்து கொண்டிருந்தது அறியப்பட்டு அவரை அப்புறப்படுத்தினர்.

அத்தினத்தின் முற்பகுதியில் தும்பாவில் வானம் மேக மூட்டமாகக் காணப்பட்டது. அச்சூழலில் ராக்கெட் ஏவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருக்கும், ஆராய்ச்சி பயன் தராது. இத்தனையும் சிரமப்பட்டது வீணாகும். ஆனால் மாலை ராக்கெட் ஏவும் நேரத்தில் வானம் சீரடைந்தது. ஆரஞ்சு நிற சோடியம் ஆவி மேகங்கள் மிகத் துல்லியமாய்ப் புகைப்படங்களில் பதிவாயின. ஆராய்ச்சி பூரண வெற்றியடைந்தது. உலக விண்வெளி ஆய்வு மைய வரைபடத்தில் குறியிட்டு ‘தும்பா’ என்று நாம் எழுதிய தினம் அது.

தேசமே கொண்டாடியது, ஒருவரைத் தவிர! அவர், விக்ரம் சாராபாய். அவர் இந்தியாவின் அடுத்தடுத்த விண்வெளித் திட்டங்கள் குறித்து யோசிப்பதில் தீவிரமாய் இருந்தார். அடுத்த நாள் நைக் - அப்பாச்சி திட்டத்திற்கு உழைத்தவர்களை அழைத்து இந்திய செயற்கைக்கோள் ஏவுவாகனம் உருவாக்கும் தம் கனவினைப் பகிர்ந்து கொண்டார்.

1964ல் பிரெஞ்சுக் கம்பெனி ஒன்றுடன் Centaure வகை சவுண்டிங் ராக்கெட் உருவாக்க இந்தியா ஒப்பந்தம் போட்டது. அதற்கடுத்த ஆண்டு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (Space Science and Technology Centre - SSTC) துவக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் பிரதான நோக்கம், உள்நாட்டிலேயே ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றை வடிவமைத்து, உருவாக்கி, செலுத்துவதாகும்.

அதற்குப் பின் இரு தசாப்தங்களுக்கும் மேல் பல அந்நிய சவுண்டிங் ராக்கெட்களை தும்பா ஏவியபடியே இருந்தது. அவற்றில் 86% M-100 என்ற ரஷ்ய சவுண்டிங் ராக்கெட். சுமார் 1600 M-100 ராக்கெட்கள் ஏவப்பட்டன. ஒன்று தவிர எதுவும் தோல்வியுறவில்லை. (அந்தத் தோல்வியுடன் அது நிறுத்தப்பட்டது). ஒருகட்டத்தில், வாரம் ஒரு ராக்கெட் ஏவுமளவு தும்பாவின் பணிப்பளு கூடியது. திருவனந்தபுரம் வரும் சுற்றுலாப்பயணிகள் புதன்கிழமை வாக்கில் அங்கிருக்கும்படி பார்த்துக் கொண்டனர். அதுதான் ராக்கெட் ஏவப்படும் வார நாள்!

1965 டிசம்பர் 21ல் ‘தும்பா ஏவுதளம் தொடர்ந்து இயங்க நிதியுதவி அளிப்பதாக’ ஐ.நா சபை அறிவித்தது. அதற்காக ஒரு சர்வதேச ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய தேசங்களிலிருந்து விஞ்ஞானிகள் உறுப்பினர்களாய் இருந்த அதற்கு விக்ரம் சாராபாயைத் தலைவராய் நியமித்தது இந்தியா.

1968 பிப்ரவரி 2ம் தேதி அன்று பிரதமர் இந்திரா காந்தி தும்பா ராக்கெட் ஏவுநிலையத்தை ஐ.நா சபைக்கு அர்ப்பணித்தார்.அதைக் காண ஜவஹர்லால் நேருவும் ஹோமி பாபாவும் அப்போது இல்லை!திருவனந்தபுரம் வரும் சுற்றுலாப்பயணிகள் புதன்கிழமை வாக்கில்  அங்கிருக்கும்படி பார்த்துக் கொண்டனர். ஏனெனில், அதுதான் தும்பாவில் ராக்கெட்  ஏவப்படும் வார நாள்!

(சீறிப் பாயும்...)

சி.சரவணகார்த்திகேயன்