உயிர்
குறுக்கே போன பூனையைக் காப்பாற்ற காரின் பிரேக்கை சட்டென்று மிதித்தான் கதிர். கார் ஒரு குலுங்கு குலுங்கி நின்றது. பின் சீட்டில் உட்கார்ந்திருந்த செல்வந்தர் நடராஜன் சட்டென டென்ஷன் ஆனார்.‘‘என் உயிரை எடுக்க டிரைவரா வந்து இருக்கியா? முதல்ல வண்டியை ஓரம் கட்டு. சாவியை கொடுத்துட்டு போயிட்டு வா... உனக்கு இனிமே வேலை இல்லை!’’ - கத்தினார் செல்வந்தர்.அதோடு அவனை அவர் பார்க்கவில்லை.பின்பொரு நாள்...
அந்த ஆபரேஷன் தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது.‘‘டோனர்கிட்ட இருந்து இதயம் வந்தாச்சு... ஆம்புலன்ஸ் டிரைவர் பத்து கிலோமீட்டர் தூரத்தை பத்து நிமிஷத்துல திறமையா கடந்து இந்த இதயத்தைக் கொண்டு வந்துட்டார். ஆபரேஷன் சக்சஸ்..!’’ - டாக்டர்கள் பேசிக்கொண்டார்கள்.
இதய மாற்று ஆபரேஷன் முடிந்து செல்வந்தர் நடராஜன் படுக்கையில் மெல்ல கண்களைத் திறந்தார்.‘‘இந்த டிரைவர்தான் உங்கள் உயிரைக் காப்பாற்றியது!’’ - டாக்டர் நடந்ததை விவரமாகக் கூறி அவனை நடராஜன் முன் நிறுத்தினார்.‘‘எனக்கு உயிர் கொடுக்க டிரைவரா வந்திருக்கே...’’ - கையைத் தூக்கிக் கும்பிட்ட நடராஜன் அதிர்ச்சியில் உறைந்தார். மூன்று மாதத்திற்கு முன்பு அவர் வேலையை விட்டு நிறுத்திய கதிர்தான் அந்த டிரைவர்.
வி.சிவாஜி
|