முயன்றால் முயலும் கை கொடுக்கும்!



ஒரு எம்.பி.ஏ. பட்டதாரியின் வெற்றிக் கதை

வெயிலின் ரேகைகள் உடலில் படக்கூடாது; புழுதி மண்ணை பாதங்கள் தொடக்கூடாது. ஏ.சி.யின் இதமான குளிரில், காலரில் அழுக்குப் படாமல் சம்பாதிப்பதுதான் பலருக்கும் இன்று லட்சியம். ஆனால், எம்.பி.ஏ. பட்டதாரியான  சபரிநாதன் இதற்கு நேரெதிர். ஒரு பிரபல ஐ.டி கம்பெனியின் வேலையைத் தூக்கிப் போட்டுவிட்டு ஆடு வளர்க்கப் புறப்பட்டு, முயல் வளர்த்து தொழிலில் உச்சம் தொட்டிருக்கிறார் இந்த  இளைஞர்.

இவரின் வெற்றிக் கதை படு சுவாரசியம்!‘‘எனக்கு சொந்த ஊர் மதுரை, கடச்சனேந்தல் பக்கத்துல இருக்கும் அரும்பனூர். அப்பா கவர்மென்ட் பஸ் டிரைவர். அம்மா ஹவுஸ் வொய்ஃப். அப்பா நிறைய கனவுகளோட என்னைப் படிக்க வச்சார்.

நானும் நல்லா படிச்சேன். கேம்பஸ் இன்டர்வியூல கிடைச்ச முதல் வேலையே வெளிநாட்டு வங்கியில பைனான்ஷியல் மேனேஜர். எட்டு மாசத்துல இன்னும் கூடுதல் சம்பளத்தோட ஒரு பெரிய பெயின்ட் கம்பெனியில ஹெச்.ஆர் மேனேஜரா வேலை கிடைச்சது. அந்தக் கம்பெனியிலதான் எனக்கு விவசாயம் தொடர்பா ஒரு ப்ராஜெக்ட் செய்யறதுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. அது நவீன முறையில ஆடு வளர்க்குற திட்டம். அதைச் செய்யும்போது ஆடு வளர்ப்பு மேல எனக்கே ஆர்வமாகிடுச்சு. ஆனா, அந்த ப்ராஜெக்டை எங்க ஆபீஸ்ல ஏத்துக்கல.

எனக்கு மனசே கேக்கல. எனக்குள்ள ஒரு சுயதொழில் ஆர்வம் பூத்துப் பொங்கினதை அன்னைக்கு உணர்ந்தேன். மறுநாளே அந்த வேலைக்கு குட்பை சொன்னேன். குடியிருந்த வீட்டைத் தவிர எனக்குன்னு காலடி வைக்கற அளவுக்குக் கூட சொந்தமா நிலம் கிடையாது. என் கல்லூரித் தோழி இளமதி அவங்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்து உதவினாங்க. நான் சேர்த்து வச்சிருந்த நாலு லட்ச ரூபாயை முதலீடா போட்டு ஆடு வளர்க்க ஆரம்பிச்சேன்!’’ என்கிற சபரிநாதனுக்கு அதில் வெற்றி கிட்டவில்லை.

‘‘பத்து ஆட்டுக்கு மேல பராமரிக்கணும்னாவே உதவிக்கு ஆள் தேவை. நான் ஐம்பது ஆடு வளர்த்தேன். உதவிக்கு ஆளுங்க கிடைக்கிறதுல தொடர்ந்து சிக்கல். போதாக்குறைக்கு ஆட்டுல லாபம் பார்க்க 18 மாசம் ஆகுமாம். தப்பா முடிவு எடுத்துட்டமோன்னு திகைச்சு நின்னேன். அப்போதான் என் தோழி, ‘நீ ஏன் முயல் வளர்க்கக் கூடாது’னு ஒரு புது விதை தூவினாங்க. முயல் வளர்ப்பு பற்றி விசாரிச்சப்போ அதுல பலபேர் ஈடுபட்டு நஷ்டமடைஞ்சிருக்காங்கனு ஒரு நல்ல சேதி கிடைச்சது!’’ என்கிற சபரி, சிரிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விடுகிறார்.

‘‘அப்பதான் மதுரை கால்நடை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பண்ணை முருகானந்தத்தின் அறிமுகம் கிடைத்தது. ‘முயல் வளர்க்குறது லாபகரமான தொழில்தான். ஆனா, சில நுட்பங்களை தீவிரமா பின்பற்றணும். இல்லாட்டா முயல் நம்மை கைவிட்டுடும்’னு சொல்லி வழி காட்டினார்.அவர் ஆலோசனைப்படி ஒரு யூனிட்டுக்கு 7 பெண் முயல், 3 ஆண் முயல்னு ஐந்து யூனிட் வீதம் 50 முயல்களை வாங்கி  பண்ணையை ஆரம்பிச்சேன்.

மெல்ல வளர்ந்து இன்னைக்கு என்கிட்ட 190 பெண் முயல், 70 ஆண் முயல்னு மொத்தம் 260 தாய் முயல்கள் இருக்கு. 26 யூனிட் முயலும் சேர்ந்து மாசத்துக்கு சுமார் 1000 குட்டிகள் போடுது. உயிரோட வித்தா  கிலோ 250 ரூபாய். கறியா வித்தா 420 ரூபாய். எல்லா செலவும் போக குறைஞ்சது மாசத்துக்கு ஒரு யூனிட்டுக்கு அஞ்சாயிரம் லாபம் கிடைக்கும்!’’ எனும் சபரிநாதனின் வார்த்தை வியப்பூட்டுகிறது.

‘‘முயல்களை தரையில் வளர்க்காமல் கூண்டுகளை அந்தரத்துல கட்டி வச்சு வளர்க்கணும். அப்புறம் சரியான நேரம் பார்த்து இணை சேர விடணும். வெயில், மழை பாதிக்காம முயல்களை இன்டோர்ல வளர்க்குறதுதான் நல்லது. பூனை, நாய்... ஏன், புது மனுஷங்களைக் கூட பண்ணைக்குள்ள அனுமதிக்காம இருக்கறது நல்லது. ஏன்னா, முயல் ரொம்ப சென்சிட்டிவ். பயத்தால அதுக்கு கருச்சிதைவு ஆகலாம். சின்ன அளவுல முயல் பண்ணை அமைக்க அரை ஏக்கர் இடம் இருந்தா போதும். வீட்டு மாடியில கூட ஷெட் போட்டு வளர்க்கலாம்.

முயலைப் பராமரிக்கிறது ரொம்ப ஈஸி. இயல்பாவே முயல்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அஜீரணத்துக்கு வெற்றிலை, தும்மலுக்கு தூதுவளை, வயித்துப் பூச்சிக்கு வேப்பிலை, கழிசலுக்கு தென்னை இலை, முடி உதிர்வைத் தடுக்க நார்த்தை இலைனு தினமும் ஒண்ணு போட்டாலே தின்னுட்டு தெம்பா வளரும்.

முயல் கறியை ‘வொயிட் மீட்’னு சொல்வாங்க. நீரிழிவு நோயாளிகள் முதல் இதய நோயாளிகள் வரை எல்லாரும் சாப்பிடலாம். சீக்கிரம் ஜீரணமாகிடும். புரதம் அதிகம். கொழுப்பே இல்லை. டயட்ல இருக்கற மக்களுக்கும் ஏற்றது முயல் கறி.  மதுரை, ஓசூர், கோவை, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூருனு பல ஊர்களுக்கும் இங்கிருந்துதான் முயல் போகுது!’’ என்கிறார் அவர் பெருமிதமாக.

 ‘‘இப்ப இந்த ஏரியாவுல புதுசா 30க்கும் மேற்பட்ட முயல் பண்ணைங்க வந்தாச்சு. பலபேர் என்னை மாதிரியே பட்டதாரிகள். சந்தோஷமா இருக்கு. போட்டி கடுமையாகும்போதுதான் உழைக்கிற வேகமும் அதிகமாகுது. நிறைய பேரு முயல் வளர்ப்பது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றம்னு நினைச்சிக்கிட்டு  இருக்காங்க.

உண்மையில் hareங்கற நாட்டு முயல் வளர்க்குறதுக்குத்தான் தடை. நியூசிலாந்து ஒயிட், சின்சிலா, சோவியத் சின்சிலா, டச், ஒயிட் ஜெயன்ட், கலிபோர்னியா, ரெட் மற்றும் பிளாக் ஜெயன்ட் மாதிரி வெளிநாட்டு வகை முயல்களை கறிக்காக வளர்க்கலாம்.

அங்கோரா வகை முயல், தோல் மற்றும் ரோமங்களுக்காக வளர்க்கப்படுது. இதிலிருந்து பர்ஸ், தொப்பி மற்றும் ஆடைகள் தயாரிக்கறாங்க.  நீங்களும் முயற்சி பண்ணுங்க... முயலும் கைகொடுக்கும்!’’ என்கிறார் சபரிநாதன். முயலுங்கள், வாழ்த்துகள்! வீட்டின் மொட்டை மாடியில கூட ஷெட் போட்டு வளர்க்கலாம். முயலைப் பராமரிக்கிறது ரொம்ப ஈஸி!

- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: டி.மணிகண்டன்